சிறப்புக் களம்

பொதுமுடக்கத்திலும் ‘ஜியோ’ அசுர வளர்ச்சி : எப்படி சாத்தியம் ?

பொதுமுடக்கத்திலும் ‘ஜியோ’ அசுர வளர்ச்சி : எப்படி சாத்தியம் ?

webteam

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. வீடியோ கான்ப்ரென்ஸ் மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்பாக முகேஷ் அம்பானி பேசினார். அவரது பேச்சின் அதிக நேரம் ஜியோவை பற்றி தான் இருந்தது. எண்ணெய் நிறுவனங்கள் உட்பட எத்தனையோ தொழில்களை அம்பானி செய்தாலும், ஜியோ குறித்து அவர் அதிகம் பேசுவதற்கு முக்கிய காரணம் உண்டு. ஏனென்றால் தந்தை தொடங்கிய தொழிலாக இல்லாமல், முகேஷ் அம்பானி தனது சொந்த யோசனையின் கீழ் கொண்டு வந்தது தான் ஜியோ நிறுவனம். ரிலையன்ஸின் கிளை நிறுவனமாக தொடங்கப்பட்ட ஜியோ இன்று அம்பானியை உலக அளவில் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் விலை சரிவால் சரிந்த ரிலையன்ஸ் நிறுவனத்தை மின்னல் வேகத்தில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு ஜியோ கொண்டு சென்றுள்ளது. ஃபேஸ்புக் தொடங்கி இன்று கூகுள் வரை உலகின் பெரும் பணக்கார நிறுவனங்கள் பல ஜியோவில் முதலீடுகளை வாரிக்குவித்துள்ளன. இதனால் அம்பானி உற்சாகத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். நெட்வொர்க் நிறுவமனாக மட்டும் தொடங்கப்பட்ட ஜியோ இன்று ஜியோ மார்ட், ஜியோ ஃபைபர், ஜியோ செயலி, ஜியோ போன் என நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் அம்பானியின் இந்த திடீர் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள ஜியோ குறித்து பார்ப்போம்.

ஜியோ வந்த, வளர்ந்த பாதை :

வர்த்தக ரீதியாக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது ஜியோ. ஜியோ என்ற நெட்வொர்க் நிறுவனம் அறிமுகமாவதற்கு முன்பு வரை ஆஃபர்களுக்காகவும், ரேட் கட்டர்களுக்காவும் செல்போன் வாடிக்கையாளர்கள் அலைந்து கொண்டிருந்தனர். இவற்றுடன் மெசெஜ் பேக்கேஜ்களும் தனியாக இருந்தன. ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு பின்னர் வாட்ஸ் அப் போன்ற செயலிகளால் மெசேஜ் பேக்கேஜ்கள் பயனற்றதாக மாறிவிட்டன. அதன்பின்னர் இண்டெர்நெட் டேட்டா பேக்கேஜ்களின் மவுசு அதிகரித்தது. அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன்கள் தவழ ஆரம்பித்ததால், இண்டர்நெட் டேட்டாக்கள் என்பது அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறத்தொடங்கியது. அந்த சமயங்களில் இளைஞர்களின் பெரும் தேடுதலாக இலவச வைஃபை இடங்களை கண்டுபிடிப்பதாக இருந்தது.

இதுபோல, டேட்டாக்கள் மற்றும் ரிசார்ஜ்களுக்காக வாடிக்கையாளர்கள் திரிந்துகொண்டிருந்த நேரத்தில் தான் வந்தது ஜியோ. அதுகொடுத்த ஆஃபர் அடை மழையில், கடந்த வாடிக்கையாளர்கள் டேட்டாக்கள் தட்டுப்பாடின்றி இருந்தனர். அத்துடன் ஜியோவில் டேட்டா பிளான் போட்டால் அன்லிமிடெட் போன் கால் பேசலாம் என்ற ஆஃபர் மற்ற சிம் நெட்வொர்க்குகளுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. ஒரு வாடிக்கையாளர்கள் எந்த சிம் கார்டு வைத்திருந்தாலும், இரண்டாவது சிம் கார்டாக ஜியோவை பயன்படுத்த தொடங்கினார். அத்துடன் அவர்களின் பிரைமெரி நம்பரை இன்கமிங் போன்களுக்காக மட்டுமே பயன்படுத்த தொடங்கினர்.

