சிறப்புக் களம்

பவுலர்களை சோதனைக்குள்ளாக்கும் புஜாரா என்ற சுவரில் விரிசலா?

பவுலர்களை சோதனைக்குள்ளாக்கும் புஜாரா என்ற சுவரில் விரிசலா?

jagadeesh

இந்திய கிரிக்கெட் அணியின் இன்னொரு ராகுல் டிராவிட் என புகழப்படும் புஜாராவின் அண்மை ஆட்டங்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ராகுல் டிராவிட் ஓய்வுப்பெற்ற பின்பு அவரின் இடத்தை கெட்டியாக பிடித்து முன்னேரியவர் புஜாரா. விக்கெட்டுகள் ஒரு பக்கம் வீழ்ந்தாலும் மறுமுனையில் கெத்தாக நின்று எதிரணியின் பவுலர்களின் பொறுமையை சோதிக்கும் ஆட்டத்தை கொண்டவர் புஜாரா. 2020 ஆஸ்திரேலிய தொடரில் பெரிதாக ஸ்கோர் செய்யாவிட்டாலும் புஜாராவின் ஆட்டம் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு உத்வேகமாக அமைந்தது.

அப்படிப்பட்ட புஜாரா அண்மைக் காலங்களில் தன்னுடைய பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காமல் சோதனைக்குள்ளாகி வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை 49.48 ஆக இருந்த புஜாரவின் சராசரி ரன் விகிதம் 2020-ஆம் ஆண்டில் இருந்து 26.35 ஆக சரிந்துள்ளது. அவர் கடைசியாக விளையாடிய 30 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய தொடரில் 77 ரன்கள் அடித்தார். இப்போது கூட கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் சொற்ப ரன்களை மட்டுமே சேர்த்தார்.

பின்பு இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் மற்றும் இப்போது லார்ட்ஸில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் புஜாரா ரன்களை சேர்க்க திணறி வருகிறார்.எனினும் விராட் கோலி அவரை இன்னும் நம்பி வாய்ப்பு கொடுத்து வருகிறார். இதற்கு காரணம், தற்போதைய டெஸ்ட் அணியை பொறுத்தவரை புஜாரா தான் அதிக அனுபவம் கொண்ட வீரராக உள்ளார்.

விராட் கோலிக்கு அடுத்ததாக 6 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரர் அவர் மட்டுமே இருக்கிறார். பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் "Out Swing" பந்துகளை பேட்ஸ்மேன்கள் அடிக்காமல் விடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் அந்த பந்துகளை பேட்டில் தொட்டு அவுட்டாவது அவரின் மோசமான பார்மை காட்டுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

புஜாராவின் அறிமுகம்

2010-ல் பெங்களுருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக புஜாரா களம் இறங்கினார். அந்த போட்டியில் டிராவிட், சச்சின் என பலரும் விளையாடி இருந்தார்கள். முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் வெளியேறினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் டிராவிட் இறங்கி விளையாட வேண்டிய ஒண்டவுன் பேட்ஸ்மேனுக்கான இடத்தில் புஜாராவை விளையாட செய்தார் அப்போதைய கேப்டன் தோனி. அந்த இன்னிங்ஸில் 89 பந்துகளுக்கு 72 ரன்களை குவித்திருந்தார். அதன்பிறகு இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரரானார் புஜாரா. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் சுற்றுப்பயணம் என்றால் அந்த அணியில் புஜாரா இருப்பார்.

87 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ள புஜாரா 6,283 ரன்களை குவித்துள்ளார். இதில் 18 சதங்களும், 29 அரை சதங்களும் அடங்கும். பலமுறை தான் ஒரு அக்மார்க் டெஸ்ட் பிளேயர் என்பதை புஜாரா நிரூபித்துள்ளார். அவரின் அப்பா அரவிந்த் புஜாரா ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய அனுபவம் உள்ள கிரிக்கெட் வீரர். அப்பாவை போல பிள்ளை என்ற சொலவடைக்கு ஏற்ப புஜாராவும் கிரிக்கெட் வீரராக வளர்ந்தார். தன் தந்தையிடம் கிரிக்கெட் வித்தைகளை கற்று தேர்ந்தவர். அண்டர் 19 மற்றும் டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணிக்குள் வந்தவர் அவர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகளிலும், 8 இன்னிங்ஸ் ஆடிய புஜாரா மொத்தமாக 928 பந்துகளை சந்தித்திருந்தார். இதில் மூன்று அரை சதங்களும் அடங்கும். அதிலும் பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வெற்றிக்காக அழைத்துச் சென்ற வித்தைக்காரர் புஜாரா. அந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாராவை ஆட்டமிழக்க செய்ய ஆஸ்திரேலிய பவுலர்கள் திணறினர்.

இதனையடுத்து புஜாரா மீது பவுன்சர் மழை பெய்தது. இதில் கை, கால், தோள், முதுகு என பல இடங்களில் காயம்பட்டும் நின்று விளையாடினார் புஜாரா. இப்படி ரத்தம் சிந்தி விளையாடிய புஜாராவின் ஆட்டம் இப்போது கவலைக்கிடமாக இருப்பதால் அவர் அடுத்த இன்னிங்ஸிலாவது உயிர்த்தெழ வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.