சிறப்புக் களம்

சரியான நேரத்தில் நன்மை பயக்கும் குடும்பக் காப்பீடு A to Z - நிபுணரின் எளிய விளக்கம்

சரியான நேரத்தில் நன்மை பயக்கும் குடும்பக் காப்பீடு A to Z - நிபுணரின் எளிய விளக்கம்

JustinDurai
காலங்கள் மாற மாற ஒரு சில மாற்றங்கள், செயல்கள், வசதிகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கிறது. அதில் ஒன்றாக இன்றைய நாட்களில் தவிர்க்க முடியாத முக்கிய தேவையாக இருப்பது மருத்துவக் காப்பீடு ஆகும். பல நிறுவனங்கள், பல வாய்ப்புகள் என குவிந்து கிடக்கும் இன்றைய நாளில் மருத்துவக் காப்பீடு வாங்குவது என்பது கடினமான செயலே இல்லை, ஆனால் அந்த காப்பீடு பற்றி முழு தகவல்கள் அறிந்து நமக்குத் தேவையான, சிறந்த காப்பீட்டுத் திட்டம் எது என்பதை தெரிவு செய்து வாங்குவதே சிரமமான செயல். அதிலும் நிறுவனங்கள் தரும் காப்பீட்டு ஆவணத்தை படித்து அதில் உள்ள சரத்துக்களை அறிவது மிகமிகக் கடினம். உங்கள் தேர்வை எளிதாக்க சில அடிப்படை வழிமுறைகளை பகிர்ந்து கொள்கிறார் காப்பீட்டு ஆலோசகரான சங்கர் நீதிமாணிக்கம்.
“மருத்துவக் காப்பீடு தனிநபர் (Personal Policy) காப்பீடு மற்றும் குடும்ப காப்பீடு (Family Floater Policy) என்று இரு வகைகள் இருக்கிறது.
ஒரு குடும்பத்தில் உள்ள தனி நபர் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவருக்கு தனிநபர் மருத்துவக் காப்பீடு சிறப்பான தேர்வாக இருக்கும். மேலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக காப்பீடு எடுப்பது அதிக செலவினம் தரும். ஆனால் குடும்பக் காப்பீடு (family floater) என்பது ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் சரியான காப்பீடாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு தனித்தனியாக 5 லட்சம் என்று உறுதித் தொகை கொண்டு நான்கு தனிநபர் மருத்துவக் காப்பீடு எடுக்கும் செலவை விட 10 லட்சத்துக்கு உறுதித் தொகை கொண்டு குடும்பம் முழுமைக்கும் எடுக்கும் குடும்ப காப்பீடுக்கு செலவு குறைவே. இப்படி எடுக்கும்போது காப்பீடு செய்யப்பட்டவர்களில் யாரவது ஒருவருக்கு 5 லட்சத்துக்கு மருத்துவ செலவு ஏற்பட்டாலும் மீதி இருக்கும் 5 லட்சம் அந்த ஆண்டுக்கு காப்பீடாக மற்ற நபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.
காப்பீடு எடுக்கும் தொகைக்கு ஏற்ப குடும்பத் தலைவர்/தலைவிக்கு வருமானம் இருந்தாலே அவர்கள் குடும்ப மருத்துவ காப்பீட்டிற்கான தகுதியைப் பெறுகிறார்கள். ஓர் குடும்பத்தில் கணவன், மனைவி அவர்களைச் சார்ந்த நான்கு குழந்தைகள் குடும்ப மருத்துவ காப்பீட்டின் கீழ் காப்பீட்டு பாதுகாப்பு பெறலாம். பிள்ளைகள் 25 வயதுக்கு மேல் இருந்தால் தனியாக காப்பீடு எடுக்கலாம் அல்லது அவர்கள் தங்கள் பெற்றோரை சேர்த்து காப்பீடு எடுக்கலாம். மருத்துவ காப்பீடு எடுக்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பான செலவுகள், பின்னர் வரும் செலவுகள், மருந்துகள், மருத்துவ ஊர்தி கட்டணம், நாள் மருத்துவ வசதி (Day Care) போன்ற முக்கியமானவைகள்.
