இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என சகலத்திலும் கெத்து காட்டும் வீரர். அண்மையில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங் என சகலத்திலும் மாஸ் காட்டினார். அவரது அசத்தலான ஆட்டம் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அவரது ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் புகழ்ந்து பாடி வருகின்றனர்.
இகழ்ச்சியை புகழ்ச்சியாக மாற்றிக் காட்டியவர்!
ஜடேஜா ஒரு மேட்ச் வின்னர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அவர் ஆட்டத்தில் திறம்பட விளையாடாமல் போகும் நேரங்களில் அவரை இகழ்ந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. ‘Sir’ என அவரை சிலர் ட்ரோல் செய்துள்ளார்கள். பின்னாளில் தனது அபாரமான திறனை அவர் ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்த அதே ‘Sir’ என்பதை வைத்து அவரை பலரும் புகழ்ந்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூட ஒருமுறை ஜடேஜாவை ‘Sir’ என மேற்கோள்காட்டி ட்வீட் செய்துள்ளது அதற்கு சான்று.
சொன்னதை செய்து காட்டிய ஜடேஜா!
கடந்த 2018 வாக்கில் பேட்டி ஒன்றில் ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட் தான் சாதிக்க விரும்புவது என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்திருந்தார். “ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் ஹால் மற்றும் சதம் விளாசுவதுதான் எனது இலக்கு” என தெரிவித்துள்ளார் ஜடேஜா. அதை இப்போது நிறைவேற்றியுள்ளார். இலங்கை அணிக்கு எதிராக 175* ரன்கள் மற்றும் 5 விக்கெட் ஹால்களை முதல் இன்னிங்ஸில் கைப்பற்றியிருந்தார் அவர். இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
அன்றே சொன்ன வார்னே!
2008 ஐபிஎல் சீசனில் மறைந்த ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி இருந்தார் ரவீந்திர ஜடேஜா. அந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்துகளில் 36 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
“ஜடேஜாவை பார்த்தவுடன் அவர் ஒரு திறமைசாலி என்பதை நாங்கள் அடையாளம் கண்டோம்” என ஒரு முறை சொல்லியுள்ளார் ஷேன் வார்னே. ஜடேஜாவை ‘ராக்ஸ்டார்’ என சொல்லியவர் வார்னே.
“ஐபிஎல் மூலம் எனக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர். நான் முதன் முதலில் அவரை பார்த்த போது அவருடன் விளையாடுவேன் என நான் நம்பவில்லை” என அண்மையில் மறைந்த வார்னே உடனான தனது நினைவுகளை பகிர்ந்திருந்தார் ஜடேஜா.
வார்னே சொன்னதை போல சர்வதேச கிரிக்கெட் களத்தை ராக் செய்துக் கொண்டுள்ளார் ஜடேஜா.