சிறப்புக் களம்

கொரோனா காலத்தில் உயிரியியல் பூங்காக்களின் தற்போதைய நிலை என்ன? விரிவான அலசல்

கொரோனா காலத்தில் உயிரியியல் பூங்காக்களின் தற்போதைய நிலை என்ன? விரிவான அலசல்

webteam

கொரோனாத் தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டுள்ளன. பொதுமுடக்கத்தால் அரசாங்கம் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்திருக்கும் இவ்வேளையில் வனவிலங்கு அதிகாரிகள் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தை எப்படி கையாள்கிறார்கள், பூங்காவிற்கு தேவையான நிதி அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கிறதா, பார்வையாளர்கள் பூங்காவிற்கு வராதது என்ன விதமான நெருக்கடியை தந்திருக்கிறது, விலங்குகளிடம் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்துள்ளாதா என்பதைத் தெரிந்து கொள்ள சென்னை வண்டலூர் பூங்கா, கோவை வசுசி உயிரியியல் பூங்கா, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். 

அவர்கள் அளித்த விளக்கங்கள் பின்வருமாறு

வண்டலூர் பூங்கா அதிகாரி கூறும் போது “கடந்த வருடம் பூங்காவில் கிடைத்த வருவாய் மூலம் சமாளித்து வருகிறோம். இருப்பினும் அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்கு போதுமான நிதி கிடைக்கிறது. பார்வையாளர்கள் இல்லாதது பூங்காவிற்கு வரும் வருவாயை மட்டுமே பாதித்துள்ளது. இந்தக் காலத்தை நாங்கள் பூங்காவை மேலும் பசுமையாக்க பயன்படுத்தி வருகிறோம். வழக்கம் போல் பணியாளர்கள் பூங்காவிற்கு வருகைத்தந்து பணிகளை கவனித்து வருகின்றனர்.குறிப்பாக ஆன்லைன் மூலமாக பூங்காவை சுற்றிபார்த்தல் உள்ளிட்ட இதர சேவைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது”என்றார்

கோவையில் உள்ள வசுசி பூங்காவின் நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள கோவை மாநகராட்சி ஆணையர் திரு சவன் குமார் ஜடாவத் ஐஏஎஸ் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது “ அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டிய நிதியானது எப்போதும் போல வந்துக் கொண்டிருக்கிறது. தற்போது பூங்காவிற்கான செலவுகளும் பெரிதாக இல்லை. ஒரே செலவு விலங்குகளுக்கான உணவுத் தேவை மட்டும் தான். அது பூர்த்தியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. மக்கள் பூங்காவிற்கு வராதது பூங்காவிற்கு வரக் கூடிய வருமானத்தை கடுமையாக பாதித்துள்ளது. மக்கள் வராதது விலங்குகளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.எப்போதும் போல அவை வாழ்ந்து வருகின்றன” என்றார்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள களக்காடு சுற்றுச்சூழல் மேம்பாட்டு அலுவலர் M.G.கணேஷன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் நம்மிடம் கூறியதாவது “ அரசு விலங்குகளின் பாதுகாப்புக்குத் தேவையான நிதியை சரிவர அளித்துக்கொண்டிருக்கிறது. இதில் சில குறிப்பிட்ட பிரேத்யக பயிற்சிகளான நிதியை மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. ஊரடங்கு காலத்தில் வாகனப் போக்குவரத்து பெரிதாக இல்லாததால் விலங்குகள் சாலைகளில் சுற்றி வருகின்றன. அவற்றின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. மேலும் இது மழைக்காலம் என்பதால் பார்க்கவே அரிதான விலங்குகளையும், தாவரங்களையும் எங்களால் பார்க்க முடிகிறது.

முண்டந்துறையைப் பொருத்தவரை காட்டின் பெரும்பான்மையான பாதுகாப்பு அங்கு வாழும் மலைவாழ் மக்களின் கையில் உள்ளது. அதனால் அவர்களிடம் இருந்து விலங்குகளுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் இருந்தது. அதனால் அவர்களின் மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தெருநாடங்களை நடத்தினோம். இந்தத் தெருநாடகங்கள் மூலம்  அவர்கள் கொரோனாத் தொற்று குறித்து முழுவதுமாகத் தெரிந்து கொண்டு, சமூக இடைவெளியுடன் பணிகளை ஆற்றி வருகின்றனர். அவர்களால் காட்டில் வாழும் விலங்குகளும் பாதுகாப்பாக இருக்கின்றன” என்றார்.

 - கல்யாணி பாண்டியன்