இதனால் குறுகிய காலத்தில் ஜியோ அசுர வளர்ச்சி அடைந்தது. 170 நாட்களில் இந்தியாவில் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற நெட்வொர்க் நிறுவனம் என்ற சாதனை அறிவிப்பை வெளியிட்டு ஜியோ கொண்டாடியது. தற்போது 30 கோடி வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனம் என ஜியோ தெரிவித்து வருகிறது. ஜியோவின் வருகை ஏர்டெல், ஏர்செல், வோடாஃபோன் ஐடியா போன்ற மற்ற நிறுவனங்களுக்கு கண்ணீர் மழையை வரவழைத்தன. ஒருகட்டத்தில் அவர்களும் படிப்படியாக இறங்கி ஆஃபர்களை வாரி வழங்கினர். இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குள் வியாபாரப் போட்டி உச்சத்தை அடைந்தது.

இருப்பினும் ஜியோ கண்ட வர்த்தக வளர்ச்சியை பிற நிறுவனங்கள் காணவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோவின் மதிப்பு மட்டுமே 10 பில்லியன் அமெரிக்க டாலரை விட அதிகமாக உயர்ந்துள்ளது. அதன் ஆண்டு வருமானம் மட்டுமே ரூ.1,148 கோடியாக உள்ளது. கடந்த காலாண்டுடன் ஜியோ மொத்தம் ரூ.18,632 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடியை முதலீடு செய்திருப்பதால் ஜியோவின் மதிப்பு மேலும் உயர்ந்திருக்கிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஜியோவின் மதிப்பு ரூ.53,124 கோடி அதிகரித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் அனைத்து நிறுவனங்களும் சரிவடைந்த நிலையில் ஜியோ மட்டும் இந்த அளவிற்கு வளர்ந்தது அனைத்து நிறுவனங்களுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணமாக அம்பானி சாரியான நேரத்தில் எடுத்த சாதுர்ய முடிவு உள்ளது.

கச்சா எண்ணெயின் விலை சரிந்தவுடன், ரிலையன்ஸின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இதனால் அம்பானி ஆசியாவில் முதல் பணக்காரர் என்ற நிலையிலிருந்து 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். தனது நிறுவனத்தின் வீழ்ச்சிப்பாதையை உணர்ந்த அம்பானி உடனே அதிரடி முடிவெடுத்தார். அமேசான், ப்ளிப் கார்ட் நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் ஜியோ மார்ட் சேவையை தொடங்கப்போவதாக அறிவித்தார். அதற்காக ஜியோவின் பங்குகளை அவர் விற்பனை செய்து, முதலீட்டை குவித்தார். அம்பானியையும், அவரது தொழில் திறமையையும், ஜியோவின் அசுர வளர்ச்சியையும் நம்பிய உலக நிறுவனங்களான ஃபேஸ்புக், கேகேஆர், அபு தாபி முதலீட்டு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்தன. அந்த வரிசையில் இன்று கூகுளும் இணைந்துள்ளது.

ஜியோவில் செய்யப்பட்ட இந்த முதலீடுகளால் மீண்டும் ஆசியாவில் முதல் பணக்காரராகவும், உலக பணக்காரர்கள் பட்டியலில் 10 இடங்களுக்குள்ளும் அம்பானி முன்னேறியுள்ளார். இந்த புத்துணர்ச்சியில் இன்று ஜியோ 5ஜி, அனைத்து ஓடிடி சேவைகளுக்கும் ஒரே பாஸ்வேர்ட் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டுயிருக்கிறார்.