சிறப்புக் களம்

”மனப்பதற்றம், பீதி, அகோராபோபியா டிஸார்டர்”..வேலையிழப்பும், அதிகரிக்கும் மனநல பிரச்னைகளும்!

”மனப்பதற்றம், பீதி, அகோராபோபியா டிஸார்டர்”..வேலையிழப்பும், அதிகரிக்கும் மனநல பிரச்னைகளும்!

Sinekadhara

கொரோனா காலம் மற்றும் பொருளாதார மந்த நிலை போன்றவற்றை காரணம்காட்டி பல்வேறு நிறுவனங்கள் கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்து அதிரடி காட்டி வருகிறது. இதனால் வேலையை இழந்தவர்கள், வேலையை எந்த நேரத்தில் இழப்போம் என்ற பயத்தில் உள்ளவர்கள் என பெரும்பாலானோர் மன பதற்றம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். அலுவலகம் செல்பவர்கள் மற்றும் வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்கள் என பலரும் மனநல மருத்துவர்களை தேடிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஜனவரி மாத தொடக்கத்திலிருந்தே தினசரி ஏறத்தாழ 3,000 ஐடி ஊழியர்கள் வேலையை இழந்துவருகின்றனர். இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.

கொரோனாவும் வேலையிழப்பும்

கடந்த 2-3 ஆண்டுகளாகவே கொரோனா ஊரடங்கு, மரணங்கள், மீண்டும் தொற்று பயம் மற்றும் பணிநீக்கம் போன்றவை இந்திய ஐடி ஊழியர்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளதாக கூறுகின்றனர் ஹெல்த் நிபுணர்கள்.

குருகிராமிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையின் சீனியர் மனநல மருத்துவர் சௌமியா முத்கல் கூறுகையில், “மனநல பிரச்னைகளுக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இவர்களில் பெரும்பாலானோர் மன பதற்ற பீதி மற்றும் அகோரபோபியாவுடன் தொடர்புடைய டிஸார்டரால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலர் ஏற்கனவே இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுப்பவர்களாக இருக்கிறார்கள். நிலைமை மோசமாகுபவர்களுக்கு அதற்கேற்றார்போல் வீரியமிக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

ஆனால் சமீபகாலமாக மன பதற்றம் மற்றும் மன பதற்றத்துடன் தொடர்புடைய பிரச்னைகள் சார்ந்த புதிய நோயாளிகள் நிறையப்பேர் வருகின்றனர். வேலையிழப்பு மற்றும் வேலை நீக்கம் போன்றவை பலரையும் மன அழுத்தத்திற்குள் தள்ளியிருக்கிறது. தற்போதுள்ள சூழல் நிச்சயமற்ற சூழல், பொருளாதார சவால்கள் மற்றும் எதிர்காலத்தின் மீதான கட்டுப்பாடின்மை போன்றவற்றை காட்டுகிறது” என்கிறார்.

வேலையிழப்பால் சந்திக்கும் மனநல பிரச்னைகள்

வாஷிங்டனில் பணியாற்றும் பேராசிரியரும், மனநல மருத்துவருமான ரிஷி கவுதம் கூறுகையில், ”பணிநீக்கமானது ஊழியர்களின் மனநலனில் பாதிப்பை ஏற்படுத்தி, மனபதற்றம், மன அழுத்தம், அதிர்ச்சி மற்றும் கவலை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக்குகிறது. மேலும் இது தூக்கம் மற்றும் பசி உணர்வு போன்றவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் போதைப்பொருட்கள், ஆல்கஹால் போன்றவற்றை எடுக்கத்தூண்டுகிறது. இதனால் எரிச்சல், சுய மதிப்பீடு குறைதல், குடும்பத்தின்மீது நாட்டமின்மை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு ஒருவரை ஆளாக்குகிறது” என்கிறார்.

சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் ஆர்த்தி ஆனந்த் கூறுகையில், ”கொரோனா ஊரடங்கு மற்றும் எந்தவித முன்னறிவிப்புமற்ற அதிகப்படியான பணிநீக்கம் போன்றவை தனிமனிதனை பெருமளவில் பாதிக்கிறது. இது ஒருவரை பயம் மற்றும் மன அழுத்தத்திற்குள் தள்ளுகிறது. இதிலிருந்து வெளிவர, தங்களிடம் உள்ள திறன்களை திறம்பட பயன்படுத்த வேண்டும். பதற்றப்பட கூடாது. எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் இதுபோன்ற காலங்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியக இருக்கவேண்டும். தொடர் உடற்பயிற்சி மற்றும் மனதை ஒருநிலைப்படுத்த பயிற்சி அளிக்கவேண்டும்” என்கிறார்.

எதற்கும் தயாராக இருங்கள்

மேலும், தங்கள் நிலைமையை விவரிக்க மனதளவில் தயாராக இருக்கவேண்டும். நண்பர்கள், முன்னாள் முதலாளிகள் மற்றும் சக ஊழியர்களுடன் தொடர்பில் இருப்பதும் வேலை இழந்தாலும் மறு வேலை கிடைக்கும் என்ற சிறு நம்பிக்கையை விதைக்கும் என்கின்றனர் ஆலோசகர்கள். மேலும் வேலைப்பளு குறித்து சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்வது மனச்சுமையை சற்று குறைக்கும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.