சிறப்புக் களம்

ஐபிஎல் மெகா ஏலத்தில் விலைபோகாத வீரர்கள்: சுரேஷ் ரெய்னா முதல் கேதார் ஜாதவ் வரை!

ஐபிஎல் மெகா ஏலத்தில் விலைபோகாத வீரர்கள்: சுரேஷ் ரெய்னா முதல் கேதார் ஜாதவ் வரை!

EllusamyKarthik

பெங்களூர் நகரில் எதிர்வரும் 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் இரண்டு நாட்கள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. சுமார் 590 வீரர்கள் இந்த ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்திருந்தனர். அதில் 204 வீரர்களை மட்டுமே பத்து அணிகளும் சேர்ந்து வாங்கியுள்ளன. இந்த முறை அனுபவ வீரர்களை காட்டிலும் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு அதிக டிமாண்ட் இருந்ததை பார்க்க முடிந்தது. 

அதன் காரணமாக ஐபிஎல் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட் களத்தில் பாட்ஷா படத்தில் வரும் ரஜினியை போல வீறு நடை போட்டு வரும் மற்றும் நடை போட்ட முன்னாள் வீரர்கள் கூட ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. அது அந்த வீரர்கள் உட்பட கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

சுரேஷ் ரெய்னா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘சின்ன தல’, ‘மிஸ்டர் ஐபிஎல்’ என போற்றப்படுபவர் சுரேஷ் ரெய்னா. 2008 முதல் சென்னை அணியில் விளையாடி வருகிறார். தோனி படையின் தளபதியாக திகழ்ந்தவர். இடையில் 2016 மற்றும் 17 சீசனில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். மொத்தம் 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5528 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் களத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் ஒருவர். இருந்தாலும் அவரை ஏலத்தில் சென்னை உட்பட எந்த அணியும் எடுக்கவில்லை. அவரது அடிப்படை விலை 2 கோடி ரூபாயாகும். கடந்த சீசனில் 11 இன்னிங்ஸ் விளையாடி மொத்தம் 160 ரன்களை மட்டுமே அவர் எடுத்திருந்தார். 2020 வாக்கில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடாத காரணத்தால் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வராமல் போயிருக்கலாம் என சொல்லப்படுகிறது. அசத்தலான ஃபீல்டர், பார்ட் டைம் ஸ்பின்னர் என களத்தில் ஆல்-ரவுண்ட் பர்ஃபாமென்ஸ் காட்டுபவர் சுரேஷ் ரெய்னா. நிச்சயம் ரெய்னா மட்டுமல்லாது சென்னை அணி ரசிகர்களும் அவரை இந்த சீசனில் மிஸ் செய்வார்கள். 

ஸ்டீவ் ஸ்மித்!

மாடர்ன் டே கிரிக்கெட்டின் ‘FAB 4’-களில் ஒருவர் ஆஸ்திரேலிய நாட்டின் ஸ்டீவ் ஸ்மித். 2012 முதல் ஐபிஎல் களத்தில் விளையாடி வருகிறார். பல்வேறு ஃப்ரான்சைஸ் அணிகளுக்கு அவர் விளையாடி உள்ளார். 103 போட்டிகளில் 2485 ரன்கள் எடுத்துள்ளார். இருந்தாலும் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. கடந்த சீசனில் டெல்லி அணிக்காக அவர் விளையாடினார். 

ஷகிப்-அல்-ஹசன்!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆல்-ரவுண்டர் வங்கதேசத்தை சேர்ந்த ஷகிப்-அல்-ஹசன். 2011 முதல் ஐபிஎல் களத்தில் விளையாடி வருகிறார். மொத்தம் 71 ஆட்டங்கள் விளையாடி 793 ரன்கள் மற்றும் 63 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது அடிப்படை விலை 2 கோடி ரூபாய். இருந்தாலும் எந்த அணியும் அவரை பிக் செய்யவில்லை. வங்கதேச கிரிக்கெட் அணி இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெற உள்ள காலத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளன. அதனால் அவரை எந்த அணியும் வாங்க முன்வராமல் போயிருக்காலம். 

டேவிட் மலான்!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5-வது இடத்தில் உள்ள பேட்ஸ்மேன், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டேவிட் மலான். கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி மலானை ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால் இந்த முறை அவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. 

இயன் மோர்கன்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் இயன் மோர்கன். கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியை கேப்டனாக வழிநடத்தியவர். 2019 50-ஓவர் உலகக் கோப்பையை இங்கிலாந்து அணிக்கு வென்று கொடுத்தவர். இருந்தாலும் இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. கேப்டனாக சிறப்பாக தனது பணியை செய்பவர் மோர்கன். இருந்தாலும் அவரது பேட்டிங் ஃபார்ம் காரணமாக அவர் ஏலத்தில் எடுக்கப்படாமல் போயிருக்கலாம். இதே போல ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சையும் எந்த அணியும் வாங்கவில்லை. 

கேதார் ஜாதவ்!

2010 முதல் ஐபிஎல் களத்தில் விளையாடி வந்தவர் கேதார் ஜாதவ். 2018 டூ 2020 சீசன் வரை சென்னை அணிக்காக அவர் விளையாடினார். 2018 சீசனில் சென்னை அணியின் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற செய்தவர். அதன் பிறகு அவரது பர்ஃபாமென்ஸ் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. கடந்த சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடியவர் இருந்தார். 

இவர்களை போலவே இஷாந்த் ஷர்மா, அமித் மிஷ்ரா, புஜாரா மாதிரியான வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.