குதுப் மினார் குதுப் மினார்
வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு கட்டடங்களும், சின்னங்களும் அதிகம் காணப்படும் ஒரு இடமாக டெல்லி உள்ளது. இதற்காகவே வரலாற்றில் தனிச் சிறப்பும் பெற்றுள்ளது, இந்தியாவின் தலைநகரான டெல்லி. இந்தியா கேட், லோதி கார்டன், ஹுமாயூன் கல்லறை, ஆக்ரா கோட்டை என ஏராளமான வரலாற்று இடங்கள் குவிந்துள்ளன. இந்திய வரலாற்றை எடுத்துக்கொண்டால், மஹாஜனப்பதாக்கள் தொடங்கி, அசோகர், குப்தர்கள், ஹர்ஷர் என்று எல்லோர் ஆட்சியிலும் இந்திரப்பிரஸ்தம் முக்கிய பகுதியாகவே இருந்து வந்தது. அதாவது டெல்லியில் ராஷ்டிர பவனத்தில் இருந்து கிழக்கே இரண்டரை மைல் தூரத்தில் இந்திரப்பிரஸ்தம் உள்ளது. தற்போது இது புராணா குயிலா (புராணா கிலா) என்றழைக்கப்படுகிறது. சுமார் 45 வயதில் ஆட்சியைப் பிடித்த ஹுமாயூன் உருவாக்கிய நகர் தான் இந்த புராணா குயிலா. தற்போது இதன் அருகேயுள்ள டெல்லி, டெல்லி சுல்தானியர்கள் காலத்தில் முடிசூடத் தொடங்கி, முகலாயர்கள், ஆங்கிலேயர் என அவர்களின் கைகளிலிருந்து சுதந்திர இந்தியாவின் தலைநகராக நிலைத்திருக்கிறது. அப்படிப்பட்ட டெல்லிக்கு சின்னமாகவும், அடையாளமாகவும் இருக்கும் ஒரு ஸ்தூபியை பற்றி தான் இன்று பார்க்கவிருக்கிறோம்.
குதுப் மினார்: டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் மிகவும் பழமையான மற்றும் இடிபாடுகளால் ஆன கட்டமைப்புகள் நிறைந்த பகுதிகளில் அமைந்துள்ளது குதுப் மினார். பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் சூழ்ந்து காணப்படும் பகுதியாக இருப்பதால் இவ்விடம் "குதுப் பல்கூட்டுத் தொகுதி-வளாகம்" என்று குறிப்பிடப்படுகிறது. குதுப்மினார் என்ற சொல்லுக்கு அரபு மொழியில் துருவம் அல்லது அச்சு என்று பொருள். இங்குள்ள வளாகத்தில் டெல்லியின் இரும்புத்தூண், குவாத்-உல்-இஸ்லாம் மசூதி, அலாய் தர்வாசா, இல்துமிஷ் கல்லறை, அலாய் மினார், அலா-உத்-தினின் மதரஸா மற்றும் கல்லறை, இமாம் ஜமீனின் கல்லறை, மேஜர் ஸ்மித்தின் குபோலா மற்றும் சாண்டர்சனின் சூரியக் கடிகாரம் போன்ற சிறப்புமிக்க இடங்கள் உள்ளன.
இந்த வளாகம் ஆப்கானிய கட்டிடக்கலைக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகவும், இந்தோ-இஸ்லாமிய கட்டடக்கலையின் அடையாளமாகவும் இருப்பதால் , இந்த இடங்களை, 1993-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சிறந்த கலை, கட்டடக்கலை, வரலாற்று நினைவுகள், நினைவுச்சின்னம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 4-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் குதுப் மினார் சேர்க்கப்பட்டது.
