சிறப்புக் களம்

இது ஜல்லிக்கட்டு டிரெண்ட்: அதிகரிக்கும் மாடுபிடி கதைகள்!

இது ஜல்லிக்கட்டு டிரெண்ட்: அதிகரிக்கும் மாடுபிடி கதைகள்!

webteam

தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு டிரெண்ட் வந்து ஆட்டிப்படைக்கும். சமீபகாலம் வரை பேய்ப் படங்கள் வந்து பயங்காட்டிக் கொண்டிருந்தது. இடையே பிளாக் காமெடி வகைப்படங்களும் வந்து போயின. நல்ல பேய்ப் படங்கள் வசூலில் சாதனை படைத்ததாலும் சுமாராக இருந்தால் கூட மினிமம் கேரண்டி இருந்ததாலும் அந்த வகைப்படங்கள் அதிகரித்தன. ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 2’. சுந்தர்.சியின் அரண்மனை படங்கள் இதற்கு உதாரணம்.

பேய்ப்படங்கள் பயங்காட்டி ஓய்ந்துவிட்டதால் அடுத்ததாக ஜல்லிக்கட்டு படங்கள் வரிசைக் கட்டுகின்றன. கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக, தமிழகமே கொதித்து எழுந்தது. மெரீனாவில் கூடி தங்கள் எதிர்ப்பை தமிழர்கள் பலமாகவே காட்டினர். இந்த மெரினா கூடல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டு நமது உரிமை என்ற எண்ணம் எங்கும் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த டிரெண்டை கட்டியாகப் பிடித்துக்கொண்ட தமிழ் சினிமா, இப்போது அது தொடர்பான படங்களை
உருவாக்கி வருகிறது. 

ஜனவரி மெரினா கூடலை மையமாக வைத்து, ’ஜல்லிக்கட்டு’ என்ற படத்தை சந்தோஷ் என்பவர் இயக்கி உள்ளார். இயக்குனர் அமீர், ஆர்யா நடிப்பில் ’சந்தனத்தேவன்’ படத்தை இயக்குகிறார். மதுரையைக் கதைக் களமாகக் கொண்ட இந்தப் படம் ஜல்லிக்கட்டு கதையை மையமாகக் கொண்டது. ஆர்யாவின் தம்பி சத்யாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

’ரேனிகுண்டா’ பன்னீர் செல்வம் இயக்கும் ’கருப்பன்’ படம் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டது. இதில் விஜய் சேதுபதி, மாடுபிடி வீரனாக நடிக்கிறார். தன்யா ஹீரோயின். பாபி சிம்ஹா, கிஷோர், பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. 

விஜய் 3 வேடத்தில் நடிக்கும் மெர்சல் படத்தில் ஜல்லிக்கட்டுக்கு முக்கிய இடம் இருக்கிறது என்கிற படக்குழு. 

விஜய்காந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் ’மதுர வீரன்’ படம் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டது. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கி இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இளமி, பார்க்கணும் போல இருக்கு படங்களில் ஜல்லிக்கட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.