கேரள தேர்தல் வரலாற்றில், 25 ஆண்டுகளுக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் நூர்பினா ரஷித்.
ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறவுள்ள 140 தொகுதிகளுக்கான கேரள சட்டமன்றத் தேர்தல் சிபிஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணிக்கு இடையே ஒரு முக்கியமான போராட்டமாக அமைந்துள்ளது. மாநிலத்தில் இரு கட்சிகளும்தான் இதுவரை மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால், இந்த முறை தேர்தல் களம் ஒவ்வொரு கட்சிக்கும் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யு.டி.எஃப்) இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இந்த முறை 27 இடங்களில் போட்டியிட உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது சறுக்கலை காங்கிரஸ் சந்தித்தாலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலுவாக உள்ள இடங்களில் காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றது. இதனால், காங்கிரஸ் கூட்டணியில் நீண்ட நெடுங்காலமாக இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இந்தத் தேர்தலில் முக்கியவதும் பெற்றுள்ளது.
இந்நிலையில், 27 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி முதல்கட்டமாக 25 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் பெண் ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. நூர்பினா ரஷித் எனும் பெண்தான் அவர். கோழிக்கோடு தெற்கு தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட இருக்கிறார் அவர். இதன்மூலம் 25 ஆண்டுகளுக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் இவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.
கடைசியான 1996-ம் ஆண்டு கமருன்ஷா அன்வர் என்ற பெண் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அதன்பின் 25 ஆண்டுகளுக்குப் பின் தற்போதுதான் பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தனக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து பேசியுள்ள நூர்பினா ரஷித், "25 ஆண்டுகளுக்கு பின் பெண்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. மக்களுக்கு சேவை செய்யத் தயாராக இருக்கிறேன். மாநிலத்தில் விளிம்பு நிலை பெண்களின் பிரச்சினைகளை முன்வைத்து செயல்படுவேன்" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மற்றொரு இஸ்லாமிய கட்சியான ஐயுஎம்எல் கட்சியும் முதல் முறையாக ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக முக்கியவதும் கொடுத்த ஆளும் மார்க்சிஸ்ட் தரப்பு சட்டமன்றத் தேர்தலில் 2 பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில், அந்தக் கட்சியில் பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.