வரலாற்றின் பக்கங்களில் குதுப் மினார்:
இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதியில் குரிட்ஸ் என்ற மலைவாழ் மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்கள் பிழைப்புக்காகக் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து சிந்து சமவெளி ஒட்டிய பகுதியில் வாழ்ந்து வந்தனர். இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்களுடன் இஸ்லாமும் அவர்களுடன் வந்தது. குரிட்ஸ், வரலாற்று ரீதியாக ஷான்சபானிஸ் (Shansabanis) என்று அழைக்கப்படுபவர்கள், தாஜிக் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் நவீனக்கால மேற்கு ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதியான குர்விலிருந்து (Ghur) வந்தவர்கள். குரிட்ஸ்கள் இந்தியாவுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே இந்தியாவின் பல இடங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கி.பி 1175-76 இல் மேற்கு பஞ்சாபில் உள்ள முல்தான் மற்றும் உச் பகுதிகளையும், கி.பி. 1177 இல் பெஷாவரைச் சுற்றியுள்ள வடமேற்குப் பகுதிகள் மற்றும் கி.பி. 1185-86 இல் சிந்து பகுதியையும் இணைத்துக் கொண்டனர்.
கி.பி. 1193 ஆம் ஆண்டில், குதுப் -உத்-தின் ஐபெக் என்பவர் டெல்லியைக் கைப்பற்றி, கவர்னர் ஆட்சியை அமல்படுத்தினார். அவரின் வெற்றியின் காரணமாக ஒரு ஸ்தூபியையும் எழுப்ப நினைத்து, குதுப் மினாரின் கட்டுமானத்தைத் தொடங்கினார். 14.32 மீட்டர் விட்டம் கொண்ட ஸ்தூபியின் அடித்தளத்தை நிறுவினார். ஆனால் அவரால் அதன் அடித்தளத்தை மட்டுமே கட்ட முடிந்தது. அதுபோக குவாத்- உல்- இஸ்லாம் என்ற மசூதியை நிறுவினார். குதுப்மினாரை ஒட்டி அமைந்துள்ள இந்த மசூதி இந்தியாவில் முதல் முதலாக உருவாக்கப்பட்ட மசூதி என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் பழமையான மசூதிகளில் ஒன்றாகவும் இது பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கி.பி.1200ம் ஆண்டுகளில் குதுப்த்தீன் ஐபக் இறந்த பின்பு அவரது மருமகனான இல்துமிஷ் குதுப் மினாரின் கட்டடப்பணியைத் தொடர்ந்தார். சுமார் 30 ஆண்டுகள் தொடங்கிய கட்டுமான பணியில் மூன்று மாடிகள் நிறுவப்பட்டது. இந்த மூன்று மாடிகளும் சிவப்பு மணல் கற்களால் உருவாக்கப்பட்டது. கி.பி. 1311 ஆம் ஆண்டுகளில் டெல்லியைக் கைப்பற்றிய அலாவுதீன் கில்ஜி இந்த குதுப்மினாரை ஒட்டி, அலாய் தர்வாசா என்ற மசூதியின் நுழைவாயிலையும், அலாய் மினார் ஆகியவற்றையும் கட்டினார். அதற்குப்பின் கி.பி. 1368 ஆம் ஆண்டுகளில் துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த பெரோஸ் ஷா துக்ளக் குதுப்மினாரின் நான்கு மற்றும் ஐந்தாம் மாடிகளைக் கட்டினார். இது மார்பல் மற்றும் சிவப்பு மணல் கற்களால் கட்டப்பட்டது. கி.பி. 1505 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தினால் குதுப்மினார் சேதமடைந்தது. இதையடுத்து டெல்லியை ஆண்ட லோடி வம்சத்தின் சிக்கந்தர் லோடி சீரமைத்தார். மீண்டும் கி.பி 1800 களில் ஏற்பட்ட பூகம்பத்தில் இது மீண்டும் சேதமடைந்தது.
கி.பி. 1828 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த மேஜர் ராபர்ட் ஸ்மித் என்பவர் இதை சீரமைத்து ஐந்தாம் அடுக்கிற்கு மேல் கும்பம் போன்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஆனால் கி.பி. 1848ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசின் லாட் ஹார்டின் என்பவர் கடைசியாகச் சேர்க்கப்பட்ட கும்பம் அமைப்பை விளக்கிவிட்டு பழைய முறைப்படி சீரமைத்தார். இந்தியாவில் தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட்ட பிறகு குதுப்மினாரை பாதுகாக்கும் பணி இத்துறைக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது வரை குதுப்மினாரை சீரமைத்து பராமரித்து வருகிறது இந்தியத் தொல்லியல் துறை.
