கோவா... கோவா என்றதும் அழகிய கடற்கரைகளும், குளுகுளு தென்னை மரங்களுமே முதலில் நினைவுக்கு வரும். தொடர் விடுமுறை, சுற்றுலா ப்ளான் என்றால் அந்த ப்ளானில் நிச்சயம் கோவா இருக்கும். பள்ளிக் காலத்தில் தொடங்கி கல்லூரி, பணியிடம் என பலமுறை ப்ளான் செய்து நிறைவேறாமல் ஏக்கத்தோடு இருக்கும் இளைஞர்கள் இப்போது வரை உண்டு. அந்தளவுக்குக் கோவா கனவு நகரமாக விளங்குகிறது. இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே சுற்றுலாத் தலைநகராகவும் இருக்கிறது எனலாம். கோவாவுக்கெனப் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. தனிநபர் வருமானத்தில் மற்ற மாநிலங்களைவிட கோவாதான் முதலிடத்தில் இருக்கிறது. அதிக கனிம வளங்களைக் கொண்ட மாநிலமாகவும் திகழ்கிறது. இதுமட்டுமின்றி கோவாவுக்குச் செல்ல ப்ளான் போடுபவர்களுக்கு மிகச்சிறந்த பயண அனுபவமாக அமைவது உலகப்புகழ் பெற்ற முக்கிய இடமான தேவாலயங்கள் மற்றும் கன்னியர் மடங்கள்.
கோவா வரலாறு:
வடக்கில் மகாராஷ்டிரா மாநிலத்தையும், கிழக்கில் கர்நாடகா மாநிலத்தையும் தெற்கு திசையில் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு, மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஓர் அழகிய இடம் கோவா. குறைவான பரப்பளவையும், குறைவான மக்கள் தொகையையும் கொண்டு இந்தியாவின் மிகச் சிறிய நான்காவது மாநிலமாக விளங்குகிறது. இங்கு கொங்கணி, மராத்தி, போர்ச்சுக்கீசிய மொழிகளைப் பேசுகின்ற மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பான்மையாக இந்துக்களும், அதற்கடுத்தாக கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும், ஆங்காங்கே இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற மதத்தினைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். இம்மாநிலத்தின் தலைநகராக பனாஜியும், மிகப்பெரிய நகரமாக வாஸ்கோடகாமாவும் உள்ளது.
பண்டைய காலங்களிலிருந்தே, இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே வாணிபம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டு வரை மவுரியர்கள், சாதவாகனர்கள், யாதவர்கள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், கடம்பர்கள், சுல்தான்கள், விஜயநகர பேரரசர்கள் என பல்வேறு மன்னர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கோவா இருந்துள்ளது. வாணிபத்திற்காக இந்தியா வந்த ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆட்சியும் செய்யத் தொடங்கினர். அவர்களில் போர்ச்சுகீசியர்களும் அடங்குவர். போர்ச்சுகீசிய மன்னரான ஹென்றி, வாணிபத்திற்காக முதல்முதலில் கடல்வழி பயணத்தைக் கண்டுபிடித்தார். இதையடுத்து வாஸ்கோடகாமா என்ற மாலுமி 1497-ஆம் ஆண்டு இந்தியா வந்தடைந்தார். அப்போதைய பீஜப்பூர் மன்னரின் அனுமதியுடன் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் வாணிபம் செய்து வந்தனர். ஐரோப்பியரின் செல்வாக்கும், வலிமையும், இந்தியாவில் படிப்படியாக வளர்ந்து வந்தது. அடுத்த 50 ஆண்டுகளில் போர்ச்சுக்கீசியர்கள் கோவா நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தனர்.
