சிறப்புக் களம்

அம்மா மானிய விலை இருசக்கர வாகன திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லையா? உண்மை என்ன?

அம்மா மானிய விலை இருசக்கர வாகன திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லையா? உண்மை என்ன?

Veeramani

அம்மா மானிய விலை இருசக்கர வாகன திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்று சட்டசபையில் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் பெரிய கருப்பன். உண்மையிலேயே இந்த திட்டத்திற்கு வரவேற்பு இல்லையா? என்பது பற்றிய தொகுப்பு

அம்மா மானியவிலை இருசக்கர வாகன திட்டம்:

2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிபுரியும் பெண்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் இருசக்கர வாகன விலையில் 50% சதவீதம் அல்லது 25 ஆயிரம் ரூபாய், இதில் எது குறைவாக உள்ளதோ அந்த தொகை பயனாளிகளுக்கு மானியமாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பம், வாகன விலை மேற்கோள், விண்ணப்பதாரரின் ஆவணங்கள் இணைத்து முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு, விண்ணப்பித்த பெண்ணின் பெயரில் வாகனத்தை வாங்கி அதற்கான ஆவணத்தை சமர்ப்பித்தால், மானியத்தொகை விண்ணப்பதாரரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பெண்கள் மட்டுமே பலனடைய முடியும்.

இந்த திட்டம் மூலமாக தமிழகம் முழுவதும் இதுவரை ஆயிரக்கணக்கான பெண்கள் பலனடைந்துள்ளனர். இந்த சூழலில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இந்த திட்டம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்து வந்தது.

மானியவிலை இருசக்கர வாகன திட்டத்திற்கு வரவேற்பு இல்லையா?

இந்த திட்டம் பற்றி நேற்று சட்டசபையில் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  "பணிக்குச் செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்தனர். ஆனால், அந்த திட்டம் குறித்து பட்ஜெட்டில் எந்தவொரு தகவலும் இல்லை" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், " திமுகவின் தேர்தல் அறிக்கையின்படி ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கும் வகையிலான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பெண்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மானிய விலை இருசக்கர வாகன திட்டத்திற்குப் பெரியளவில் வரவேற்பு இல்லை. மானிய விலை இருசக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பங்கள் எதுவும் வரவில்லை” என்று குறிப்பிட்டார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு காரணமாக இந்த திட்டம் இனி செயல்படுத்தப்பட வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. உண்மையிலேயே இந்த திட்டத்திற்கு வரவேற்பு எப்படி உள்ளது என்பது பற்றி இந்த திட்டத்தால் பயனடைந்த பயனாளி காயத்ரி என்பவர் பேசுகையில், “ நான் ஒரு கல்லூரியில் அலுவலகப்பணியாளராக வேலை பார்க்கிறேன். கல்லூரி செல்வதற்கு வசதியாக இரு ஆண்டுகளுக்கு முன்பு மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்திற்கு விண்ணப்பித்து வாகனம் வாங்கினேன், 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. இந்த திட்டம் பயனுள்ளதாகவே இருந்தது, என்னுடன் பணியாற்றும் பலரும் இத்திட்டத்தால் பலனடைந்தார்கள்” என தெரிவித்தார்.

இந்த திட்டம் குறித்து பேசிய சமூக செயற்பாட்டாளர் ராம்குமார், “இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூபாய் 25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. தற்போது இரு சக்கர வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதால் ஒரு ஸ்கூட்டரின் விலை 75 ஆயிரம் முதல் ஒரு இலட்ச ரூபாயாக உள்ளது. அதனால் சாமனிய மக்களால் இந்த திட்டத்தில் பயனடைய முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால் தேர்தலுக்கு முன்புகூட இந்த திட்டத்திற்காக ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். தற்போது பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் கூட இந்த திட்டத்தில் பெண்களுக்கு ஆர்வமின்றி இருக்கலாம். மேலும், கொரோனா இரண்டு ஆண்டுகளாக மக்களை வதைத்து வருகிறது. இச்சூழலில் நிறைய பெண்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். மக்களின் அன்றாட தேவைகளுக்கே அல்லாடும் தற்போதைய சூழலில், இந்த திட்டத்திற்கு வரவேற்பு இல்லை என அமைச்சர் சொல்வது நியாயம் இல்லை. தற்போது அமைச்சரின் பேச்சு என்பது இந்த திட்டம் இனி நடைமுறைப்படுத்தப்படாது என்ற ரீதியில்தான் சொல்லப்படுகிறது. பேருந்தில் பெண்கள் செல்வதால் இந்த திட்டம் தேவையற்றது என்பது போல அமைச்சர் சொல்கிறார். பேருந்துகள் செல்லாத இடங்கள் நிறைய உள்ளது, அங்கு பணியாற்றும் பெண்களுக்கு மட்டுமாவது இந்த திட்டத்தை செயல்படுத்தலாம். முறைகேடுகள் இன்றி சரியான பயனாளிகளுக்கு சேரும் வகையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்” என்கிறார்