குதுப் மினார் கட்டடக்கலை: அடிப்பகுதியில் 14.3 2 மீட்டர் விட்டமும் உச்சத்தில் 2.75 மீட்டர் விட்டமும் கொண்டுள்ள இந்த குதுப்மினார், பெரும்பாலும் சிவப்பு செங்கற்களால் ஆனது. இந்த குதுப்மினார் வளாகத்தின் முற்றத்தில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சந்திர குப்தர் ஆட்சியில் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு இரும்பு தூண் அமைந்துள்ளது.
7.21 மீட்டர் உயரம் கொண்ட இந்தத் தூண் தற்போதுவரை துருப்பிடிக்காத வகையில் அமைந்துள்ளது. சுமார் 6 டன் எடை கொண்ட இந்த தூணானது 1.12 மீட்டர் சுற்றளவைக் கொண்டது. இந்தத் தூணில் சாய்ந்து கைகளை கோர்க்க முடிந்தால், நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது. சிவப்பு மற்றும் வெள்ளை மணற்கற்களால் கட்டப்பட்டு, கல்வெட்டுப் பட்டைகளால் செதுக்கப்பட்ட குதுப் மினார், இந்தியாவின் மிக உயரமான கோபுரமாகும்.
குதுப் மினார் இந்திய இஸ்லாமிய கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இந்த குதுப்மினார் 27 இந்து மற்றும் சமண சமய கோவில்களை இடித்து, அந்தக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. இங்கு உள்ள மினார் இன் சுவர்களில் பிராமி மற்றும் சமஸ்கிருத கல்வெட்டுகளைக் காணமுடியும். அதுபோக நாஸ்க் எனப்படும் இஸ்லாமிய காலிகிராபி எனப்படும் முறைகளில் குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
குதுப்மினார் இன் வெளி சுவற்றில் கீழிருந்து முதல் அடுக்கு வளைவு மற்றும் கோண அமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அடுக்கு வளைவான அலங்காரத்தையும், மூன்றாம் அடுக்கு வெறும் கோண அலங்காரத்தையும் பெற்றுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் திறந்த வெளி அமைப்புகளைக் கொண்டிருக்கும்.
அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையினுள் எப்படி படிக்கட்டுகள் மூலம் அதன் உச்சிக்குச் சென்று பார்க்கலாமோ அதுபோலத்தான் குதுப்மினாரின் உள்ளும் அதன் உச்சி வரை மக்கள் சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கி.பி. 1981ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நாற்பதுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இதனால் குதுப் மினாரின் உள்பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே, சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் குதுப்மினாரின் அடித்தளத்தையும், மாடியை வெளிப்புறத்திலிருந்து மட்டுமே காண முடியும்.
சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு...
சென்னையிலிருந்து சுமார் 2,181 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்திற்குச் செல்ல ரயில் மற்றும் விமான சேவைகள் உள்ளன. வாரத்தின் 7 நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும்.
குதுப் மினாரை சுற்றிப்பார்க்க இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 10 ரூபாய் கட்டணமும், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு 250 ரூபாய் நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. 15 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இங்குகுதுப் திருவிழா நடைபெறும்.
கோபுரத்தைத் தவிர, குதுப்மினார் வளாகத்தில் குவாத்-உஸ்-இஸ்லாம் மசூதி (இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மசூதி), 7 மீட்டர் உயர இரும்புத் தூண், இல்துமிஷ் கல்லறை, அலாவுதீன் கில்ஜியின் கல்லறை, அலாயி-தர்வாசா மற்றும் வெள்ளை பளிங்குக் கற்களால் வடிவமைக்கப்பட்ட சூரியக் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் கண்டு ரசிக்கலாம்.