1500-ம் காலகட்டத்தில் கோவாவிற்கு வந்த போர்ச்சுகீசியர்கள், கிட்டத்தட்ட 450 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் கட்டுப்பாட்டில் கோவாவை வைத்திருந்தனர். இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் போர்ச்சுக்கீசியர்களின் பிடியில் இருந்த இடம் கோவா. 1961-ல் 'ஆப்ரேஷன் விஜய்' என்கிற பெயரில் இந்திய அரசால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் போர்ச்சுக்கீசியர்களிடம் இருந்து இந்தியாவுக்குக் கிடைத்தது கோவா. இந்தியாவிற்குள் முதலில் நுழைந்து கடைசியாக வெளியேறிய ஐரோப்பியர்கள் என்றால், அது போர்ச்சுக்கீசியர்கள் தான்.
தேவாலயங்கள் மற்றும் கன்னியர் மடங்கள்!
நான்கு நூற்றாண்டுகள், அதாவது 450 ஆண்டுகளுக்கும் மேலாக கோவாவை ஆண்டு வந்த போர்ச்சுக்கீசியர்கள், ஏராளமான தேவாலயங்களையும், கன்னியர் மடங்களையும் அமைத்தனர். வெல்கா கோவா அல்லது பழைய கோவா என்றழைக்கப்படும் இடத்தில் கட்டக்கலையில் புகழ்பெற்ற சில முக்கிய தேவாலங்கள் அமைந்துள்ளன.
அதில், பழமையான தேவாலயமான புனித ஜெபமாலை மாதா ஆலயம் (Church of Our Lady of the Rosary), புனித கேத்தரின் கத்தீட்ரல் (Se Cathedral), குழந்தை இயேசு பசிலிக்கா தேவாலயம் (Basilica of Bom Jesus), புனித பிரான்சிஸ் அசிசி தேவாலயம் மற்றும் கான்வென்ட் (Church and Convent of St. Francis of Assisi), புனித கேத்தரின் தேவாலயம் (Chapel of St. Catherine), புனித அகஸ்டின் தேவாலயம் (Church of St. Augustine), புனித கஜெட்டன் தேவாலயம் (St. Cajetan Church), புனித மோனிகா தேவாலயம் மற்றும் கன்னியர் மடம் (Church and Convent of St. Monica) ஆகியவை கோவாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொக்கிஷங்களாக பாதுகாக்கப்படுகின்றன.
புனித ஜெபமாலை மாதா ஆலயம்!
கோவாவில் உள்ள தேவாலயங்களில் மிகவும் பழமையானது புனித ஜெபமாலை மாதா ஆலயம். போர்ச்சுக்கீசிய வரலாற்றாசிரியர் காஸ்பர் கொரியாவின் (Gaspar Correia) கூற்றுப்படி, போர்ச்சுகீசிய பிரபுவான அஃபோன்சோ டி அல்புகெர்க் (Afonso de Albuquerque) 1510ல் அவருடைய வீரர்கள் கோவாவின் வெற்றியை உறுதிப்படுத்தியபோது, அவர் நின்று கொண்டிருந்த இடத்தில் ஜெபமாலை மாதாவின் நினைவாக ஒரு சிறிய தேவாலயத்தைக் கட்ட நினைத்தார். அந்த இடம் ஒரு சிறிய மலை. அது போக்ச்சுக்கீசியர்களால் மான்டே சாண்டோ (புனித மலை) என்று அழைக்கப்பட்டது. அவர் முதலில் இந்த இடத்தில் ஒரு மடத்தைக் கட்டினார். 30 ஆண்டுகளுக்குப் பின்னர், அங்கு வசித்து வந்த பல கத்தோலிக்கர்கள், தங்களுக்கென தனி திருச்சபை தேவை என போர்ச்சுக்கல் மன்னர் மூன்றாம் ஜானுக்கு கடிதம் அனுப்பினர். இதையடுத்து 1544-ல் மடம் விரிவாக்கம் செய்ய, கட்டுமானம் தொடங்கியது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் நடந்த பணியில் இறுதியாக மடம் தேவாலயமாக உருவாக்கப்பட்டது. இந்த தேவாலயம் போர்ச்சுக்கீசியர்களால் கோவாவில் கட்டப்பட்ட முதல் தேவாலயமாகக் கருதப்படுகிறது.
