இந்தியாவில் ஆண் புலியொன்று தனக்கேற்ற இணையை தேடி காடுகள் வழியாக தொடர்ந்து 3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்றது தெரிய வந்துள்ளது. இத்தனை தூரங்கள் அந்த ஆண் புலி கடந்தபோதும் இன்னும் அதற்கான இணையை தேர்வு செய்யவில்லை.
2014 ஆம் ஆண்டு நடந்த புலிகள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 2,226 புலிகள் இருப்பதாக அறியப்பட்டு இருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளது. 2018 புலிகள் கணக்கெடுப்புக்காக 1,21,337 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட வனப்பகுதிகளில் 26,838 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. வன உயிரினங்களின் நடமாட்டத்தை அறிந்து அந்த கேமராக்கள் படம்பிடித்தன. அந்த படங்களைக் கொண்டு அதிநவீன மென்பொருள் மூலமாக மொத்த புலிகளின் எண்ணிக்கை துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மொத்தம் 2,967 புலிகள் இருப்பதாக கணடறியப்பட்டுள்ளது.
இதில் மத்தியப் பிரதேசம் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. மத்தியப் பிரதேச காடுகளில் மட்டும் 526 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 இல் மத்திய பிரதேசத்தில் 308 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 526 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அதிக புலிகள் வாழும் இரண்டாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது. இங்கு 524 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதற்கடுத்தப்படியாக உத்தரகாண்ட் மாநிலத்தில் 442 புலிகளும், மகாராஷ்ட்டிடிரா மாநிலத்தில் 312 புலிகளும் வசிக்கின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சரணலாயத்தில் வசித்து வந்த 3 வயதுடைய ஆண் புலியொன்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கிருந்து இடம்பெயர தொடங்கியது. அந்த ஆண் புலி தனக்கான இரையையும், இணையையும் தேடி நடக்க ஆரம்பித்தது. இதனையடுத்து அந்த புலிக்கு ஜிபிஎஸ் பொறுத்தப்பட்டது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் பயணத்தை தொடங்கிய அந்தப் புலி தெலங்கானா மாநிலத்தில் இருக்கும் காட்டில் ஜூன் மாதம் தங்கியது. அப்போதே அந்தப் புலி 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்தது தெரிய வந்தது. ஏறக்குறைய மகாராஷ்டிடிராவின் 7 மாவட்டங்கள், தெலங்கானா என சுற்றிய அந்தப் புலி இப்போதும் மீண்டும் மகாராஷ்டிராவின் தியான்கங்கா சரணலாயத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து கூறிய மகாராஷ்டிரா மாநில வனத்துறையின் மூத்த அதிகாரி நிதின் ககோட்கர் "அந்தப் புலிக்கு எந்த எல்லைப் பிரச்னையும் இருக்கவில்லை. அதற்கு தேவையான இரையும் கிடைத்தது. இந்தப் புலிக்கு இன்னும் இணை கிடைக்காததால், தியான்கங்கா சரணலாயத்தில் பெண் புலியை விடலாமா என ஆலோசித்து வருகிறோம். இந்த சரணலாயத்தில் இரைகள் நிறைய இருப்பதால் இப்போதைக்கு அந்தப் புலி வேறு எங்கும் செல்ல வாய்ப்பில்லை" என்றார் அவர். மேலும் இந்தியாவில் இதுவரை எந்தப் புலியும் இத்தனை தூரம் நடந்ததில்லை என்பதால் அதற்கு வாக்கர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
புலிகள் என்றாலே எப்போதும் எல்லோருக்கும் ஆச்சரியம்தான். அதன் தோற்றத்தை நேரில் பார்த்தால் உடம்பில் பயம் பக்கென்று பற்றிக்கொள்ளும். ஆனால் காடுகளில் புலிகள் மனிதனின் கண்களுக்கு அவ்வளவு எளிதாக அகப்பட்டுவிடாது. ஏனென்றால் நாம் எல்லோரும் பார்த்து பயப்படும் புலிகள் பொதுவாகவே கூச்சசுபாவம் கொண்ட உயிரினம் என்பதுதான் உண்மை. மனிதனின் வாசம் அதற்கு தெரிந்தவுடன் நாம் இருக்கும் பக்கமே வராது. அதனால்தான் புலிகள் காப்பக சுற்றலாக்களில் கூட புலிகளை காண்பது என்பது அரிதிலும் அறிதான நிகழ்வாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.