சிறப்புக் களம்

மிரள வைத்த நிகழ் உலக தாதாக்கள் : புரட்டிப்பார்க்க வேண்டிய க்ரைம் பக்கங்கள்..!

மிரள வைத்த நிகழ் உலக தாதாக்கள் : புரட்டிப்பார்க்க வேண்டிய க்ரைம் பக்கங்கள்..!

webteam

இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய குற்றச்சம்பவமாக கடந்த ஜூலை 2ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் 8 காவலர்களை ஒரு ரவுடி சுட்டுக்கொன்ற நிகழ்வு மாறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விகாஷ் துபே என்ற நபர், பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் உள்ளூர் போலீசார் மற்றும் சில அரசியல் புள்ளிகளின் ஆதரவால் அவர் குற்றவாளிகள் பட்டியலில் சிக்காமல் தப்பித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 2ஆம் தேதி கான்பூரில் உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் பதுங்கியிருந்த விகாஸ் துபேவை, டிஎஸ்பி தலைமையிலான போலீஸ் படை பிடிக்கச் சென்றது. அப்போது போலீசாரிடம் சரணடைய மறுத்த விகாஷ் துபே, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் டிஎஸ்பி, 2 எஸ்ஐ-கள் உட்பட மொத்தம் 8 காவலர்கள் உயிரிழந்தனர். இந்தியாவின் மிகப்பெரிய குற்றச்சம்பவங்களில் ஒன்றாக இது உருவெடுத்துள்ளது. அத்துடன் ஒரே நாளில் உத்தரப் பிரதேசத்தின் குற்றவாளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள விகாஷ் துபே, இந்தியா முழுவதும் தேடப்படும் நபராக மாறியிருக்கிறார்.

இவரை தற்போது டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் போலீஸிடம் சிக்கமால் நீதிமன்றத்தில் விகாஷ் துபே சரணடைய முயற்சிக்கிறார் எனப்படுகிறது. அவர் சரணடைவதற்கு முன்பு போலீசிடம் பிடிபட்டால் கண்டிப்பாக அவர் என்கவுன்ட்டர் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் ஒருவேளை அவர் என்கவுன்ட்டரில் தப்பி, சரணடைந்து சிறை சென்று திரும்பினால் இந்திய வரலாற்றில் இடம்பிடித்த டான்களில் ஒருவராக எதிர்காலத்தில் மாற வாய்ப்பிருப்பதாகவும் கருதப்படுகிறது. இதற்கிடையே இந்திய வரலாற்றில் மும்பையை ஆட்டிப்படைத்த டான்களின் வரலாறு குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

மும்பை டான் என்றவுடன் நினைவுக்கு வரும் ஒரு பெயராக தாவூத் இப்ராஹிம் இருக்கிறார். ஆனால், அவருக்கு முன்பே அங்கு பழம் தின்று கொட்டை போட்டவர்கள் உள்ளனர். அவர்களின் தகவல்களை அடுத்தடுத்து பார்ப்போம். முதலில் தாவூத். 1955ஆம் ஆண்டு மும்பை டோங்கிரி பகுதியைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மகனாக பிறந்த தாவூத், இளம் வயதிலேயே தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சேர்த்துக்கொண்டு கடத்தல், வழிப்பறி, மோசடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டார். இதனால் உள்ளூரில் ஒரு சிறிய டானாக வலம் வந்த தாவூத் இப்ராஹிம், 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல், பணம் கடத்தல், தங்கம் கடத்தல், சட்டவிரோத வர்த்தகம், போதைப் பொருள் கடத்தல் என நிழல் உலக தாதாவாக மாறினார். அத்துடன் டி-கம்பேனி என்ற பெயரில் தனக்கு கீழ் ஆட்களை சேர்த்து, பெரும் கிரிமினல் நெட்வொர்க்கை உருவாக்கினார். 1993ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பிருப்பதை சிபிஐ உறுதி செய்த பின்னர் தலைமறைவாகிய அவர் இன்று வரை வெளியே தலைகாட்டவில்லை. அவர் பாகிஸ்தானில் பதுங்கியதாக கூறப்பட்டாலும், அங்கிருந்தே மும்பையில் குற்றச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார் என கூறப்படுகிறது.

