சிறப்புக் களம்

நீட் தேர்வில் அதிகரிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி: கனவு நனவாகுமா?

நீட் தேர்வில் அதிகரிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி: கனவு நனவாகுமா?

webteam

தொடுவானத்தில் சிறு வெளிச்சம் தெரிகிறது. மெல்ல மெல்ல தமிழக மாணவர்கள் நீட் தேர்வின் அச்சத்தில் இருந்து விலகி வெற்றிக்கனியைப் பறிக்கத் தொடங்கியுள்ளனர். தமிழக அரசின் இலவசப் பயிற்சி மையத்தில் படித்த 1,615 மாணவர்கள் தேர்ச்சிபெற்றிருப்பது நம்பிக்கையை அளிக்கிறது. நீட் தேர்வில் தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டைவிட 8.87 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போதைய தேர்ச்சி விகிதம் 57.44. கடந்த ஆண்டு 48.57.  

இலவச நீட் தேர்வு பயிற்சி மையங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 738 பேரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 877 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான்கு மாணவர்கள் 500க்கும் அதிக மதிப்பெண்களும்,  15 பேர் 400 முதல் 500 வரையிலான மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். 300 முதல் 400 வரையான மதிப்பெண்களை 70 பேர் பெற்றுள்ளது உற்சாகம் தரும் செய்தியாக இருக்கிறது.

ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற அனைத்து மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேரமுடியாது என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது. கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றவர்களே சேரமுடியும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால், அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு நனவாகும். நாம் இன்னும் முழுமையான மகிழ்ச்சியைப் பெறமுடியவில்லை. அப்படி நடந்தால் இந்த ஆண்டு 325 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரக்கூடிய நிலை ஏற்படும்.

இதனிடையே, “அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கான சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கும் வரை மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படக்கூடாது என முதல் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தற்போது வெளியான நீட் தேர்வு முடிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பது வரவேற்கக்கூடியதாக இருக்கிறது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும்” என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், மருத்துவப் படிப்பில் நிறைய மாணவர்கள் சேரமுடியும். ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்தச் சட்டம் காத்திருக்கிறது. அனைத்துக் கட்சியினரும் சேர்ந்துபோய் ஆளுநரிடம் முறையிட்டால், அது சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது. நீட் தேர்வு தேவையில்லை என்பதைவிட, நாம் அதற்குத் தகுதியாக அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவேண்டும். மாணவர்களை அச்சமின்றி தேர்வு எழுதுபவர்களாக உருவாக்கவேண்டும். நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருந்தாலும், நல்ல மதிப்பெண்கள் பெற்றால்தான் மருத்துவப் படிப்பில் சேரமுடியும்” என்றார்.

டாக்டர் ரவீந்திரநாத் 

இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களைவிட தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக சர்ச்சை எழுந்தது. ஏகப்பட்ட குளறுபடிகளுக்குப் பிறகு திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு 15, 97,435 பேர் விண்ணப்பித்திருந்தனர்.  செப்டம்பர் 13 ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்வில் 13,66,945  பேர் பங்கேற்றனர். அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நீட் தேர்வு எழுதிய 99, 610 மாணவர்களில் 57, 215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர் ஜீவித்குமாருக்குப் பாராட்டு 

கடந்த காலங்களில் நீட் தேர்வு தொடர்பாக அனிதா உள்ளிட்ட மாணவ மாணவிகள் உயிரைத் துறந்த நிலையில், பெரியகுளம் அருகிலுள்ள சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜீவித்குமார், 664 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். முதல் முயற்சியில் அதிக மதிப்பெண்கள் பெறமுடியாத அம்மாணவர், பின்னர் ஆசிரியர்கள் உதவியுடன் நாமக்கல் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறார். அரசுப் பள்ளி மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜீவித்குமார் உருவாகியுள்ளார். 

