கேவ்லாதேவ் கானா தேசிய பூங்கா கேவ்லாதேவ் கானா தேசிய பூங்கா
சிறப்புக் களம்

இந்திய பாரம்பரிய இடங்கள் 10: கேவ்லாதேவ் கானா தேசிய பூங்கா - ராஜஸ்தானில் நீர்ப்பறவைகள்!

இந்திய பாரம்பரிய இடங்கள் 10: கேவ்லாதேவ் கானா தேசிய பூங்கா - ராஜஸ்தானில் நீர்ப்பறவைகள்!

Madhalai Aron

ராஜஸ்தான் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது தார் பாலைவனம்தான். அதனாலேயே ராஜஸ்தான் என்றதும் ஏதோ வறண்ட பாலைவன பூமி என்றும், ஒட்டகம் - கள்ளி செடிகள் மட்டுமே இருக்கும் என்றும் நினைத்துக் கொள்கின்றனர். ராஜஸ்தானின் வடமேற்கு பகுதியில் தார் பாலைவனம் உள்ளது. இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ராஜஸ்தான், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ளது. குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ராஜஸ்தானுக்கு அருகில் உள்ள மாநிலங்கள். இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் மூன்றில் ஒருவர் ராஜஸ்தானுக்குச் செல்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாகத் திகழும் ராஜஸ்தானில், பழங்காலக் கோட்டைகள், அரண்மனைகள், கலாசாரம் மற்றும் கலை ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக அமைந்துள்ளன. இங்கு, கைவிடப்பட்ட பெரும்பாலான பழைய கோட்டைகள் சொகுசு விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.

இங்கு, உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் தென்மேற்கிலிருந்து வடகிழக்காகச் செல்கிறது. ஒருபுறம் பாலைவனம் இருந்தாலும், மற்றொருபுறம் சிந்து நதியின் கிளை நதியான சாம்பல் நதியும், கங்கையின் கிளை நதியான பனாஸ், பன்கங்கா போன்ற நதிகள் இருப்பதால் வளம் பெற்றுத் திகழ்கிறது. நீரோட்டம் உள்ள பகுதியாக மட்டும் இல்லாமல் சதுப்புநிலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சதுப்புநிலப்பகுதிகள் அதிகம் இருப்பதால் பறவைகளின் வாழ்விடமாகவும் ராஜஸ்தான் திகழ்கிறது. இங்கு, 350-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வாழ்கின்றன.

அதில், ஒன்றுதான் கேவ்லாதேவ் தேசிய பூங்கா (Keoladeo National Park). இந்தப் பூங்கா, ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதற்குமுன், பரத்பூர் தேசியப் பூங்கா (பரத்பூர் பறவைகள் சரணாலயம்) என்று அழைக்கப்பட்டு வந்தது. இங்கே உள்ளூர் நீர்ப் பறவைகள் மட்டுமின்றி, புலம்பெயர்ந்து வரும் நீர்ப் பறவைகளையும் ஏராளமாகக் காணலாம். இந்தியா மட்டுமின்றி, ஆசியாவின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாக கேவ்லாதேவ் தேசிய பூங்கா உள்ளது. இதனால் பறவைகள் சரணாலயத்தில் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. சரி, வாருங்கள் வண்ணமயமான பறவைகள் உள்ள தேசியப் பூங்காவிற்கும் உலா வருவோம்…

கேவ்லாதேவ் தேசிய பூங்காவின் காலப்பயணம்:

உள்ளூர் மக்களால் கேவ்லாதேவ் கானா பூங்கா என அழைக்கப்படும் இப்பகுதியானது 250 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்களால் உருவாக்கப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள சிவன் கோயிலின் பெயரால் இந்தப் பூங்கா கேவ்லாதேவ் எனப் பெயர் பெற்றது.

கானா என்றால் உள்ளூர் மொழியில் அடர்ந்த என்று பொருள். அதனாலேயே அப்பகுதி மக்களால் கானா தேசியப் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. 29 கி.மீ சுற்றளவு கொண்ட இந்தப் பூங்காவைச் சுற்றியுள்ள காடுகளில் கம்பீர், பங்காங்கா என்ற இரு நதிகள் பாய்ந்தோடுகின்றன. 1726 - 1763க்கு இடைப்பட்ட காலத்தில் பரத்பூரை ஆட்சி செய்து வந்த சூரஜ் மால் என்ற மன்னர் இரு நதிகளும் இணையும் இடத்தில் 'அஜான் பண்ட்' என்ற தடுப்பணை ஒன்றைக் கட்டினார். இந்த தடுப்பணையின் காரணமாக அப்பகுதி சதுப்புநிலமாக மாறியது. இதனாலேயே இந்த பகுதி மனிதனால் உருவாக்கப்பட்ட சதுப்புநில பூங்கா என்றும் கூறப்படுகிறது.

