13-ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஒருவழியாக இந்தாண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. இந்தாண்டு தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை கூட இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஐபிஎல் ஜுரம் தொற்றிக்கொண்டது. ஐபிஎல் விளையாடும் 8 அணிகளுக்குமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கடந்த முறை போலவே இம்முறையும் தினேஷ் கார்த்திக் தலைமையில் களம் காண்கிறது கேகேஆர்.
அந்த வகையில் இரண்டு முறை கோப்பையை வென்ற அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்பதற்காகவே தங்கள் அணியை அமைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்காக எவ்வளவு தொகையை ஏலத்தில் செலவழித்தாலும் பரவாயில்லை என்று நினைத்த கொல்கத்தா அணி நிர்வாகம், தாங்கள் நினைத்த ஆஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸை ரூ.15.50 கோடி கொடுத்து வாங்கியது. ஏலத்தில் பட் கம்மின்ஸ்க்காக போட்டியிட்ட டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. மற்ற அணிகளும் இந்த தொகையைக் கண்டு வியந்தன. 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஒரு வீரர் அதிக தொகைக்கு வாங்கப்பட்டது இது தான்.
பட் கம்மின்ஸ் இத்தனை கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட காரணம் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 25 போட்டிகளில் விளையாடிய அவர் 32 விக்கெட்டுகளை சாய்த்ததுடன், ஒரு ஓவருக்கு 6 ரன்கள் என ரன் ரேட்டை வைத்துக்கொண்டது தான். பட் கம்மின்ஸ் மட்டுமின்றி இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கனையும் கொல்கத்தா அணி ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அத்துடன் வருண் சக்கரவர்த்தி (ரூ.4 கோடி), டாம் பாண்டான் உட்பட 9 பேரை கொல்கத்தா அணி வாங்கியது.
இதுதவிர தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரிவ் ரஸல், சுனில் நரைன், குல்தீப் யாதவ், சுப்மான் கில், லக்கி ஃபர்கியூசன், நிதிஷ் ரானா, சந்தீப் வாரியர், ஹாரி குர்னே, பரிசுத் கிருஷ்ணா உள்ளிட்ட 14 வீரர்களையும் அந்த அணி மறு ஒப்பந்தம் செய்து தக்க வைத்துக்கொண்டது. இதன்மூலம் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மொத்தம் 23 வீரர்கள் உள்ளனர். இந்த 23 வீரர்களில் தரமான 11 பேரை தேர்வு செய்து ஒரு வலுவான அணியை அமைக்கும் முயற்சியில் அந்த கொல்கத்தா அணி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்தார். ஆனால் தற்போது இயான் மார்கன் அணிக்குள் வந்திருப்பதால் கேப்டன்ஷிப் தேர்வில் மாற்றம் இருக்கலாம் எனப்படுகிறது.
கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்புப்படி, கொல்கத்தா அணியில் ஆண்ட்ரிவ் ரஸல், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், நிதிஷ் ரானா, சுப்மான் கில், சுனில் நரைன், பட் கம்மின்ஸ், இயான் மார்கன், லக்கி ஃபர்கியூசன், பரிசத் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது. இவர்களுடன் மேலும் ஒரு ஆல்ரவுண்டர் அல்லது பவுலரை அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது. அது சந்தீப் சர்மாவாக இருக்கலாம். இந்த அணியை பொருத்தவரையில் பேட்டிங்கில் சுப்மான் கில், இயான் மார்கன், தினேஷ் கார்த்திக், நிதிஷ் ரானா, ஆண்ட்ரிவ் ரஸல், சுனில் நரைன் இருக்கின்றனர்.
இதில் ரஸல் மற்றும் நரைன் ஆல்ரவுண்டர்கள் என்பதால் அவர்கள் விக்கெட்டுகளையும் சாய்ப்பார்கள் என எதிர்பார்க்கலாம். ரஸலின் திடீர் விஸ்வரூபம் எப்பேற்பட்ட அணியையும் நிலைகுலையச் செய்துவிடும். பவுலிங்கில் பட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ் பலமாக இருக்கலாம். அதே சமயம் கடந்த ஐபிஎல் போட்டியில் பரிசத் கிருஷ்ணா பந்துவீச்சும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 18 போட்டிகளில் பங்கேற்ற அவர் 14 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். எனவே சிறந்த கேப்டன்ஷிப் அமைந்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சவலான அணியாக அமையலம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.