சிறப்புக் களம்

“நீதித்துறை, நீதிபதிகள் குறித்து புத்தகம் வெளியிடப்போகிறேன்” - நீதிபதி பானுமதி பேட்டி!

“நீதித்துறை, நீதிபதிகள் குறித்து புத்தகம் வெளியிடப்போகிறேன்” - நீதிபதி பானுமதி பேட்டி!

sharpana

 “நீதித்துறை, நீதிபதிகள் குறித்து புத்தகம் வெளியிடப்போகிறேன்” –ஓய்வுபெற்ற பானுமதி ’சிறப்பு’ பேட்டி

பிரேமானந்தா வழக்கு, ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு, நிர்பாயா பாலியல் வன்புணர்வு வழக்கு என பல்வேறு முக்கிய வழக்குகளில் அதிரடித் தீர்ப்புகள் வழங்கி நாட்டையே நிமிர்ந்து பார்க்க வைத்தவர் உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி.  ’தழிகத்தின் முதல்  பெண்  உச்சநீதிமன்ற  நீதிபதி’  என்ற பெருமையைப் பெற்றவர், கடந்த ஜூலை ஓய்வு பெற்றார். தற்போது, என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது குறித்து அவரிடம் பேசினோம்,

     ”ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு டெல்லியில்தான் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதனால்தான், ஓய்வுக்குப் பிறகு டெல்லியில் வசித்து வருகிறேன். நீதிபதியாக ஓய்வு பெற்றாலும் எனது எழுத்துப் பணியில் இருந்து ஓய்வு பெறவில்லை.  ’Judiciary judges and administration of justice’ என்ற புத்தத்தை எழுதி முடித்துள்ளேன்.  நீதித்துறை மற்றும் நீதிபதிகள் தொடர்பாக எழுதப்பட்ட இப்புத்தகத்தை வரும்  செப்டம்பர் 12 -ந்தேதி  டெல்லியில் வெளியிட இருக்கிறேன். நீதித்துறை சார்ந்த இந்த புத்தகம் மட்டுமல்லாமல் மேலும் இரண்டு மூன்று புத்தகங்கள் எழுத கைவசம் உள்ளன. அதற்கான, ஒப்பந்தம் போட்டுவிட்டுத்தான்  தலைப்புகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். டெல்லியில் இருந்தே அதற்கான பணிகளையும் பார்க்கவிருக்கிறேன்.

ஓய்வுப் பெற்றதால் அரசு குடியிருப்பிலிருந்து வேறு குடியிருப்புக்கு மாறவேண்டும். அதனால், டெல்லியிலேயே வேறு வீடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  புத்தக  வெளியீட்டை முடித்தபிறகுதான் தமிழகத்திற்கு வரவேண்டும்” என்று புத்தகம் வெளியாகவிருக்கும் உற்சாகத்தில் பேசும் நீதிபதி பானுமதியியிடம்  “தர்மபுரி மாவட்டத்திலிருந்து அதிகாரம் படைத்த உச்சநீதிமன்ற நீதிபதியானது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?”  என்றோம்,

“கிராமத்திலிருந்து அதுவும் சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து நீதிபதியானது குறித்து நானே பெருமையாக சொல்லிக்கொள்ளமாட்டேன். பல துறைகளில் உயர்ந்துள்ளப் பெண்கள் பலர் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். எல்லோருமே கஷ்டப்பட்டு அவரவர்களாகத்தான் முன்னேறவேண்டும்.  குறிப்பாக, பெண்கள் மிக முக்கியமாக கடின உழைப்பும் சுய முயற்சியும் இருந்தால் எந்தத் துறையிலும் வெற்றி பெறலாம்” என்றார் தன்னம்பிக்கையூட்டும் விதமாக.  

பரபரப்பான பல்வேறு தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி பானுமதி வெளியிடப்போகும் புத்தகம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

- வினி சர்பனா