மேலும் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
இணை செலுத்தல் (Co-Payment)
இந்த வசதி ஒரு சில மருத்துவக் காப்பீட்டில் கட்டாயமாக இருக்கும் அல்லது இணை நோய் கொண்டவர்கள் இந்த வசதியை எடுக்க வலியுறுத்தப்படலாம். இந்த இணை செலுத்தும் வசதியால் காப்பீட்டு சந்தாத் தொகை குறைந்தாலும், ஒட்டுமொத்தமாக உங்கள் செலவை அதிகரிக்கக்கூடும்.
அறை வாடகை (Room rent)
இந்த வசதிக்கு சில காப்பீட்டு நிறுவனங்கள் சில நிபந்தனைகள் வைக்கலாம். அப்படி எதுவும் நிபந்தனை இல்லாத நிறுவன காப்பீட்டை தெரிவு செய்யலாம் அல்லது அந்த நிபந்தனைக்கு உட்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
நோய்கள் வகைக்கு ஒரு உறுதித் தொகை (Disease wise limit)
இந்த நோய்க்கு இவ்வளவு காப்பீடு என்று நோய் வாரியான வரம்புகள் கொண்ட காப்பீடு கண்டிப்பாக தவிர்க்கவும். இந்த கெட்ட பழக்கத்திற்கு இரையாக வேண்டாம். ஏனென்றால் எந்த நோய் எப்போது தாக்கும் எவ்வளவு செலவு கூடும் என்பது எதுவும் உறுதி இல்லாத சூழலே தற்போது இருக்கிறது. ஆகையால் நிபந்தனைகள் இல்லாத ஒரு காப்பீடு தெரிவு செய்வது சிறந்தது.
காத்திருப்பு காலம் (Waiting period)
பெரும்பாலான நிறுவன காப்பீட்டு திட்டங்களிலும் காத்திருக்கும் காலம் பொதுவான ஒன்றாகும், எனவே யார் குறைந்த கால காத்திருப்புக் காலம் கொண்ட காப்பீடு தருகிறார்களோ அதை தேர்ந்தெடுக்கலாம்.
சிகிச்சைக்கு முன் மற்றும் பின் செலவுகள் (Pre and post hospitalization)
மருத்துவ சிகிச்சைக்கு முன் மற்றும் பிந்தைய செலவுகளை உள்ளடக்கிய காப்பீடைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த வசதி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு 30 நாட்களுக்கு முன்பு வரையிலும் 60 நாட்களுக்கு பின்பு வரையிலும் உங்களுக்கு காப்பீடு அளிக்கும்.
மறுசீரமைப்பு (Restoration)
குடும்ப காப்பீட்டு வசதியில் ஒருவர் மறுசீரமைப்பு வசதி தேர்ந்தெடுப்பது எப்போதும் நல்லது. இது கொஞ்சம் கூடுதல் சந்தா தொகை வசூலித்தாலும் ஒருவருக்கு சிகிச்சை முடிந்து, பின்னர் குடும்ப நபர் வேறு ஒருவருக்கு ஏதோ ஒரு சூழலில் மருத்துவ சிகிச்சை வேண்டும் என்றால் இந்த வசதி மூலம் அவரும் சிகிச்சை பெறுவதை உறுதிசெய்கிறது.
நாள் சிகிச்சை (Day care)
வெளி நோயாளியாக எடுக்கும் சிகிச்சைக்கும் காப்பீடு வசதி சிறப்பானது. பெரும்பாலான நிறுவனங்கள் இந்த வசதியைத் தருகிறது. இது தற்போதைய நிலையில் அவசியமானதும் ஆகும். இதுவரை கூறியது நாம் மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான கூறுகள் ஆகும். இன்னும் பல வசதிகள் தரும் காப்பீடு வசதிகள் இருக்கிறது'' என்கிறார் அவர்.