ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய கால்பந்து அணி:
உலக அளவில் ஊர் பேர் அறியப்படாத குட்டி குட்டி நாடுகள் கூட கால்பந்து அரங்கில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் நிலையில், உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள இந்தியா உலக கால்பந்து போட்டியில் எப்போது இடம்பெறும் என்ற கால்பந்து ரசிகர்களின் கனவு, கனவாகவே இருக்கிறது.
1960 ஆம் ஆண்டு இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற 17-வது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய கால்பந்து அணி, பிரான்ஸ் அணியுடனான போட்டியில் 1:1 என்ற கோல் கணக்கில் டிரா செய்த நிலையில், ஹங்கேரி மற்றும் பெரு ஆகிய அணிகளுடன் தோல்வியை தழுவியது. அதன் பிறகு இந்திய கால்பந்து அணி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவே இல்லை.
ஓய்வை அறிவித்த சுனில் சேத்ரி
இந்நிலையில், இந்திய அணி உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் முன்னேற முக்கிய காரணமாக இருந்தவர் சுனில் சேத்ரி என்றால் அது மிகையில்லை.
சுனில் சேத்ரியின் திறமையான ஆட்டத்தால் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் சுனில் சேத்ரி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை விரிவாக பார்க்கலாம்...
150 போட்டிகளில் களம்கண்டு 94 கோல்களை அடித்துள்ளார்:
ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் பிறந்த சுனில் சேத்ரி, கடந்த 2002 ஆம் ஆண்டு கொல்கத்தா மோகன் பகான் கிளப் அணியில் முதன் முறையாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து 2010-ல் அமெரிக்கா கன்சாஸ் சிட்டி விஸார்ட்ஸ் அணிக்காகவும், 2012-ல் போர்ச்சுகல் ஸ்போர்ட்டிங் சிபி அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி, கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். கடந்த 19 ஆண்டுகளாக இந்திய கால்பந்து அணியில் முன்னணி ஆட்டக்காரராக விளங்கும் அவர், 150 போட்டிகளில் களம்கண்டு 94 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்றதோடு, அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் 3-வது இடம்:
சர்வதேச கால்பந்து அரங்கில், அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்திலும், அர்ஜெண்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில், இந்த பட்டியலில் 3-வது இடத்தை தக்கவைத்துள்ளார் சுனில் சேத்ரி.
கடந்த 2007, 2009, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நேரு கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி பட்டம் வெல்ல காரணமாக இருந்த சுனில் சேத்ரி, 2011, 2015, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணி பட்டம் வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்துள்ளார்.
அதேபோல், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சேலஞ்ச் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 27 வருடங்களுக்கு பிறகு ஆசிய கோப்பை தொடரில் விளையாட தகுதி பெறவும் சுனில் சேத்ரி காரணமாக இருந்துள்ளார்.
சிறந்த வீரர் விருதை 7 முறை வென்றுள்ள சுனில் சேத்ரி:
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த வீரர் விருதை 7 முறை வென்றுள்ள சுனில் சேத்ரி, ஈஸ்ட் பெங்கால், டெம்போ கோவா ஆகிய கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கிளப் போட்டிகளில் பெங்களூரு எஃப்சி அணியில் வெற்றிகரமாக வலம் வந்த சுனில் ஷேத்ரி, 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ-லீக் தொடரில் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கடந்த 19 ஆண்டுகளாக இந்திய கால்பந்து அணியின் ஜாம்பவானாக இருந்து வரும் சுனில் சேத்ரி, தனது ஓய்வு முடிவு குறித்து எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒருபோதும் தனிப்பட்ட நலனுக்காக நான் விளையாடியதில்லை:
அதில், வரும் 6ஆம் தேதி குவைத் அணிக்கு எதிராக நடைபெற உள்ள போட்டிதான் சர்வதேச கால்பந்து அரங்கில் எனது கடைசி போட்டி. இந்திய அணிக்காக நான் அறிமுகமான போட்டியை என்றும் என்னால் மறக்க முடியாது. இந்திய அணிக்காக விளையாடிய 19 ஆண்டுகளையும் நினைத்துப் பார்க்கிறேன். இதில், கடமை, அழுத்தம், மகிழ்ச்சி ஆகியவையும் கலந்திருந்துள்ளது. நான் ஒருபோதும் தனிப்பட்ட நலனுக்காக விளையாடியதில்லை.
நான் எனது அம்மா, அப்பா மற்றும் மனைவி ஆகியோரிடம் ஓய்வு முடிவு குறித்து கூறினேன். எனது அப்பா சாதாரணமாக இருந்தார். ஆனால் எனது அம்மாவும், என் மனைவியும் அழுதனர். இது எனது கடைசி ஆட்டமாக இருக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு வந்தபோது, ஓய்வு முடிவை எடுத்துள்ளேன் என்று சுனில் சேத்ரி பேசியுள்ளார்.