அடுத்து தாவூத்தின் கூட்டாளியாக இருந்து எதிரியாக மாறிய சோட்டா ராஜன். இவர் தாவூத்துடன் சேர்ந்து கொலை, கொள்ளை, கடத்தல், மிரட்டிப்பணம் பறித்தல், சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பங்களில் ஈடுபட்டார். பின்னர் தனியாக தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு தாவூத் இப்ராஹிமிடம் இருந்து பிரிந்துவிட்டார். இதனால் பலமுறை சோட்டா ராஜனை தாவூத் கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அவை அனைத்திலிருந்தும் தப்பித்த ராஜன், 2015ஆம் ஆண்டு இந்தோனேசிய போலீசால் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் முன்பாக மும்பையை கட்டுக்குள் வைத்திருந்த மிக முக்கிய டான்களாக இருந்தவர்கள் ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார் மற்றும் கரிம் லாலா. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிராமத்தில் பிறந்தவர் ஹாஜி மஸ்தான். 1960 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் மும்பையின் மிகப்பெரும் டான்களில் ஒருவராக இருந்தவர். இவரை மும்பையின் ‘ராபின் வுட்’ என பலரும் அழைத்துள்ளனர். பாலிவுட் திரையுலகம் மற்றும் அரசியல் என பல பிரபலங்களை கைக்குள் வைத்திருந்த மஸ்தான், 1994ஆம் ஆண்டு தனது 68 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

மஸ்தான் காலத்தில் மற்றொரு முக்கிய டானாக இருந்தவர் வரதராஜன் முதலியார். தமிழ்நாட்டில் பிறந்த இவர், 1945ஆம் ஆண்டு தனது 19 வயதில் மும்பைக்கு சென்றார். ஆரம்பத்தில் கூலி வேலை செய்த இவர், பின்னர் தனது வாழ்க்கையை குற்றச்சம்பவங்கள் நிறைந்ததாக மாற்றிக்கொண்டார். தாராவியில் மிகவும் புகழ்பெற்றிருந்த இவர் ‘டான் வரதா’ என அறியப்பட்டார். சட்டவிரோத மது விற்பனை, சட்டவிரோத நில விற்பனை, கேம்பிளிங், மிரட்டி பணம் பறித்தல், கொலை, கடத்தல் உள்ளிட்ட அனைத்து குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டார். 1988ஆம் ஆண்டு இவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

மஸ்தான் மற்றும் வரதா இந்த இரு பெரும் டான்கள் மும்பையில் வலம் வந்த அதே காலத்தில் மற்றொரு டானாக இருந்தவர் கரிம் லாலா. இந்த மூன்று பேரும் மும்பையின் நிகழ் உலக தாதாக்களாக இருந்தாலும், அனைத்து விதத்திலும் இவர்களுக்குள் பிரச்னை ஏற்படாதவாறு நட்புடன் இருந்துள்ளனர். அவ்வப்போது சிறு, சிறு பிரச்னைகள் தோன்றிய போதிலும் அவர்கள் அதை சமரசம் செய்துகொண்டு இருந்துள்ளனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த கரிம் லாலா, அவரது குடும்பம் 1911ஆம் ஆண்டுக்கு மும்பைக்கு இடம் பெயர்ந்ததால் வந்தவர். பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டாலும், முக்கிய தொழிலதிபர்கள் அனைவருக்கும் பல்வேறு வர்த்தக விவகாரங்களில் இடைத்தரகராக கரிம் லால் இருந்துள்ளார். மற்றபடி மேற்கண்ட டான்கள் செய்த அனைத்து குற்றச்சம்பங்களையும் லாலாவும் செய்துள்ளார். 90 வயது வரை உயிருடன் இருந்த லாலா 2002ஆம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இந்த தாதாக்கள் குறித்து நாம் ஏன் திரும்பி பார்க்க வேண்டியிருக்கிறது என்றால், ஒவ்வொரு தாதாவின் வளர்ச்சிக்கு பின்னாலும் மோசமான அரசியல்வாதிகளின் ஆதரவும், காவல்துறையினரின் ஆதரவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி எந்தவொரு பின்புலமும் இல்லாதவர்களால் குறுகிய எல்லைக்குள் தான் இருக்க முடியும். பெரிய பெரிய குற்றங்கள செய்யவே முடியாது. அதாவது, குற்றவாளிகள் ஆரம்பத்திலேயே வளர்வதை தடுக்க வேண்டும். அப்படி தடுக்க தவறும் பட்சத்தில் இதுபோன்ற பலர் வந்து கொண்டேதான் இருப்பார்கள். இந்த தாத்தக்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக நாம் பழைய கதைகளை புரட்டவில்லை, இவர்களெல்லாம் எப்படி உருவாகிறார்கள் என்ற கேள்வியை மீண்டும் கேட்டுக்கொள்ளத்தான்.