மூன்றாம் நபர் நலன் கருதி, செப்டம்பர் 1 (நாளை) முதல் விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கு ‘பம்பர் டூ பம்பர்’ முறையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்யும் முறை கட்டாயமாகிறது. இந்தக் காப்பீடு குறித்த முழுத் தகவல்களை இங்கே விளக்குகிறார் காப்பீட்டு ஆலோசகரான சங்கர் நீதிமாணிக்கம்.
''மோட்டார் வண்டிகளுக்கான காப்பீடு என்பது விபத்தால், தீயால் அந்த வண்டி சேதம் அடைந்தாலோ அல்லது களவு போனாலோ அதற்கு காப்பீடு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விகிதத்தில் காப்பீடு நிறுவனம் வண்டியின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கும். இது சொந்த சேதத்திற்கான இழப்பீடு எனப்படும் விரிவான காப்பீடு (Own damage claim policy) ஆகும்.
அதேநேரத்தில், மோட்டார் வண்டி விபத்தில் அந்த வண்டியுடன் தொடர்பில்லாத மூன்றாம் நபர் காயம் அடைந்தாலோ அல்லது அவருக்கு இறப்பு நேர்ந்தாலோ, மூன்றாம் நபரின் வண்டி சேதம் அடைந்தாலோ, சொத்துகள் சேதம் அடைந்தாலோ தரும் இழப்பீடுக்கு மூன்றாம் நபர் காப்பீடு (Third party Insurance) உதவுகிறது.
நம் நாட்டில் மோட்டார் வண்டி சட்டம் 1988-ன் படி மோட்டார் வண்டிகளுக்கு சொந்த இழப்பு காப்பீடு (own damage claim policy) இல்லை என்றாலும், மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாகப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் நபர் காப்பீடு (TP Insurance) செய்யப்பட்ட வண்டியில் அல்லது எதிர் வண்டியில் அல்லது பாதசாரியாக இருக்கும் ஒரு நபர் காயம் அடைந்தாலோ அல்லது அவருக்கு இறப்பு நிகழ்ந்தாலோ அல்லது வண்டிக்கோ, சொத்துக்கோ சேதம் ஏற்பட்டால் நீதிமன்றம் மூலமாகவோ அல்லது காப்பீட்டு நிறுவனத்துடன் காணும் சமரச பேச்சு மூலமோ இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த இழப்புத் தொகை ஒரு நபரின் வயது, வேலை, வருமானம் அல்லது இழப்பு ஏற்பட்ட சொத்தின் மதிப்பு இவற்றின் அடிப்படையில் நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால், விபத்துக்குள்ளாகும் மோட்டார் வண்டியில் பயணம் செய்யும் பயணிக்கு வழங்கும் இழப்பு என்பது மிக குறைந்ததாக, அதாவது ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே என்று நிர்ணயிக்கப்பட்ட அளவாகவே இருக்கிறது. காரணம், மூன்றாம் நபர் காப்பீடு என்றால் மேலே சொன்னது போல இழப்பு தரப்படுகிறது. ஆனால், எதிர் வண்டி எதுவும் விபத்தில் ஈடுபடாமல் தனியாக ஒரு வண்டி விபத்தில் சிக்கினால், அந்த வண்டியில் பயணிக்கும் பயணிக்கு என்று தனியாக காப்பீடு செய்யப்படுவது இல்லை. பொதுவாக பயணி என்ற வகையில் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பு வழங்க காப்பீடு ஒப்பந்தம் வழி செய்கிறது. அந்தப் பயணி எவ்வளவு அதிகமாக வருமானம் ஈட்டும் திறன் கொண்டாலும் காப்பீட்டு ஒப்பந்தப்படி ஒரு லட்சம் மட்டுமே இழப்பு கிடைக்கும். இந்த சிக்கலை நீதிமன்றம் பல வழக்குகளில் எதிர்கொண்டு இருக்கிறது.
அது மட்டுமல்லாமல், விபத்தில் சிக்கும் பல மோட்டார் வண்டிகளுக்கு முறையான காப்பீடு இருப்பது இல்லை. புதிய வண்டி வாங்கும்போது காப்பீடு இருந்தால்தான் பதிவு செய்ய முடியும் என்பதால், அப்போது காப்பீடு எடுத்து பதிவு செய்கிறார்கள். பின்னர் ஆண்டுதோறும் காப்பீட்டை பலரும் புதுப்பித்து தொடர்வது இல்லை. இதனால் பல விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்கும் நடைமுறையிலும் நீதிமன்றங்கள் சிக்கலை சந்தித்து வருகின்றன.
