கொரோனாவுக்கு எதிரான மனித குலத்தின் போராட்டத்தில் முன்கள பணியாளர்களாக முன்நிற்கும் செவிலியர்களின் சேவையை போற்றும் தினமாக இன்று சர்வதேச செலவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. தன்னலம் கருதாமல் களத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மே 12-ம் தேதி, சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. செவிலியர்கள் சேவையை போற்றும் வகையில், சர்வதேச செவிலியர் கவுன்சில் அமைப்பு, 1965-ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச செவிலியர் தினத்தை கொண்டாடியது.
1974-ம் ஆண்டில் இருந்து மே 12-ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மனிதகுலத்தின் நம்பிக்கை நாயகிகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்த செவிலியர் நட்சத்திரம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினம் மே 12 என்பது குறிப்பிடத்தக்கது. நைட்டிங்கேல் புகழ்பெற்ற செவிலியராக விளங்கியதோடு, மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியாகவும், புள்ளியியல் அறிஞராகவும் விளங்கினார்.
மோசமான பாதிப்பை ஏற்படுத்திய கிரிமியன் போரில், காயம் அடைந்தவர்களுக்கு அவர் இரவு பகல் பாராமல் சிகிச்சை அளித்த காரணத்தினால், அவர் செவிலியர் தேவதையாக கொண்டாடப்படுகிறார். இந்தப் போரின்போது அவர் கடைப்பிடித்த நோயாளிகள் பராமரிப்பு சார்ந்த வழிமுறைகளும், நெறிமுறைகளும் இன்றளவும் மருத்துவ உலகால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. செவிலியர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் அவர் முன்னோடியாக விளங்கினார். அவரது தன்னலமற்ற சேவை காரணமாக, செவிலியர் பணி மிகுந்த மதிப்புடன் பார்க்கப்படும் நிலை உண்டானது. 1860 அவர் லண்டனில், செவிலியர் பயிற்சி பள்ளியை நிறுவினார்.
கிரிமியன் போரில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனையில் கையில் விளக்குடன் வலம் வந்து அவர் சேவை அளித்ததற்காக கைவிளக்கு ஏந்திய காரிகை என்றும் போற்றப்படுகிறார். நைட்டிங்கேல் காட்டிய பாதையில் தொடர்ந்து செவிலியர்கள் மனித வடிவிலான தேவதைகளாக மருத்துவமனைகளில் சேவை ஆற்றி வருகின்றனர்.
உலகை கொரோனா கிருமி ஓராண்டுக்கும் மேலாக உலுக்கி எடுத்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் செவிலியர்கள் முன்கள பணியாளர்களாக செயலாற்றி வருகின்றனர். செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களின் தன்னலமற்றை சேவைக்கு தலைவணங்கும் வகையில் சர்வதேச செவிலியர் தினத்தை கொண்டாடுவோம்.
#InternationalNursesDay என்ற ஹேஷ்டேகுடன் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் நன்றியோடு செவிலியர்களைப் போற்றி வருவதையும் காணலாம்.