சிறப்புக் களம்

வடமாநில தொழிலாளர்கள் மீது சோனியா காந்தி காட்டுவது அக்கறையா?  அரசியலா?

வடமாநில தொழிலாளர்கள் மீது சோனியா காந்தி காட்டுவது அக்கறையா?  அரசியலா?

webteam
வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்னையை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறாரா காங். தலைவர் சோனியா காந்தி என்ற கேள்விக்குப் பத்திரிகையாளர் ஷியாம் மற்றும் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தங்களின் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
பிழைப்புக்காக வேறு மாநிலம் சென்ற தொழிலாளர்கள் பொது முடக்கத்தால் வருமானம் இழந்து உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. ஆனால், அவர்களை இலவசமாகப்  பயணம் மேற்கொள்ள அனுமதிக்காமல், வழக்கமான கட்டணத்தை விடக் கூடுதலாக 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்குக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
 
இதனிடையே ஏழை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவரது சொந்த ஊர்களுக்குச் செல்லும் ரயில் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ்  கட்சி ஏற்கும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தி கடந்த 4 ஆம் தேதி அறிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பே தொழிலாளர்கள்தான். மாநிலங்களிலும் அரசு அவர்களுக்கு உதவி செய்ய மறுக்கும் பட்சத்தில் தொழிலாளர்கள் அவரவரது சொந்த ஊர்களுக்குச் செல்லும் ரயில் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சி ஏற்க வேண்டும். அவர்களின் தோளோடு தோள் நிற்க காங்கிரஸ் கட்சி அளிக்கும் தாழ்மையான பங்களிப்பு இது” என்றார். ஏறக்குறைய இந்த அறிக்கையின் மூலம் ’டி ஆக்டிவேட் மோட்’டிலிருந்து ’ஆக்டிவேட் மோட்’டிற்கு திரும்பி இருக்கிறார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 
 
 
கொரோனா காலகட்டங்களில் சோனியா வெளியிட்டுள்ள இரண்டு அறிக்கைகள் இதற்கு முன் கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ஏழை எளிய மக்களுக்கு 10 கிலோ உணவு தானியங்கள் வழங்குவது தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம் எழுதியதற்குப் பின் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டிருந்தார். அதேபோல் ஏப்ரல் 7 ஆம் தேதி அவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் அதிகம் கவனிப்புக்கு உள்ளானது. அதில் அவர்  “வெளிநாட்டுப் பயணத்தைக் குறைக்கலாம்” என மறைமுகமாகப் பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். மேலும் மக்களவை உறுப்பினர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்வதைவிட புதியதாகக் கட்ட உள்ள நாடாளுமன்ற கட்டிடப் பணியை நிறுத்தலாம் என்றும் பழையக் கட்டடத்தை வைத்தே சிறப்பாக செயல்படலாம் என்றும் கூறியிருந்தார்.  
 
இப்போது சோனியாவின் கருத்தை ஏற்று முதல்வர் பழனிசாமிக்குத் தமிழக காங். தலைவர்  கே.எஸ். அழகிரி, ஒரு கோடி நிதியை அளிக்க முன்வருவதாகக் கடிதம் எழுதி இருக்கிறார். எல்லாம் சரி, பிரதமரின் நிவாரண நிதிக்கும் காங். இதுவரை எந்த நிதியையும் அளித்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஏன் இந்த விஷயத்தில் மட்டும் நிதியை வழங்க முன் வந்துள்ளார் சோனியா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. 
 
 
இது குறித்து பத்திரிகையாளர் ஷியாம் என்ன சொல்கிறார் எனக் கேட்டோம். அவர், “நோய்த் தடுப்பு நிர்வாகத்தில் மத்திய, மாநில அரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் பிடிப்பை இழந்து கொண்டு வருகிறது என்பத்தைதான் சோனியா காந்தியின் அறிக்கை அடையாளப்படுத்த முற்படுகிறது. காங்கிரஸ் தமிழகத்தில் வீக் ஆக உள்ளது. ஆனால் வடநாட்டில் இன்னும் அந்தக் கட்சி பலமாகத்தான் இருக்கிறது. சில மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறார்கள்.பல மாநிலங்களில் பலமான ஓட்டு இருக்கிறது. 8 சதவீதத்திலிருந்து தொடங்கி சில மாநிலங்களில் 15 சதவீதம் வரை கூட வாக்கு வங்கி உள்ளது. ஆகவே அவர்கள் ஆக்டிவ் ஆக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மேஜர் பார்ட்னரை நம்பி உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் ஆக்டிவ் ஆக இல்லை. வெளிமாநிலத் தொழிலாளர்கள் என சோனியா மனதில் இருப்பவர்கள் வடமாநிலத் தொழிலாளர்கள்தான். ஏனென்றால் காங்கிரஸ் அங்குதான் உயிர்த்துடிப்போடு உள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்றவற்றை வைத்துத்தான் அவர் இதைச் சொல்கிறார். இது ஓட்டு அரசியலை ஒட்டியதுதான்” என்கிறார்.
 
 
ஆளும் கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் என்ன சொல்கிறார் எனக் கேட்டோம்.  அவர், “காங்கிரஸ் கட்சி அடையாளம் தெரியாமல் கழன்று கொண்டுள்ளது. ராகுல்காந்தியை அந்தக் கட்சியைக் காப்பாற்றாமல் தன் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஒரு பொறுப்பற்ற முறையில் வெளியேறிவிட்டார்.  ஆகவே அந்தக் கட்சியை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய கவலை காங்கிரஸ் தொண்டர்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் இன்று புதிய அவதாரத்தை எடுத்துள்ளார் சிதம்பரம். இவரின் ட்விட்டர் கருத்துகள், கோரிக்கைகள் எல்லாம் இந்தியா முழுவதும் பல ஊடகங்கள் மூலமாகக் கவனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு தனிமனிதருக்குக் கிடைக்கும் வெற்றி, ஒரு கட்சிக்கும் கிடைக்க வேண்டும் என்ற பிரச்னை கட்சிக்குள் எழுந்துள்ளது. அதனடிப்படையில் சோனியா எப்போது வாய்ப்புக் கிடைக்கும் என்று பார்த்தார். வெளிமாநில தொழிலாளர் பிரச்னையை தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றிருக்கிறார். நாடு முழுவதும் பெரிய பிரச்னை நிலவும் போது காங் கட்சி தன்னை அதில் அர்ப்பணித்துக் கொள்ளாமல் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு சந்தர்ப்பவாத அரசியலைச் செய்கிறார் சோனியா என்றுதான் நான்  சொல்வேன்” என்கிறார்.