இந்த தேவாலயத்தின் கட்டடக்கலையானது, போர்ச்சுகீசிய-மானுலைன் பாணி மற்றும் கோதிக் கட்டடக்கலை (classic Gothic style) பாணியில் அமைக்கப்பட்டிருக்கும். லேட்டரைட்டால் மற்றும் சுண்ணாம்பு சாந்து கலவையால் மூன்று ஆலயம் இருப்பது போன்ற வெளித் தோற்றமும், உயரமான ஜன்னல்களுடன் கூடிய ஆலயத்தின் உள்ளே சிலுவையுடன் இரண்டு கோபுரங்களுடன் இருப்பதால் பார்ப்பதற்கு கோட்டையைப் போன்ற தோற்றத்தை அளிக்கும். ஒரு கோபுரம் பாடகர் குழுவிற்கும், மற்றொன்று ஞானஸ்நான பீடமாகவும் உள்ளது. தேவாலயத்தின் உள்ளே போர்ச்சுகீசிய கவர்னர் கார்சியா டி சா மற்றும் அவரது மனைவியின் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பீடத்தில் ஏராளமான பழங்களுடன் கூடிய சிற்பங்களும், மாதாவின் சுரூபங்களும் காணப்படுகின்றன. போர்ச்சுகீசிய மொழியில் பல்வேறு கல்வெட்டுகளும் அலங்கரிக்கின்றன.
1843-ஆம் ஆண்டில், போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் தலைநகரை தற்போது உள்ள கோவா பகுதிக்கு மாற்றியதால், இந்த இடம் பழைய கோவா ஆனது. இதனால் கட்டடம் பராமரிப்பின்றி காணப்பட்டது. மீண்டும் 1897-ல் கட்டடம் சீரமைக்கப்பட்டு, 1899 முதல் மீண்டும் பொதுமக்களுக்காகத் தேவாலயம் திறக்கப்பட்டது. இந்த ஆலயம் வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.
புனித கேத்தரின் கத்தீட்ரல்
ஒவ்வொரு புதிய நாளையும் வரவேற்கும் வகையில், கிழக்கு நோக்கி இருக்கும் இந்த ஆலயத்தின் பிரமாண்ட முகப்பு கோவாவில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் வித்தியாசமானவை.
புனிதத் தன்மையுடன் காட்சியளிக்கும் இந்த ஆலயம் புனித கேத்தரினுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. போர்ச்சுகீசிய - மானுலைன் பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணியானது 1562-ம் ஆண்டு கிங் டோம் செபஸ்டியாவோவின் ஆட்சியில் தொடங்கி 1652-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணியின் இறுதியில், 250 அடி நீளமும், 181 அடி சுவாசமும், 115 அடி உயரமும் கொண்ட ஆலயம் உருவானது. இந்த ஆலயத்தில், புனித கேத்தரின் வாழ்க்கையின் நடந்த முக்கிய நிகழ்வுகளைச் சித்தரிக்கும் வகையில் சிற்பங்களும், ஓவியங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பீடத்திற்கு அருகில் கோவா பேராயரின் சிம்மாசனமும், வலதுபுறத்தில் புனித அந்தோணியார், புனித பெர்னார்ட், அதிசய சிலுவை மற்றும் வானதூதர்களின் சுரூபங்களும் உள்ளன. 1919-ஆம் ஆண்டில் அதிசய சிலுவையின் மீது இயேசுவின் உருவம் தோன்றியதாகவும், இதனால் சிலுவை அளவானது வளர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், 12-ம் ஆம் போப் பியஸ் மரியாதை மற்றும் பாசத்தின் அடையாளமாக இந்த ஆலயத்திற்குத் தங்க ரோஜாவை வழங்கியுள்ளார். இது தற்போது, புனித பிரான்சிஸ் சவேரியாரின் கல்லறையில் வைக்கப்பட்டுள்ளது. 1776-இல் தெற்குப் பக்கத்தில் உள்ள கோபுரம் இடிந்து விழுந்ததால், திரும்பவும் அது கட்டப்படவில்லை. இதன் அருகிலுள்ள கான்வென்ட் தொல்பொருள் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் நேரம்.