1850 காலகட்டத்தில் பரத்பூரை ஆட்சி செய்து வந்த மன்னர்களுக்கு வேட்டையாடும் இடமாக இருந்தது. அதன்பின், பிரிட்டிஷ் வைஸ்ராய்களின் நினைவாக ஆண்டுதோறும் வாத்து சுடும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1938-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் மட்டும் இந்திய வைஸ்ராய் லார்ட் லின்லித்கோவால் 4,273 பறவைகளை சுட்டுக் கொன்றதாக சொல்லப்படுகிறது. நாளடைவில் போட்டி தடை செய்யப்பட்ட பின், இந்தப் பகுதியை அங்குள்ள மக்கள் தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் பகுதியாக மாற்றினர். ராஜஸ்தான் வனச் சட்டம் 1953-ன் கீழ், பாதுகாக்கப்பட்ட காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. 1971-ல் பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

குளிர்காலங்களில், வடக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல அறிய வகை பறவைகள் இங்கு வந்து செல்வதால், இங்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளையும் உள்ளூர் பறவைகளையும் பாதுகாக்கும் நோக்கத்தில் 1976-ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டது. அதிகளவு பறவைகள் வாழ்ந்து வரும் சூழல் கொண்ட இந்த சதுப்புநிலத்தை பாதுகாக்கும் வகையில் 1981-ல் ராம் சார் தளமாகப் பிரகடனம் செய்யப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, 1982ல் கேவ்லாதேவ் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டு, மேய்ச்சலுக்குத் தடை செய்யப்பட்டது. 1985-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் பல்வேறு அரிதான பறவைகளும், அழிந்துவரும் உயிரினங்களின் வாழ்விடமாகவும் இந்த பூங்கா இருப்பதால், யுனெஸ்கோவின் 10-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் கேவ்லாதேவ் தேசியப்பூங்கா சேர்க்கப்பட்டது.



இந்த சரணாலயத்தில் 375 வகையான பறவையினங்கள், 379 வகையான தாவர இனங்கள், 50 வகை மீன்கள், 13 வகை பாம்புகள், 5 வகையான பல்லிகள், 7 வகையான நிலம், நீர் வாழ்வன, 7 வகை ஆமை இனங்கள் மற்றும் பல்வேறு முதுகெலும்பற்ற உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான நீர்ப்பறவைகள் இனப்பெருக்கத்திற்காகப் பூங்காவிற்குப் புலம்பெயர்ந்து வருகின்றன. இந்தியாவில் குளிர்கால பறவைகள் கூடும் ஒரே இடமும் இந்த சரணாலயம் மட்டுமே. உலகிலேயே அதிகளவு பறவைகள் வாழக்கூடிய பகுதிகளில் இந்த சரணாலயமும் ஒன்று. இதனால் பறவைகளின் சொர்க்கம் என்று இந்த சரணாலயம் அழைக்கப்படுகிறது. இங்கு வாத்துகள், கொக்குகள், நாரைகள், நீர்க் காகங்கள், உளறுவாய் குருவிகள், சிட்டுக் குருவிகள், காடைகள், இந்திய சாம்பல் இருவாச்சி (Indian Grey Hornbill), பெரிக்ரின் பருந்து (Peregeine falcon), கழுகுகள், புல்வெளிக் கழுகுகள், பாம்பு கழுகுகள், ஆப்பிரிக்க சீப்பு வாத்து, எனப் பல அரியவகை பறவைகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு இனங்கள், இதுவரையில் இல்லாத அளவு எண்ணிக்கையில், சமீபத்தில் இங்கு இனப்பெருக்கம் செய்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பறவைகளைத் தவிர்த்தும் வங்காள நரி, வரிக் கழுதைப்புலி, நீர்நாய்கள், ரீசஸ் மக்காக் குரங்குகள், ஹனுமான் லங்கூர் குரங்குகள், சிட்டல் மான்கள், சாம்பார் மான்கள், பன்றி மான், காட்டுப்பன்றி, இந்திய முள்ளம்பன்றி என பல்வேறு வகையான விலங்குகளையும் காணலாம்.

வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 மற்றும் இந்திய வனச்சட்டம் 1927 ஆகியவற்றின் விதிகளின் கீழ் இந்த இடம் இந்திய அரசால் பாதுகாக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, பல்வேறு உள்ளூர் சமூகங்கள், தொண்டு நிறுவனங்கள், பறவை ஆர்வலர்கள், தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராஜஸ்தான் வனத்துறை எனப் பல அமைப்புகளால் இந்த சரணாலயம் நிர்வகிக்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு...

கேவ்லாதேவ் தேசிய பூங்கா ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் என்பதால், எந்த நேரத்திலும் பார்வையிடலாம். ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இனப்பெருக்க காலம் என்பதால், அதிகளவிலான பறவைகள் இங்கு வருகின்றன. (பறவைகளை தொந்தரவு செய்யாமல் ரசிப்பது மிகவும் அழகானது). அக்டோபர் முதல் பிப்ரவரி வரை பல்வேறு புலம்பெயர்ந்த பறவைகளைக் காணலாம்.

சென்னையிலிருந்து 2,070 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கேவ்லாதேவ் தேசிய பூங்காவிற்கு ரயிலில் செல்ல நினைப்பவர்கள், ராஜஸ்தான் பரத்பூர் ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து 5 கி.மீ பேருந்து அல்லது ஆட்டோவில் சென்றடையலாம். விமானம் மூலம் செல்பவர்கள் ஆக்ரா விமான நிலையம் சென்று அங்கிருந்து 56 கி.மீ பயணம் செய்து பரத்பூரை அடைந்து, அங்கிருந்து சரணாலயத்திற்குச் செல்லலாம்.

கட்டணம்: சுற்றுலாவிற்குச் செல்லும் இந்தியப் பயணிகளுக்கு 75 ரூபாயும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 200 ரூபாயும்
கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வீடியோ எடுப்பதற்காக 450 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கேவ்லாதேவ் தேசிய பூங்காவிற்குச் செல்பவர்கள், இதை மட்டும் பார்வையிடாமல், ராஜஸ்தானில் வரலாற்றிலும் இடம் பெற்ற பழங்காலக் கோட்டைகள், அரண்மனைகள், அருங்காட்சியகம் எனப் பல இடங்களையும் கண்டு ரசிக்கலாம்.

(உலா வருவோம்...)