சிறப்புக் களம்

‘மதுவினால் அதிகரிக்கும் இளம் வயதினரின் உயிரிழப்புகள்’ - இன்று உலக கல்லீரல் அழற்சி தினம்

‘மதுவினால் அதிகரிக்கும் இளம் வயதினரின் உயிரிழப்புகள்’ - இன்று உலக கல்லீரல் அழற்சி தினம்

Veeramani

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14 இலட்சம் பேரை கொல்லும் ஆட்கொல்லி நோயாகவும், மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளவயதினரை பலிகொள்ளும் நோயாகவும் கல்லீரல் அழற்சி நோய் மாறியுள்ளது. கல்லீரல் அழற்சி எனப்படும் ஹெபடைடிஸ் நோய் (மஞ்சள் காமாலை) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக கல்லீரல் அழற்சி தினம் இன்று(ஜூலை 28) அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மதுப்பழக்கம் அதிகரித்துவரும் நிலையில், சமீப காலங்களில் அதிகளவிலான மரணங்கள் கல்லீரல் அழற்சி நோய் பாதிப்பால் ஏற்படுகின்றன. அதனால் தற்போது இந்த கல்லீரல் அழற்சி தினம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

கல்லீரல் அழற்சி நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, உலக ஹெபாடைடிஸ் கூட்டமைப்பு, 2008 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதியை முதல் உலகக் கல்லீரல் அழற்சி நாளாக அறிவித்தது. அதன்பின்னர் 2010 ஆம் ஆண்டு, மே மாதம் நடந்த 63வது உலக சுகாதார நிறுவனத்தின், உலக நல்வாழ்வு கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானத்தைத் தொடர்ந்து, உலகக் கல்லீரல் அழற்சி நாள் உலகளவில் முக்கியம் வாய்ந்ததானது. ஹெபடைடிஸ் பி நச்சுயிரியைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுபெற்ற அறிவியலாளர் பாருச் சாமுயேல் பிளம்பெர்க்கை (Baruch Samuel Blumberg ) நினைவுகூரும் விதமாக, அவர் பிறந்த நாளான ஜூலை 28 ஆம் தேதியன்று இந்நாள் அனுசரிக்கப்படும் என்று தேதி மாற்றப்பட்டது.

உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட எட்டு மக்கள் நல்வாழ்வுக்கான பரப்புரை தினங்களில்  ஒன்றாக உலகக் கல்லீரல் அழற்சி நாளும் உள்ளது. உலக சுகாதார நாள், உலக குருதிக் கொடையாளர் தினம், உலக நோய் எதிர்ப்புத் திறனூட்டல் வாரம், உலக காசநோய் தினம், உலக புகையிலை எதிர்ப்பு தினம், உலக மலேரியா நாள், உலக எய்ட்ஸ் நாள் ஆகியவற்றுடன் கல்லீரல் அழற்சி தினமும் இடம்பெற்றுள்ளது.

கல்லீரல் அழற்சி நோய் பாதிப்புகள்:

உலகளவில் சுமார் 500 மில்லியன் மக்கள் கல்லீரல் அழற்சி நோயுடன் வாழ்கின்றனர். சரியான நேரத்தில் உரிய கவனமும், சிகிச்சையும் அளிக்கப்படாத கல்லீரல் அழற்சி நோய்கள் முற்றி, கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்ற சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும்.

எயிட்ஸ் நோய்தான் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோய் என்று அதிகம் கவனம் பெற்றுள்ள நிலையில், உண்மையில் எயிட்ஸ் நோயின் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை விட அதிகமாக, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14 இலட்சம் பேர் கல்லீரல் அழற்சி நோய் பாதிப்பால் மரணமடைகின்றனர்

மதுப்பழக்கம், போதைப்பழக்கம், தேவையற்ற மருந்துகள் உட்கொள்பவர்கள், பாஸ்ட்புட் உணவுகள், எண்ணைய் உணவுகள், சுத்தமற்ற தண்ணீர் ஆகியவை காரணமாக கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுகிறது. சமீப காலங்களில் இந்தியாவில் அதிகரிக்கும் மதுப்பழக்கம் காரணமாக அதிகளவில் கல்லீரல் செயலிழப்பு மரணங்கள் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன, அதில் பெரும்பாலானவை இளம்வயது மரணங்கள் என்பது வேதனை தரும் செய்தி.

ஹெபடைட்டிஸ் சி வைரஸ் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது என்றாலும் காலப்போக்கில் கல்லீரலில் தழும்பை ஏற்படுத்தி கல்லீரல் அரித்துப்போகும் அளவுக்கு இதன் பாதிப்பு தீவிரமாக இருக்கும். இத்தகைய பாதிப்புகளுக்கு மதுப்பழக்கம், போதைப்பழக்கம் மட்டுமல்லாமல் ரசாயன கலந்த உணவுகள் மற்றும் கொழுப்பு போன்றவையும் இந்நோய்க்கு காரணமாக சொல்லப்படுகிறது.

கல்லீரல் அழற்சி நோயை தவிர்ப்பது எப்படி?

ஹெபடைட்டிஸ் சி வைரஸ் தாக்காமலிருக்க தேவையற்ற ஊசிமருந்துகளைத் தவிர்ப்பதுடன் மதுப்பழக்கம், போதைமருந்து, துரித உணவுகள், மசாலா, எண்ணெய் உணவுகள் உள்ளிட்ட பழக்கவழக்கங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். இரவில் அதிக நேரம் கண்விழிப்பவர்கள், தூக்கம் சரிவர இல்லாதவர்களுக்கும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே முறையாக தூங்குவதும் கல்லீரல் நோயை குணமாக்கும்.

அதேநேரத்தில் கல்லீரலில் அழற்சி உள்ளவர்கள் அடிக்கடி திராட்சை ஜூஸ், கேரட் ஜூஸ், எலுமிச்சைச் சாறு போன்றவற்றை குடித்து வந்தால் கல்லீரல் செல்கள் பலமடையும். அன்றாட சமையலில் பூண்டு, மோரில் சீரகத்தூள் கலந்து குடித்து வந்தால் ஜீரணம் மேம்படும். சமையல் எண்ணெயை அதிகளவில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதுடன், அசைவ உணவுகளை அதிகம் உண்பதை தவிர்ப்பது கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கு நல்லது.இவைத்தவிர கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும் நல்லது.