குழந்தை இயேசு பசிலிக்கா தேவாலயம்
கடம்பா பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவிலும், வாஸ்கோடகாமா ரயில் நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவிலும் உள்ள இந்த ஆலயம், புனித பிரான்சிஸ் சவேரியாரின் கல்லறை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம் புனித பிரான்சிஸ் சவேரியாருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தின் கட்டுமானமானது 1594-இல் தொடங்கி மே 1605-இல் நிறைவடைந்தது. இந்த தேவாலயம் 'போம் இயேசு' என்று அழைக்கப்படுகிறது, அதாவது 'நல்ல இயேசு' அல்லது 'குழந்தை இயேசு'. குழந்தை இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருக்கோவில் "பசிலிக்கா" (Basilica) என்று கத்தோலிக்க திருச்சபையால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் கோவில் ஆகும்.
இந்தியாவிலேயே மிகப் பழமையான கிறித்தவ ஆலயங்களில் ஒன்றான இதன் தரை பளிங்குக் கற்களால் ஆனது. எளிமையான முறையில் முன்புறம் கருப்பு கிரானைட்டால் கட்டப்பட்டுள்ளது. பீடங்கள் தங்கமுலாம் பூசப்பட்டு அலங்காரப் படுத்தப்பட்டுள்ளன. இந்த தேவாலயம் இந்தியாவின் முதல் சிறந்த பரோக் கட்டடக்கலை எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளின் ஓவியங்கள் உள்ளன. இந்தியாவின் திருத்தூதர் என அழைக்கப்படும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் அழியாத உடல் இந்த ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை அவரின் உடல், பார்வையாளர்களுக்காக வைக்கப்படும். கடைசியாக 2014ம் ஆண்டு பார்வையாளருக்காக வைக்கப்பட்ட நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு மீண்டும் மக்களின் பார்வைக்காக வைக்கப்படும். 1553-இல் அவர் இறந்த டிசம்பர் 3-ஆம் தேதியை புனித பிரான்சிஸ் சவேரியார் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
புனித சவேரியார் நினைவுக்கூடம்
சவேரியாரின் நினைவுக்கூடத்தை வடிவமைத்தவர் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜோவான்னி பத்தீஸ்தா ஃபோஜ்ஜீனி (Giovanni Battista Foggini) என்ற இத்தாலியச் சிற்பி. அந்தக் கலை வேலைப்பாடு நிறைவுற பத்து ஆண்டுகள் ஆனது. சவேரியாரின் உடல் வைக்கப்பட்டும் அலங்காரப் பேழையானது வெள்ளியால் செய்யப்பட்டது. கோவிலின் இரண்டாம் மாடியில், சவேரியாரின் கல்லறைக்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு கலைக்கூடம் உள்ளது. அதில் கோவாவைச் சார்ந்த டோம் மார்ட்டின் என்னும் கலைஞரின் படைப்புகள் காட்சிக்கு உள்ளன. இங்கு, பைபிள் காட்சிகளைச் சித்தரிக்கும் வகையில் ஓவியங்களுடன் கூடிய நவீன கலைக்கூடம் அமைந்துள்ளது. திங்கள் முதல் சனி வரை காலை 9 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும்.
புனித பிரான்சிஸ் அசிசி தேவாலயம் மற்றும் கான்வென்ட்
போர்ச்சுக்கீசியர்களால் இந்தியாவில் கட்டப்பட்ட பல தேவாலயங்களில் இதுவும் ஒன்று. 1521-இல் ஒரு சிறிய தேவாலயமாகத் தொடங்கப்பட்டது. இருப்பினும், 1529-இல், இந்த கட்டடத்தின் அறைகள் ஒரு கான்வென்டாக மாற்றப்பட்டன. 1661-இல் கட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சிக்குப் பின், அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, மக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.
