சிறப்புக் களம்

தாய் மொழிகளைக் கடந்து, எல்லைகளை தாண்டும் வட-தென்னிந்திய சினிமா - ஓர் பார்வை

தாய் மொழிகளைக் கடந்து, எல்லைகளை தாண்டும் வட-தென்னிந்திய சினிமா - ஓர் பார்வை

சங்கீதா

மொழிகளுக்கு என்றுமே இல்லை எல்லை என்பது உலகம் அறிந்த ஒன்று. அதனால் தான் திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ உலகப் பொதுமறை என்றும், அதேபோல் ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ அன்ட் ஜீலியட்’, ‘ஹேம்லெட்’ போன்ற நாடகக் கதைகளும் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகின்றன. காலந்தொற்று நடந்துவரும் இந்த மொழிமாற்றம் சார்ந்த மாற்றங்களுக்கு, தற்போதைய சினிமா படங்களும், நடிகர்களும் விலக்கு அல்ல.

திரையுலகை நேசிக்கும் கலைஞர்கள், தங்கள் மொழிகளை சார்ந்து மட்டுமில்லாது, மற்ற மொழிகளிலும் தங்கள் படைப்புகளை விரும்பவே செய்வர். அதிலும் குறிப்பாக நடிகர்கள் மற்ற மொழிகளிலும் தனக்கென ரசிகர்கள் உருவாவதை விரும்புவர். இந்திய சினிமா என்றாலே அது மும்பையை மையமாகக் கொண்ட பாலிவுட் சினிமா தான் என்னும் பிம்பம் உள்ளது. இந்த பிம்பத்தை உடைத்து தற்போது நடிகர்கள் அனைத்து மொழிகளிலும் தங்களது பார்வையை செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக இந்த தடையை உடைத்தெறிந்தது 2015-ல் பிரமாண்ட பொருட்செலவில் வெளியான பிரபாஸின் ‘பாகுபலி’ படம் தான். வசூலில் சாதனை புரிந்து ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. வட இந்தியாவில் பீகார், உத்தரப்பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் இந்தப்படம் தனி ரசிகர்களை உருவாக்கியது. அன்றுதொட்டு ‘அர்ஜுன் ரெட்டி’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதிச்சுற்று’ என பல்வேறு தென்னிந்திய சினிமாக்கள், வட மாநிலத்தவர்களை சற்று நிமிர்ந்து தென்னிந்தையாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது என்று சொன்னால், அது மிகையாகாது.

இதனால், சமீபகாலமாக தென்னிந்திய நடிகர்கள் பாலிவுட் சினிமாவில் நடிப்பதும், வட இந்திய நடிகர்கள் தென்னிந்திய படங்களில் நடிப்பதும் அதிகமாகிக்கொண்டே போகிறது. இயக்குநர் ராஜமௌலியின் ‘பாகுபலி’ படம், இந்திய பார்வையாளர்களை மட்டுமல்லாது, உலக சினிமா பார்வையாளர்களையும் கவர்ந்ததும் இதற்கு முக்கிய காரணம். அதன்பிறகு வெவ்வேறு தென்னிந்திய இயக்குநர்கள் இயக்கிய படங்கள், இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்டு, தற்போது அவை பாலிவுட் திரையுலகின் பக்கம் திசை திரும்பியுள்ளது.

தென்னிந்திய சினிமாவை சேர்ந்த விஜய் தேவரகொண்டா, விஜய் சேதுபதி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பாலிவுட் படங்களில் நடிப்பதும், பாலிவுட்டை சேர்ந்த தீபிகா படுகோனே, ஆலியா பட், கீர்த்தி சனோன் போன்றோர் தென்னிந்திய மொழி படங்களில் ஒப்பந்தமாகி வருவதும், மொழி தடைகளை தகர்த்தெறியும் விஷயமாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக, மொழிகளை கடந்து நடிகர்கள் நடிப்பதால், இந்திய சினிமாவில் இது ஒரு நல்ல ஆரோக்கியமான ஆரம்பம் எனலாம். இந்த ஆரம்பத்தின் தொடக்கப்ள்ளிகளாக, தற்போது நடிகர் யாஷின் ‘கே.ஜி.எஃப்’, சிம்புவின் ‘மாநாடு’ போன்ற படங்கள் பாலிவுட்டில் தயாரிப்பதற்கான உரிமைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ராதே ஷ்யாம்’ (Radhe Shyam), ‘ஆதி புருஷ்’ (Adipurush) மற்றும் தீபிகா படுகோனே உடன் இணைந்து நடிக்கவுள்ள பெயரிடாத பாலிவுட் படம், கரன் ஜோஹர் தயாரிப்பில் பாலிவுட்டில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘லிகர்’(Liger), ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR) ஆகிய திரைப்படங்கள் தாய்மொழிகளில் மட்டுமல்லாது, மற்ற மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளதால், அனைத்து இந்திய மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.

இதனால் இந்திய சினிமாவின் மொழித் தடை என்பது அகன்று வருவதை காணமுடிகிறது. சமீபத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ் பார்ட் ஒன்’ திரைப்படம், இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் மட்டும் 70 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இந்தப்படம் இந்தி மொழியில் வெளியிடப்பட்ட அல்லு அர்ஜூனின் முதல் படமாகும். இந்தப்படத்திற்கு பெரிதளவில் விளம்பரமும் செய்யவில்லை.

இதற்கு நடிகர்களின் மொழி என்பதை மறந்து, திறமை என்ற ஒன்றை மட்டுமே திரையுலகம் பார்க்க ஆரம்பித்து இருக்கிறது என்பதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதேபோல் தென்னிந்திய மொழிகளில் ஒன்றான கன்னட நடிகர்களையும் இந்திய திரையுலகம் கண்டுகொண்டுள்ளது. அதற்கு முக்கிய படமாகக் கருதப்படுவது நடிகர் யாஷின் ‘கே.ஜி.எஃப்’. அவர் மட்டுமின்றி கன்னட திரையுலகைச் சேர்ந்த தர்ஷனும் தற்போது இந்திய மொழிகளில் அறியப்படுகிறார். 80-களில் தமிழ் ஜாம்பவான்களான நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து, தனக்கென ரசிகர்களை ஈர்த்தாலும், தற்போது இந்த தடையை முழுவதுமாக உடைத்தெறிய அனைத்து மொழிகளைச் சேர்ந்த நடிகர்களும் தயாராகி வரும் இந்த மாற்றம், மகிழ்ச்சியாகத்தான் பார்க்கிறது சினிமா திரையுலகம் மட்டுமல்ல பார்வையாளர்களும்தான்.