சிறப்புக் களம்

நேர்கொண்டப் பார்வை தீர்ப்புகள்! நெருக்கடிகளை கடந்து நீதியை நிலைநாட்டிய நீதிபதி பானுமதி..!

நேர்கொண்டப் பார்வை தீர்ப்புகள்! நெருக்கடிகளை கடந்து நீதியை நிலைநாட்டிய நீதிபதி பானுமதி..!

sharpana

’பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக இருந்த மாவட்டம்… கருவிலிருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா என்பதைக் கண்டறிந்து பெண் கருக்கொலை செய்யும் மாவட்டம்… தமிழகத்திலேயே அதிக பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட மாவட்டம்’ என்று பெண்கள் வளர்ச்சியில் பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தில் பிறந்து இந்தியாவின் அதிகாரமிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாகி மக்கள் நலத்தீர்ப்புகளால் நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த நீதிபதி பானுமதி, இன்று 66 வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார்!

 சமூகத்தால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் வலியையும் வேதனையையும் ஒரு ஆண் உணர்வதைவிட ஒரு பெண்ணாக இருந்து உணர்வது இன்னும் வலிமைமிக்கதாக இருக்கும். அப்படித்தான், இந்தியாவையே திரும்பிப்பார்க்கவைத்த பரபரப்பு வழக்குகளில் பெண்களின் வலியையும் வேதனையையும் உணர்ந்து மாபெரும் தீர்ப்புகளை வழங்கி நீதியை நிலைநாட்டியவர்தான்.

தமிழகத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண். உச்சநீதிமன்ற கொலிஜியம் குழுவில் பரிந்துரையின் பெயரில்தான் உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்கும். அந்தக்குழுவில், 13 ஆண்டுகளுக்குப்பிறகு  இடம்பிடித்த இரண்டாவது பெண் நீதிபதி என்ற கூடுதல் பெருமையும் இவருக்கு உண்டு. ஆனால், இந்த அடையாளங்கள் அங்கீகரங்கள் மட்டுமே நீதிபதி பானுமதிக்கு பெருமையையும் புகழையும் சேர்த்துவிடவில்லை. அவர், அளித்த மாபெரும் அநீதிகளுக்கு எதிரான தீர்ப்புகள்தான் மக்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அவரை அமரவைத்திருக்கிறது. 

நீதிப்பேரரசியின் முக்கியத் தீர்ப்புகள்!

  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதால் தமிழக அரசு, அக்கோயிலை நிர்வாகம் செய்ய அதிகாரியை நியமித்திருந்தது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த ரிட் மனு மீது, கடந்த 2009 ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதி பானுமதி, ’நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமித்தது செல்லும்’ என்று தெளிவுபடுத்தியதோடு நிர்வாக அதிகாரிக்கு ஒத்துழைப்பு தறுமாறு தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டவர். 
  • விராலிமலை அருகே ஆசிரமம் நடத்திவந்த பிரேமானந்தா மீது பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கு புதுக்கோட்டை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தபோது, பிரேமானந்தாவுக்காக ஆஜரானவர், இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மெலானி. இந்திய பிரபலங்களிலிருந்து அரசியல்வாதிகள் என பெரிய புள்ளிகளுக்கு வழக்கறிஞராக இருந்த ராம்ஜெத்மலானி, இந்த சிறிய நீதிமன்றத்தில் வந்து வாதாடினார். எல்.கே அத்வானி, அமித்ஷா, ஜெகன்மோகன் ரெட்டி, லாலுபிரசாத் யாதவ், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு உட்பட்ட அதிகாரவர்க்கத்தினருக்கு ஆஜரானவர், இதே ராம்ஜெத்மலானிதான். ஆனால், எதற்கும் அஞ்சாமல் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையையும்  67 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் நீதிபதி பானுமதி. அவர் விதித்த தண்டனையில்தான், 14 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்தே இறந்துபோனார் பிரேமானந்தா. நெருக்கடிகள் வந்த போதும், நீதிபதி பானுமதி தனது தீர்ப்புகளின் பின்வாங்கவே இல்லை.

 ஜீவஜோதி

  • கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தக்குமார் கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபாலுக்கு பூந்தமல்லி கீழமை நீதிமன்றம் விதித்த பத்தாண்டு சிறைதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தவர், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த இதே பானுமதிதான். இத்தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்றபோது ’ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள்தண்டனையை ரத்து செய்யமுடியாது’ என்று உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. சரவண பவன் ராஜகோபால் சிறைக்கு செல்வதற்குமுன்பே உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.

நிர்பயா அம்மா

  • அதேபோல், கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கில் வழக்கில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிபதி பானுமதி அமர்வுதான்.

இந்தியாவே உற்றுநோக்கிய இவ்வழக்குகளில் நேர்கொண்ட பார்வையோடு தீர்ப்பளித்தால்தான் அவர்,பெருமைக்குரியவர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி தாக்குதலில் மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது, தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள தடை விதித்தது. சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பணிமூப்பை ரத்து உத்தரவிட்டது, ஜல்லிக்கட்டு- கிடா சண்டைகளுக்கு தடைவிதித்தது. ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். அவருக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவந்த நிலையில் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தார். அப்போது, ஜாமீன் வழங்கியது நீதிபதி பானுமதி அமர்வுதான்.  

கண்டிப்பான நீதிபதி!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பல மாநில நீதிபதிகள் பணிமாறுதல் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.  இதில், மூத்த நீதிபதியான சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி, சிறிய நீதிமன்றமான மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. ’நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டி புறக்கணிக்கப்படுவதாக எதிர்ப்புக்குரல் தெரிவித்தவர்’ பானுமதி.   

 ‘தாய்மை.. முதுமை.. ஆனந்தம்’ புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.