பிறந்த ஐந்து நாள் ஆனபோது, கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்ட அயர்லாந்து நாட்டு பெண், உடல் உறுப்பு தான விழிப்புணர்வில் தங்களது குடும்பமே ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து நாட்டை சேர்ந்த, பிறந்து 5 நாள் ஆன பெண் குழந்தைக்கு 1997ல் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் முகமது ரீலா என்பவரால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அயர்லாந்தில் சட்டம் பயின்று வரும் ஃபென்னா, உடல் உறுப்பு தானத்தின் அவசியம் குறித்து தனது குடும்பமே விழிப்புணர்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
20 வருடத்திற்கு பின் இந்தியா வந்துள்ள ஃபென்னா மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது வரை எந்த உடல்நல கோளாறும் இல்லாமல் ஃபென்னா நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழக மருத்துவர் மூலம் தனது மகளுக்கு மறுவாழ்வு கிடைத்ததும், தற்போது தமிழகத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி என்றும் ஃபென்னா தாய் ஈஷா தெரிவித்துள்ளார்.
உறுப்பு மாற்று சிகிச்சையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகத்தின் சார்பில் ஃபென்னாவிற்கு நினைவு பரிசினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் வழங்கி வாழ்த்தினார். மேலும் ஃபென்னா உடல்நலத்துடன் இருப்பதை பார்ப்பதன் மூலம் மக்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சையில் நம்புக்கையும் விழுப்புணர்வும் ஏற்படும் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.