சிறப்புக் களம்

பத்தாண்டு காலமாக தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்.... கடந்துவந்த பாதை..!

பத்தாண்டு காலமாக தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்.... கடந்துவந்த பாதை..!

webteam

ஜல்லிக்கட்டு குறித்த சட்டப்போராட்டம் ஏறக்குறைய பத்தாண்டுகாலமாக நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான சிக்கல் தொடங்கியது முதல் சட்ட போராட்டம் வரையில் நடைபெற்றவைகளை தெரிந்து கொள்வோம்.

2006: ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரி அலங்காநல்லூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றக் கிளை ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

2007 மார்ச்: விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் பல்வேறு நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

2008: பாரதிய ஜனதாவை சேர்ந்த மேனகா காந்தி தொடர்ந்த வழக்கில், ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. ஒருசில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

2009: ஜல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள சிக்கலை எதிர்கொள்ள “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. இந்நிலையில், தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, முறையீடு செய்தது. விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்தது.

2011: பல நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

2011 ஏப்ரல்: விலங்குகளை மையமாக வைத்து நடத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் ‘பீட்டா’ அமைப்பு மேலும் ஒரு மனு தாக்கல் செய்தது.

2011 ஜூலை: மிருகவதைச்சட்டம் 1960ன் கீழ், சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, குரங்கு போன்ற விலங்குகளை காட்சிப்படுத்துதலை மத்திய அரசு தடைச்செய்தது. அதில் 6-வதாக, காளையை சேர்த்தது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு. இதை எதிர்த்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர்.

2012 ஜனவரி: பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தன.

2013 ஜனவரி: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை இல்லை என்றும், போட்டிகளை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2014 பிப்ரவரி: ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை கோரி, விலங்குகள் நல வாரியம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

2014 மே மாதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. காட்சிப்படுத்தும் பட்டியலில் மாற்றமோ, திருத்தமோ செய்ய விரும்பினால் விலங்குகள் நல வாரியத்தை ஆலோசிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.

2014 மே 19: தமிழக அரசு சார்பில், ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்க கோரி, மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

2016 ஜன.8: உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, காளைகளுக்கு துன்புறுத்தல் ஏற்படாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வழிவகை செய்யும் வகையில் மத்திய பாரதிய ஜனதா அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது.

2016 டிசம்பர் 7 - மத்திய அரசின் அரசாணையை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் அரசாணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். அது தொடர்பான அனைத்துத்தரப்பு வாதங்களும் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.