சிறப்புக் களம்

திரையும் தேர்தலும் 13: ஜெயலலிதா... ஒரு வியத்தகு அத்தியாயம்!

திரையும் தேர்தலும் 13: ஜெயலலிதா... ஒரு வியத்தகு அத்தியாயம்!

webteam

கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர் தமிழகத்தை கட்டியாண்டது போலவே, கர்நாடகாவில் பிறந்த ஜெயலலிதா ஆறு முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார். 'தொடங்கிய இடம் சினிமா - முடிந்த இடம் கோட்டை' என்று சுருக்கமாக கூறலாம் இவர் கதையை. ஆனால், அதன்பின்னால் இருக்கும் உழைப்பும், அவர் பட்ட அவமானங்களும் மிக அதிகம். 'திரையும் தேர்தலும்' என்கிற கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர் இவர். வியத்தகு அத்தியாயமும் கூட.

வேதவல்லி என்கிற இயற்பெயர் கொண்ட நடிகை சந்தியா எதிர்பாராவிதமாக நடிக்க வந்தவர்தான். இவரின் ஒரே மகள் ஜெயலலிதா, சினிமாவில் தாய் நடிப்பதற்காக சென்னையில் இருந்ததால், பெங்களூரில் இருந்த தனது சித்தியின் அரவணைப்பில் வளர்ந்தார். சித்தியின் திருமணத்திற்குப் பிறகு அவர் சென்னைக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. பள்ளிப்படிப்பை முடித்த சில நாள்களிலேயே சினிமாவில் நடிக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் ஜெயலலிதா. கே.ஜெ.சரசாவிடம் முறைப்படி நடனம் பயின்றிருந்த இவர், சினிமாவுக்கு வந்து புகழ்பெற்றதில் ஆச்சரியமே இல்லை.

ஸ்ரீதர் என்கிற அற்புதமான இயக்குனரின் படத்தில் நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு. 'வெண்ணிற ஆடை' என்கிற அந்தப் படம் எந்த பெரிய நட்சத்திரங்களும் நடிக்காமல் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்று ஜெயலலிதாவை நாயகியாக நிலைநிறுத்தியது. இந்தப் படத்திற்கு பின்னர் எம்ஜிஆர் கண்களில் அகப்பட்டார் ஜெயலலிதா. 'ஆயிரத்தில் ஒருவன்' தமிழில் வெளிவந்த பிரமாண்டமான படங்களில் ஒன்று. அதில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு, அதுவும் எம்ஜிஆருக்கு இணையாக நடிக்கும் வாய்ப்பு இவ்வளவு சீக்கிரமே கிடைக்கப் பெற்றது ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது. எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவை மிகவும் பிடித்துவிட்டது என்பது அடுத்தடுத்து அவரது படங்களில் நாயகியாக அவர் நடித்ததை வைத்தே உணர்ந்து கொள்ளலாம். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 40 படங்களில் ஜோடியாக நடித்தார்கள் என்பதிலேயே அவர்களுக்கிடையே இருந்த அந்த நல்லுறவையும் நட்பையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்.

எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தபொழுது அறிமுகமானவர் ஜெயலலிதா. அதிமுக தொடங்கிய பின்னர் அவர், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகி அந்தஸ்தை இழந்தார். 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் ஜெயலலிதா நடிக்க மிகவும் விருப்பப்பட்டதாகவும், ஆனால் எம்.ஜி.ஆர் லதா, மஞ்சுளா போன்ற புதிய நாயகிகளை அறிமுகப்படுத்தி, ஜெயலலிதாவை ஓரங்கட்டியதாகவும் சொல்கிறார்கள். இதன் காரணமாக இருவருக்குமிடையில் இருந்த நட்பு சற்று விரிசல் கண்டது. எம்.ஜி.ஆர் முதல்வராக பொறுப்பேற்ற வருடம், இவரது வாழ்வில் தொடர்ச்சியான சில வேண்டத்தகாத சம்பவங்கள் நிகழத் தொடங்கின. முதலில் இவரது தாய் சந்தியாவின் மரணம் நிகழ்ந்தது. இது ஜெயலலிதாவை கடும் துயரத்தில் ஆழ்த்தியது. இதன் காரணமாக ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியது. கிட்டத்தட்ட சாவின் விளிம்பிற்கு சென்று திரும்பினார் என்று கூறுகிறார்கள்.

தனது முப்பதாவது வயதில் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார் ஜெயலலிதா. ஏகப்பட்ட குழப்பங்கள் நிரம்பிய அந்தக் காலகட்டத்தில், இவரது 'வேதா இல்லம்' என்கிற போயஸ் கார்டன் வீடு கைவிட்டு போகக்கூடிய சூழல் நிலவியபோது, எம்.ஜி.ஆர் ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டினார். இதன் காரணமாக இருவரது நட்பும் மீண்டும் துளிர்த்தது. நடிப்பை நிறுத்திய ஜெயலலிதாவை அரசியலுக்கு வரச்சொல்லி எம்.ஜி.ஆர் அழைக்க, அங்கே ஒரு புது அத்தியாயம் உருவானது.

தான் நடித்த 92 படங்களில் 85 படங்கள் வெள்ளிவிழா படங்களாக கொடுத்தவர் ஜெயலலிதா. அவர் திடீரென மொத்தமாக நடிப்பில் இருந்து விலகிப்போனது இன்றளவும் மிகப்பெரிய ஆச்சரியமே!

1980-ல் 'பில்லா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தயாரிப்பாளர் பாலாஜி, ஜெயலலிதாவை அணுகினார். ஆனால், அதை அவர் மறுத்துவிட்டார். ரஜினியே இவரோடு நடிக்க மிகுந்த விருப்பம் தெரிவித்ததாக சொல்கிறார்கள். ஆனால், அது இறுதிவரை நிகழவேயில்லை.

