சிறப்புக் களம்

"மேகதாது அணையால் மேட்டூருக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது" - ஜனகராஜ் 'அலர்ட்' பேட்டி

"மேகதாது அணையால் மேட்டூருக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது" - ஜனகராஜ் 'அலர்ட்' பேட்டி

webteam

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க மத்திய அரசை வலியுறுத்துவதை விட, காவிரி தீர்ப்பாயத்தில் முறையிடுவதே சரியான நடவடிக்கை என தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஜனகராஜ் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:

கேள்வி: மேகதாதுவில் அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

பதில்: மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு, தமிழக விவசாயிகளுக்கு பேரிடராக அமையும். காவிரி மேலாண்மை அமைத்தால் பிரச்னை தீர்ந்துவிடும் என நினைத்தோம். ஆனால் முடியவில்லை. மேகதாதுவில் கட்டப்படும் அணை மூலம் 65 டிஎம்சி நீரை சேமிக்க முடியும். இதனால் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது.

கேள்வி: மேகதாது அணை கட்டி தமிழகத்துக்கும் தண்ணீர் கொடுக்கப்படும் என்கிறார்களே?

பதில்: தமிழகத்துக்கு கொடுக்கப்பட வேண்டியே நீரே முறையாக கிடைப்பதில்லை. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கப்படும் எனக்கூறுவது ஏமாற்று வேலை.
தமிழ்நாட்டுக்கு தங்கு தடையின்றி நீர் கிடைக்க வேண்டுமென்பதே உச்சநீதிமன்ற உத்தரவு. ஆனால் அங்கு தங்கு தடையை ஏன் உருவாக்குகிறார்கள்.

கேள்வி: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சரியான வழியில் செல்கிறதா?

பதில்: மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா விவசாயம் கடுமையாக பாதிக்கும். ஒன்றிய அரசை வலியுறுத்துவது சரியான வழி அல்ல. தமிழ்நாடு அரசு காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திடம்தான் முறையிட வேண்டும். தமிழக அரசு முறையிட வேண்டிய இடம் உச்சநீதிமன்றமே. உச்சநீதிமன்றம்தான் தீர்ப்பு சொல்லியிருக்கு. எந்தவித கட்டுமானமும் கூடாது என தீர்ப்பளித்துள்ளது. அதை மீறும் செயலில் கர்நாடகா இறங்கியுள்ளது. இது சட்டவிரோதமானது. கர்நாடகாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்ற உத்தரவை எள்ளி நகையாடுவதாக உள்ளது.

கேள்வி: அணை கட்ட அனைத்து உரிமைகளும் உள்ளது என கர்நாடக சொல்ல என்ன காரணம்?

பதில்: எவ்வித காரணமும் இல்லை. மார்கண்டேய நதியில் அணை கட்டியிருக்கிறார்கள். அதை சட்டப்படி கட்டியுள்ளார்களா? மார்கண்டேய நதியில் கட்டப்பட்ட அணையை இடிக்க வேண்டும்.

கேள்வி: இது சட்டவிரோதமானது எனும்போது இதற்கு மத்திய அரசு எப்படி அனுமதி அளித்தது?

பதில்: கர்நாடகாவின் சட்ட வரைவுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது தவறு. சட்ட வரைவை அவர்கள் திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். சட்டப்படி பார்த்தால் தமிழ்நாட்டை கேட்காமல் அணை கட்டக்கூடாது.

கேள்வி: தீர்ப்பாயத்தின் செயல்பாடுகள் எப்படி போகுது? சரியான பாதையில் செயல்படுகிறதா?

பதில்: கடந்த அதிமுக அரசு நதிநீர் பிரச்னையை கண்டுகொள்ளவில்லை. வறட்சி காலங்களில் வரவேண்டிய தண்ணீரை கேட்டு பெறவில்லை. கடந்த ஆண்டு கூட நமக்கு வரவேண்டிய நீர் வரவில்லை. நாம் சரியாக முறையிடவில்லை. தமிழ்நாடு நீர்வளத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. மழை நீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் சேமிக்க வேண்டும்.