தேவாலயத்தின் தற்போதைய அமைப்பு டஸ்கன் ஆர்டர் கட்டடக்கலை, பரோக் பாணி ஆகியவற்றின் கலவையாகும். மையத்தில், புனித மைக்கேலின் பெரிய சுரூபம் உள்ளது. தேவாலயத்தின் உள் சுவர்கள் மலர் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் அருகில், புனிதர்களின் சுரூபங்கள், கலைப்பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை - காலை 7:30 முதல் மாலை 6:30 வரை ஆலயம் திறந்திருக்கும். அதேபோல், திங்கள் முதல் ஞாயிறு வரை - காலை 9 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் மாலை 6:30 மணி வரை அருங்காட்சியகம் திறந்திருக்கும்.
புனித கஜெட்டன் தேவாலயம்
வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவை மாதிரியாகக் கொண்டதாகக் கருதப்படும் இந்த தேவாலயம், 1665-ஆம் ஆண்டில் இத்தாலிய துறவிகளால் பெரிய அரைக்கோள குவி மாடத்துடன் கட்டப்பட்டது. ஆலயத்தின் முகப்பில், புனித பீட்டர், புனித பால், புனித ஜான் மற்றும் புனித மத்தேயு ஆகியோரின் கிரானைட் சுரூபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள சுவர்கள் மற்றும் தூண்களில் புனித கஜெட்டனின் வாழ்க்கையைத் தெரிவிக்கும் வகையில் ஓவியங்கள் மற்றும் சுரூபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவாலயத்தில் ஏழு பீடங்கள் உள்ளன, முக்கிய பீடம் வெரோனாவில் உள்ள சான் நிக்கோலோ தேவாலயத்தில் உள்ளதைப் போல அமைக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 9.00 மணியிலிருந்து மாலை 7.00 வரை பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டிருக்கும்.
புனித மோனிகா தேவாலயம் மற்றும் கன்னியர் மடம்
குழந்தை இயேசு பசிலிக்கா தேவாலயத்தின் பின்புறம் அமைந்துள்ள மலையின் மீது இந்த தேவாலயமான கன்னியர் மடம் அமைந்துள்ளது. ஒரு கோட்டையைப் போல் கட்டப்பட்டிருக்கும் இந்த மடம் பல்வேறு புயல்களை எதிர்கொண்டும் தற்போது வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது. புனித அகஸ்டினின் தாயாரான புனித மோனிகாவின் நினைவாக இதற்கு அவரின் பெயர் இடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஆலயங்களில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்த மடம், பிற்காலத்தில் ஆலயமாக மாற்றப்பட்டது. 300 பேர் வரை தங்கும் அளவுக்கு வசதிகள் இருக்கும் இந்த தேவாலயத்தில் புனித மோனிகாவின் மகள்கள் என்று அழைக்கப்படும் சுமார் 150 கன்னியாஸ்திரிகள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. 1885-இல் கடைசி கன்னியாஸ்திரியும் இறந்த பிறகு இந்த மடம் மூடப்பட்டது. இதையடுத்து 1968-இல் தேவாலயமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது.
1606-ஆம் ஆண்டில் கட்டுமான பணி தொடங்கப்பட்டு 1627-இல் முடிக்கப்பட்டது. கட்டுமானம் நிறைவடைந்தது. தேவாலயத்தின் முகப்பில் சாண்டா மோனிகாவின் சுரூபம் மற்றும் தேவதூதர்களின் சுரூபம் அமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் பல அறைகள் கொண்ட மூன்று மாடிக் கட்டடமாக உள்ளது. தற்போது இந்த மடம் கிறிஸ்தவ கலை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. தேவாலயத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சுரூபம் வைக்கப்பட்டுள்ளது. 1636-ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி, இந்த சுரூபம் கண்களைத் திறந்ததாகவும், அதன் காயங்களிலிருந்து இரத்தம் வழிந்ததாகவும் கூறப்படுவதால், மிகவும் புனிதத்தன்மையாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.
வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 9.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை திறந்திருக்கும் இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் கேட்டிவான் உலக இசை விழாவானது நடத்தப்படுகிறது.
கோவாவின் நினைவுச்சின்னங்கள் அனைத்தும் கிழக்கு ரோம் (Rome of the Orient) என்று அழைக்கப்படுகின்றன. சிறந்த கலை நுட்பத்திற்கும், நினைவுச்சின்னங்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் இந்த தேவாலயங்கள் மற்றும் கன்னியர் மடங்களை 1986-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சிறந்த கட்டடக்கலை, சிற்பக் கலை, ஓவியக்கலை, தனித்துவம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 2, 4 மற்றும் 6-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் கோவாவின் தேவாலயங்கள் மற்றும் கன்னியர் மடங்கள் சேர்க்கப்பட்டன.
சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு:
சென்னையிலிருந்து சுமார் 947 தொலைவில் அமைந்துள்ள கோவாவிற்கு விமானம் அல்லது சென்றால் அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலமாக இங்குள்ள தேவாலயங்களுக்குச் செல்ல முடியும். கடம்பா பேருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ தொலைவிலும், வாஸ்கோடகாமா ரயில் நிலையத்திலிருந்து 27 கி.மீ தொலைவிலும் குழந்தை இயேசு பசிலிக்கா தேவாலயம் மற்றும் புனித மோனிகா தேவாலயம் மற்றும் கன்னியர் மடம் அமைந்துள்ளது.
கோவாவின் பல பகுதிகளில், இந்தோ-போர்ச்சுகீசிய கால கட்டடக்கலைக்குச் சான்றாக இன்றும் பல மாளிகைகள் நிலைத்து இருக்கின்றன. இருப்பினும் சில கிராமங்களில், பெரும்பாலும் அவை சிதைந்து பாழடைந்த நிலையில் உள்ளன. பனாஜியில் உள்ள போன்டைன்ஹஸ் என்னுமிடம் கோவா மக்களின் வாழக்கையையும், கட்டடக் கலை மற்றும் கலாசாரத்தையும் காட்டும் கலாசார பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம்: இங்குள்ள தேவாலயங்களைப் பொறுத்தவரை கட்டணங்கள் கிடையாது. அனைத்து மதத்தினரும் இலவசமாக சென்று பார்வையிடலாம். ஆனால், சில தேவாலயங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு அனுமதி இல்லை. ஒரு சில இடங்களில் சிறப்பு அனுமதி பெற்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
கோவாவில் சில அருங்காட்சியகங்கள் இருந்த போதிலும் அவற்றில் இரண்டு மட்டும் மிக முக்கியமானவையாகும். ஒன்று கோவா மாநில அருங்காட்சியகம் மற்றொன்று கடற்படைத் தள அருங்காட்சியகம் ஆகும். பனாஜிம்மில் உள்ள கோவா மாநில அருங்காட்சியகத்தைப் பார்வையிட நுழைவுக்கட்டணம் எதுவுமில்லை. வாஸ்கோவில் அமைந்துள்ள கடற்படைத் தள அருங்காட்சியகத்தைப் பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.6 வசூலிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே கோவாவில் மட்டும் தான் இது போன்ற கடற்படைத் தள அருங்காட்சியகம் உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் அறியப்படாத இடமாக கோவா அறிவியல் மையம் ஒன்றும் பனாஜிம்மில் உள்ளது.
(உலா வருவோம்...)
முந்தைய அத்தியாயம்: இந்திய பாரம்பரிய இடங்கள் 11: கஜுராஹோ கலைக் கோயில்கள் - காதல், காமம், ஆன்மீகம்!