1981-ல் அதிகாரபூர்வமாக அதிமுக-வில் இணைந்தார் ஜெயலலிதா. அதிமுக சார்பில் நடந்த ஒரு மாநாட்டில், 'பெண்ணின் பெருமை' என்கிற தலைப்பில் இந்திரா காந்தி முன்னிலையில் இவர் ஆற்றிய கன்னி உரை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் மிகையில்லை. அப்படி ஒரு தெளிவும், அழுத்தமும் அவர் பேச்சில் இருந்ததை பலரும் குறிப்பிட்டிருக்கின்றனர். பின்னர் அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டார். பின்னர் ராஜ்யசபா எம்பி-யாக எம்.ஜி.ஆரால் பரிந்துரை செய்யப்பட்டார். 1984-ல் எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபொழுதில் நடந்த தேர்தலில், மொத்த பிரசாரத்தையும் சிறப்பாக செய்துமுடித்தார் ஜெயலலிதா. இது கட்சியில் பலருக்கு அப்போதே பிடிக்காமல் போனது. எம்.ஜி.ஆர் மறைவு இந்தப் பிரச்னைகளை பூதாகரமாக வெளிக்கொண்டு வந்தது.

அதிமுக இரண்டாக உடையும் என்று யாரும் நினைத்திருக்கவே மாட்டார்கள். ஆனால், உள்கட்சி பூசல் அதை சாத்தியப்படுத்தியது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ஒரு பிரிவாகவும், ஜெயலலிதா ஆதரவாளர்கள் தனிப்பிரிவாகவும் ஆகி, ஜானகி தலைமையில் ஆட்சியையும் அமைந்தது. ஆனால், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியை கலைத்துவிட, மீண்டும் பொதுத்தேர்தல் வந்தது. தேர்தலில் திமுக வெற்றிவாகை சூட, எதிர்க்கட்சி தலைவியாக, முதன்முதலாக ஒரு பெண் சட்டமன்றத்தில் அமர்ந்தார். 1991 சட்டமன்ற தேர்தலுக்கு சிறிது நாள்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட, தமிழகம் முழுவதும் பெரும் அனுதாப அலை ஒன்று வீசியது. அதில் வெற்றிகரமாக நீந்திய ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.

நடிகை ஒருவர் முதல்வரானார் என்கிற பேச்சே ஜெயலலிதா விஷயத்தில் சொல்லமுடியாது. தான் ஒருமுறை முதல்வரான பின்னரும் கூட திரைப்படங்களில் நடிக்க அனுமதி வாங்கியிருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், நடிப்பிலிருந்து முற்றிலும் விலகியபின்னரே அரசியலில் நுழைகிறார் ஜெயலலிதா. தமிழகம் சினிமா கவர்ச்சியில் மயங்கிக் கிடக்கிறது என்கிற வாதம் திமுக ஆட்சிக்கு வந்தபொழுது காங்கிரசால் முன்வைக்கப்பட்டது. அதே திமுக, எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபோது "சினிமா கவர்ச்சியில் மக்கள் மயங்கிவிட்டார்கள்" என்று கூறியது. ஆனால், இதை ஆழ்ந்து நோக்கினால், வெறும் சினிமா கவர்ச்சி என்பதற்குள் இதை எப்பொழுதுமே அடக்க இயலாது. அதைமீறிய ஒரு ஈர்ப்பு மக்களிடையே இவர்களுக்கு இருந்தது.

அண்ணா மறைவுக்கு பிறகு திமுகவை நோக்கி கேள்வி கேட்டார் எம்.ஜி.ஆர். ஊழல் செய்கிறார்கள் என்று பகிரங்கமாக மேடையில் பேசினார். அதை மக்கள் ரசித்தனர். காரணம், காங்கிரஸிடம் இருந்து ரட்சிக்க வந்த கட்சி என்று திமுகவை மக்கள் நினைத்துக் கொண்டிருக்க, அதில் ஊழல் என்பதை மக்கள் ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டார் வலுக்கட்டாயமாக. இயல்பிலேயே இது மக்களிடையே ஓர் அனுதாபத்தை ஏற்படுத்தியது. அதை எம்.ஜி.ஆர் அறுவடை செய்தார். அப்படிதான் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரால் சினிமாவில் வளர்ந்தவர். அதே எம்.ஜி.ஆரால் கட்சியில் உறுப்பினரானவர்.

மற்றவர்களைப்போல் அரசியல் அனுபவம் இல்லையென்றாலும் கூட, மக்களைக் கவர்வது எப்படி என்பதை அறிந்தே இருந்தார் ஜெயலலிதா. ஆனால், அதிமுக கட்சிக்குள்ளேயே ஆரம்பத்தில் இவருக்கு எதிராக நிறைய பேர் எதிராக இருந்ததும், பின்னர் எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தின்போது இவரை சொந்தக் கட்சிக்காரர்கள் அவமானப்படுத்தியதும் மக்களிடையே ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி வைத்திருந்தது. ராஜீவ் காந்தியின் மரணம் நிகழ, முதல்வர் ஆனார் ஜெயலலிதா.

ஆக, நாம் முதலிலேயே பார்த்ததுபோல் இங்கே சினிமாவில் அரசியல் இருக்கிறதோ இல்லையோ... அரசியலில் சினிமாத்தனம் நிறையவே உண்டு. ஜெயலலிதாவின் வெற்றி அதற்கு ஒரு பெரும் உதாரணம்.

திரை நீளும்...

- பால கணேசன்