சமீப காலமாக இரு சக்கர மோட்டார் வண்டிகளுக்கு இரண்டு ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டு காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் மூன்றாம் நபர் காப்பீடு மட்டுமே இரண்டாம் ஆண்டில் இருந்து தொடர்கிறது. சொந்த வண்டி சேதத்திற்கு காப்பீடு இருப்பது இல்லை, புதுப்பிக்கவும் தவறுகிறார்கள்.
மேலும் வண்டி உரிமையாளர், ஓட்டுநர் ஆகியோர்களுக்கு முன்பு தனிநபர் காப்பீடு என்பது வெறும் இரண்டு லட்ச ரூபாய் மட்டுமே இருந்தது. தற்போது இதுவும் குறைந்த பட்சமாக ரூ.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு, கட்டாயமாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
ஆனால், பயணிகளுக்கு என்று TP காப்பீடு போல எதுவும் இல்லை. நீதிமன்றம் சமீபத்தில் எடுத்துக்கொண்ட ஒரு வழக்கில் இந்த சிக்கலை எதிர்கொண்டது. எதிர்காலத்தில் இதுபோல சிக்கல் எழுந்து ஒரு நபரின் இழப்பினால் அவரின் குடும்பம் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்றும், இதுபோல சிக்கல் மீண்டும் வராமல் முற்றுப்புள்ளி வைக்கவும் நீதிமன்றம் ஆணைப்படி 'பம்பர்-டு-பம்பர்' காப்பீடு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த 'பம்பர் டு பம்பர்' காப்பீடு புதியது இல்லை. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஒன்றாகும். ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு பெரும்பாலும் யாருக்குமே இல்லை.
அடிப்படையில் ஒரு வகை கார் வண்டி காப்பீடாகும். இந்த காப்பீட்டால் வண்டியின் பாகங்களின் தேய்மானம் பற்றிய எந்த கணக்கீடும் எடுக்காமல் விபத்து நிகழும்போது முழுமையான பாதுகாப்பை வண்டி உரிமையாளருக்கு வழங்குகிறது. இருப்பினும், நீர் ஊடுருவலால் ஏற்படும் சேதம், எண்ணெய் கசிவுகள் காரணமாக ஏற்படும் சேதம் போன்றவற்றுக்கு இந்தக் காப்பீட்டின் கீழ் இழப்பு கோரமுடியாது. அதுபோலவே ஓராண்டு காலத்தில் ஒருவர் எத்தனை முறை காப்பீடு கோரலாம் என்பதற்கான கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் இந்தக் காப்பீட்டில் இருக்கிறது.
இந்த 'பம்பர் டூ பம்பர்' காப்பீடு மூலம் புதியதாக வாங்கும் தனி பயன்பாடு கார்களுக்கு ஐந்து ஆண்டு காப்பீடு கட்டாயமாக கிடைக்கிறது. எனவே வண்டி உரிமையாளர் தனிநபர் இழப்பில் இருந்து காக்கப்படுகிறார். மேலும், மூன்றாம் நபர் மூலம் ஏற்படும் இழப்பு மற்றும் இழப்பு வழங்க வேண்டிய சட்ட சிக்கலில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
மூன்றாம் நபர்கள் மற்றும் பயணிகளுக்கு எந்த விதமான சிக்கலும் இல்லாமல் இழப்பீடு வழங்க முடியும். காப்பீடு புதுப்பிக்கத் தவறும் அல்லது புதுப்பிக்காமல் விடும் போக்குக்கும் இதன் வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஒரே ஒரு சிக்கல், இந்தக் காப்பீடு காரணமாக காப்பீடு சந்தா தொகை (Premium Amount) அதிகரிக்கும்; ஆனால் அது வண்டி உரிமையாளருக்கு ஒரு தற்காலிக சுமையாக மட்டுமே இருக்கும். நீண்ட கால நோக்கில் சிறந்த பயன் தரும்" என்றார் காப்பீட்டு ஆலோசகரான சங்கர் நீதிமாணிக்கம்.