நாச்சியார் படத்தின் டீசரில் ஜோதிகா பேசும் வசனம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகி வருகிறது. பெண்ணுரிமைவாதிகளும் சரி பெண்ணை அடிமையாக நினைப்பவர்களும் சரி இரண்டு பேருமே ஒரேமாதிரிக் கொதிக்கிறார்கள். அந்த வார்த்தை இதற்கு முன் பல படங்களில் வந்திருக்கிறது. கமல் பேசி ஒரு படத்தில் கைதட்டல் வாங்கி இருக்கிறார். ஆனால் இந்த முறை ஒரு பெண் பேசியதால் மேட்டர் பரபரப்பாகி விட்டது.
இப்போது இவர்களுக்கு எது பிரச்னை? அந்த வசனம் பிரச்னையா? அல்லது அதை ஜோதிகா பேசியது பிரச்னையா? ஜோதிகா பேசியதுதான் பிரச்னை. இது ஒரு நடுத்தர வர்க்க மனோபாவம்.
எளிய மக்களும் அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கும் பெண்களும் ஆண்களும் இந்த வசனத்தை சென்னையில் சர்வசாதரணமாக பேசி வருகிறார்கள். அவர்களுக்கு இது ஒரு பெண்ணை இழிவு படுத்தும் வார்த்தை என்ற இலக்கணமெல்லாம் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் ஒரு தாய் தனது சொந்த மகனைக் கூட கோபத்தில் இப்படித் திட்டுவதை நாம் பார்க்க முடியும். அப்போது அவள் தன்னைத்தானே திட்டுகிறாள் என்று நினைப்பதில்லை. ஏனெனில் இந்த வார்த்தை என்பது கோபத்தை வெளிப்படுத்த, எதிராளியைக் காயப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகத்தான் அவர்களால் பயன்படுத்தப்படுகிறதே தவிர, அதன் ஆழமான அர்த்தமெல்லாம் தெரிந்து பயன்படுத்தப்படுவதில்லை. இது ஒரு சமூக எதார்த்தம்.
ஆனால் நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் அந்த வார்த்தை சாதாரண வார்த்தையல்ல. அதிர்ச்சி. எனவே அந்த வார்த்தை ஒரு வேளை அந்தக் காவல்துறை அதிகாரி தனது கடுமையான கோபத்தைப் பிரதிபலிக்க படத்தின கதைப்படி பயன்படுத்தி இருந்தால் ஒன்றும் தப்பு இல்லை. (சென்சாரில் நிச்சயம் அதற்கு பீப்தான். அது வேறு கதை.)
மற்றொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். ஒரு பெண் அதுவும் ஜோதிகா இப்படிப் பேசலாமா? அங்கே ஜோதிகா எங்கே வந்தார்?. ஒரு போலீஸ்காரர் வந்தார். அந்தப் போலீஸ்காரராக ஒரு பெண் இருக்கிறார். அவ்வளவுதானே. அந்தக் காவல்துறை அதிகாரி வெறைப்பான சூர்யாவாக இருந்து அவர் இந்த வசனத்தைப் பேசி இருந்தால் நாம் முகம் சுழித்திருப்போமா கொண்டாடியிருப்போமா என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
போலீஸ்கார்கள் எப்போதுமே பாலாவின் படத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளாவார்கள். அவர்களின் அதிகார அத்துமீறல்கள் விமர்சிக்கப்படும். அவர்கள் கோமாளிகளாக சித்தரிக்கப்படுவார்கள். இந்தப்படத்தில் அவர் ஒரு காவல்துறை அதிகாரியை அப்படி ஒரு கொடூரமானவராக (பாலாவின் படத்தில் எல்லோருமே அப்படித்தானே என்கிறீர்களா?) காட்ட முயற்சித்திருக்கலாம். யாருக்குத் தெரியும்? எனவே கதைக்குத் தேவைப்பட்டிருக்கும் பட்சத்தில் அப்படி ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த வசனம் இருந்தால் என்ன தவறு?
அடுத்து இந்த வசனம் பரபரப்புக்காகவே டீசரில் சேர்க்கப்பட்டிருக்கும் என்கிறார்கள். இருக்கட்டுமே. யார் பரபரப்புக்காகவும் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் எதையுமே செய்யாதவர்கள்? பொதுத் தளத்தில் இயங்கும் அரசியல்வாதிகள், திரைத்துறையினர், பொருளை விற்பனை செய்பவர்கள் என்று எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் ஒரு பெரும் கூட்டத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பவர்கள்தான். வெகுஜன செல்வாக்குத்தான் அவர்களின் மூலதனம். அதுதான் வியாபாரம். அதுதான் அவர்களுக்கு எல்லாம். அதைப் பெறுவதற்கும் அதில் பேசு பொருளாய் ஆவதற்கும் எல்லோருமே அதைச் செய்யத்தான் செய்கிறார்கள். நாம் இதில் கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்றைத்தான். கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பரபரப்புக்காகவும் உண்மைக்குப் புறம்பான ஏதாவது ஒன்றைச் சொன்னால்தான் தப்பு.
ஒரு காவல்துறை அதிகாரி(அவர் பெண்ணாயிற்றே என்று மறுபடியும் கொதிக்காதீர்கள்) இப்படி ஒருவனை திட்டுவது நடக்கக் கூடியது இயல்புதானா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டபடி அந்தக் கதையில் அதற்கான அவசியம் இருந்தால் தப்பே இல்லை. எப்படியும் சென்சாருக்குப் போகப் போகிறது படம். அவர்கள் கூட அந்த வசனத்தில் உள்ள ஆத்திரம் கதைக்குத் தேவைதான் என்று அபிப்ராயப் பட்டால் வசனத்திற்கு பீப் போடுவார்களே தவிர வசனக் காட்சியையே வெட்டமாட்டார்கள். எனவே கூல்.