பிரின்ஸ் கஜேந்திர பாபு 

"எனக்கு டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் முதலில் இல்லை. ஆனால், நீட் தேர்வு குறித்து பயந்து பலரும் தற்கொலை செய்வது வருத்தமாக இருந்தது. நீட் தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல என்பதை நிரூபிக்கவே  படித்தேன். மத்திய பாடத்திட்டப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து படித்தேன். வழிமுறைகளைத் தெரிந்துகொண்டால் நீட் மட்டுமல்ல எல்லா தேர்வுகளுமே மிக எளிமையானதுதான்" என்ற ஜீவித்குமாரின் வார்த்தைகள் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு தெளிவை உருவாக்கும்.  

ஜீவித்குமாரின் தேர்ச்சிக்குப் பின்னால், நீட் தேர்வை எதிர்த்தும் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் ஆசிரியப் பணியைத் துறந்த சபரிமாலாவின்  பங்களிப்பும் இருக்கிறது. அவர் சில தன்னார்வலர்கள் உதவியுடன் ஜீவித்குமாரைப்  படிக்கவைத்துள்ளார். அதேபோல திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜன் மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் எட்டாவது  இடமும் பெற்றுள்ளார். இவரது பின்னணி கொஞ்சம் வசதியானது. அப்பா ஸ்பின்னிங் மில் அதிபர்.

ஸ்ரீஜன், முதல் முயற்சியில் 385 மதிப்பெண்களை  மட்டுமே பெறமுடிந்தது. நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து தேர்வாகியுள்ளார்.  இரண்டு ஆண்டுகள் செலவிட்ட அவர் 710 மதிப்பெண்கள்  பெற்று, தேசிய அளவில் தேர்ச்சிபெற்ற ஓபிசி பிரிவினர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோஹன பிரபா 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.

பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, நீட் தேர்வு குறித்த மாறுபட்ட பார்வையை முன்வைக்கிறார். “நம்மிடம் எத்தனை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் இருக்கின்றன என்பது முக்கியம். நீட் தேர்வில் தேர்ச்சிபெறுவது மட்டுமே முக்கியமல்ல. தேர்ச்சி பெற்றவர்களில் எத்தனை பேருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்பது கேள்விக்குறி. குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்காது. ஏழை மாணவர்கள் எப்படி தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேரமுடியும். கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்காக அரசுப் பள்ளி மாணவர்கள் இன்னொரு ஆண்டையும் செலவழிக்கிறார்கள்.

பிளஸ் டூ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வில் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது நியாயமான முறையாக இருக்கும். நீட் தேர்வுக்காக தனி பாடத்திட்டம். கல்லூரியில் படிக்கவேண்டிய பாடத்தை ஒரு மாணவன் ஏன் பள்ளிக் கல்வியிலேயே படிக்கவேண்டும். தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் இது சாத்தியமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.  

நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள், மாநில ஒதுக்கீடு பெற விரும்பினால், அவர்கள் மாநில அளவில் விண்ணப்பிக்கலாம் என்றும், தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களும், மாநில அரசு கலந்தாய்வு மூலமே கல்லூரிகளில் சேர முடியும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் மத்திய அரசு நடத்தும் கலந்தாய்வு மூலம் சேரவேண்டும்.

பொன். தனசேகரன் 

“அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் அனுமதி கிடைத்த பின்னர் தமிழக அரசு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிடும் என அறிவித்துள்ளது.  அப்போது மாணவர்களின் தரவரிசைப் பட்டியலின்படி இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கவேண்டும்” என்றார் கல்வியாளர் பொன். தனசேகரன்.

மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 4,200 எம்.பி.பி.எஸ். இடங்கள்  உள்ளன.  புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்தது.  விருதுநகர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பதினோரு புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1000 இடங்கள் கிடைக்கும். அதில் 85 சதவீதம் தமிழக மாணவர்களுக்கும்,  15  சதவிகிதம்  அகில இந்திய ஒதுக்கீட்டிலும் நிரப்பப்படும். நடப்பு ஆண்டில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேரும் அரசுப் பள்ளி  மாணவர்களின்  எண்ணிக்கை  ஓரளவு உயரும் என்பது பெரும் நம்பிக்கை.