Mobile use Mobile use
சிறப்புக் களம்

ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துவதில் இந்தியா 2-வது இடம்: ஆய்வில் தகவல்

ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துவதில் இந்தியா 2-வது இடம்: ஆய்வில் தகவல்

Madhalai Aron

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் செல்போன் பயன்படுத்தாமல் யாரும் இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடும் அதிகளவில் வளச்சியடைந்து விட்டது. ஒவ்வொரு முறையும் பல்வேறு வகையான மாற்றங்களுடன் புதிய புதிய அம்சத்துடன் புதிய செல்போன்கள் சந்தைகளில் விற்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் மற்றவர்களுடன் பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போதைய காலகட்டத்தில் பொழுது போக்குக்காவே அதிகம் செல்போன் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படி இந்தியாவிலும் ஸ்மார்ட்போன் வளர்ச்சியானது கிராமம், நகரம் என வித்தியாசம் இல்லாமல் வளர்ந்தது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் தான். சமீபத்தில், ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியல் வெளிவந்தது. அந்த பட்டியலின் படி, உலகிலேயே அதிகம் பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. 144 கோடி மக்கள் தொகை உள்ள சீனாவில் 91.1 கோடி மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், 43.9 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. மூன்றாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவில், 27 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இதனை தொடர்ந்து, இந்தோனேசியாவில் 16.02 கோடி பேரும், பிரேசிலில் 10.9 கோடி பேரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள்.

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் 9.99 கோடி பேரும், ஏழாவது இடத்தில் இருக்கும் ஜப்பானில் 7.57 கோடி பேரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். மெக்சிகோவில் 7 கோடி பேரும், ஜெர்மனியில், 6.5 கோடி பேரும், பத்தாவது இடத்தில் இருக்கும் வியட்நாமில் 6.1 கோடி பேரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

அத்தியாவசிய தேவைக்காக மட்டும் செல்போன் பயன்படுத்தும் காலம் மாறி, ஒவ்வொரு தேவைக்கும் செல்போனையே நாடிச் செல்கிறோம். பல்வேறு தேவைக்காகவும், பொழுது போக்குக்காகவும் பெற்றோர்களை விட பிள்ளைகளே அதிகம் செல்போனைப் பயன்படுத்துகின்றனர். செல்போனை பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை அதுவே அடிமைப்படுத்துவதும் நிலைக்குச் செல்லும்போதுதான் அதிக ஆபத்துகளைச் சந்திக்கிறோம். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நம் நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஜூலை 1-ம் தேதி இன்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறுகையில், மாணவர்கள் மொபைலிலேயே மூழ்கி இருப்பதால் கோபம், தற்கொலை முயற்சிக்கு ஆளாகின்றனர்; ஆன்லைன் வகுப்பின் பங்கேற்கும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகாமல் அரசு தடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.