நாட்டிலேயே அதிக எழுத்தறிவு கொண்ட மாநிலமான கேரளாவில் வரதட்சணை கொடுமைகள் அதிகரித்துள்ளது நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்தது. இதன்பின்னர் விழித்துக்கொண்ட கேரள அரசு வரதட்சணை கொடுமையை ஒழிக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கேரளாவை உலுக்கிய மூன்று வரதட்சணை மரணங்கள்:
வரதட்சணை கொடுமையால் கேரளாவில் மூன்று பெண்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. கொல்லத்தை சேர்ந்த விஷ்மயா என்ற கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவி கடந்த ஜூன் 20ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். விஷ்மயாவின் திருமணத்துக்கு அவரது கணவருக்கு டயோட்டோ யாரிஸ் கார், ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலம், 100 பவுன் தங்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால், அரசு உதவி மோட்டார் வாகன ஆய்வாளராக இருக்கும் விஷ்மயாவின் கணவர் தனது அந்தஸ்துக்கு ஏற்றபடி மனைவியின் வீட்டார் கார் வாங்கித் தரவில்லை என்று குற்றம் சாட்டி விஸ்மயாவை தொடர்ந்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த விஷ்மயா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவனந்தபுரம் விழிஞ்சம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவரும் வரதட்சணை கொடுமை காரணமாக கடந்த ஜூன் 22ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஆலப்புழாவை சுசித்திரா என்பவர் ஜூன் 22ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இப்படி கேரளாவில் அடுத்தடுத்து பதிவான மூன்று மரணங்களை மக்களை நிலைகுலைய செய்தது.
கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 66 பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரதட்சணை கொடுமை வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக வரதட்சணை ஒழிப்பு அதிகாரிகளை நியமித்த அரசு:
வரதட்சணை கொடுமை கேரளாவில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு அம்மாநில அரசு உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் பிராந்திய அடிப்படையில் இருந்த வரதட்சணை தடுப்பு அதிகாரிகள் பதவி இப்போது அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரதட்சணை தடை சட்டத்தை அமல்படுத்தும் அலுவலர்கள் கேரளாவின் 14 மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள், வரதட்சணை தடை சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளாக செயல்படுவார்கள் எனவும், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் துறை இயக்குநர் இப்போது வரதட்சணை தடுப்பு சட்டத்தின் தலைமை அலுவலராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாவட்ட அளவில் வரதட்சணை தடுப்பு குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வழிகாட்டுதல் வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வரதட்சணை தொடர்பான புகார்களை அளிக்க 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்ணும் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வரதட்சணை மறுப்பு சான்றிதழ் - அரசு ஊழியர்களுக்கு கட்டாயம்:
கேரளாவில் அரசுப்பணியாளர்கள் மட்டத்தில் வரதட்சணை அதிகமாக வாங்கப்படுவதனை கண்காணித்த கேரள அரசு இதைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசுப் பணியில் இருக்கும் ஆண்கள் தங்கள் திருமணத்தின் போது வரதட்சணை மறுப்பு சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது.
இதன்படி, கேரளாவில் அரசுப்பணியில் இருக்கும் ஆண்கள் தங்கள் திருமணத்தின்போது பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை வாங்கவில்லை என்னும் சான்றிதழை பெற்று ஒரு மாதத்துக்குள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் சான்றிதழில் மணமகள், மணமகளின் பெற்றோர் ஆகியோர் கையெழுத்திட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் துறையில் பணி செய்வோரின் திருமண விவரங்கள், வரதட்சணை மறுப்பு சான்றிதழ் பெற்றது குறித்து அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை வரதட்சணை வாங்கிக்கொண்டு அரசு அதிகாரிகள் திருமணம் செய்தது தெரியவந்தால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் கேரள அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“வரதட்சணை பெற்றால் பட்டம் ரத்து” – பல்கலைக்கழகம் அதிரடி:
கேரளாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான கோழிக்கோடு பல்கலைக்கழகம், தங்கள் கல்லூரிகளில் படித்த மாணவர்கள் வரதட்சணை வாங்கினால் அவர்களின் பட்டம் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.
கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் சேர்க்கை விண்ணப்பம் மற்றும் பட்டம் பெறும் விண்ணப்ப படிவத்தில், 'திருமணத்திற்கு வரதட்சணை வழங்கவோ அல்லது வாங்கவோ மாட்டேன்' என்ற உறுதிமொழியில் கையெழுத்திடுவதை கட்டாயமாக்கி உள்ளது, இதன்பின்னரே மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும். ஒருவேளை உறுதிமொழியை பின்பற்றாமல் பிற்காலத்தில் வரதட்சணை வழங்கினால் அல்லது வாங்கினால் அந்த மாணவ, மாணவியரின் பட்டம் ரத்து செய்யப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 391 உறுப்புக் கல்லூரிகளில் இந்த வரதட்சணை உறுதிமொழி ஏற்பு பின்பற்றப்படவுள்ளது. கேரளாவின் மீன்வளம் மற்றும் கடல் சார் பல்கலைகழகத்தில் 386 மாணவர்களும் இதுபோன்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். வரதட்சணை கொடுமை தொடர்பாக கேரள பெண்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரப்புரையும் செய்து வருகின்றனர்.
மேலும், கேரளாவில் வரதட்சணை தடுப்பு சட்டத்தினை கடுமையாக்கியுள்ள அரசு, இது தொடர்பான கண்காணிப்பு மற்று விழிப்புணர்வினை அதிகரிக்க காவல்துறைக்கும், அரசுத்துறைகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
வரதட்சணை கொடுமைகள் தொடர்பான தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவரும் கேரள முதல்வர் பினராயி விஜயன், “தற்போதுள்ள திருமண நடைமுறைகளில் நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. திருமணம் என்பதை பெற்றோர் தங்களின் சொத்து மதிப்பின் பகட்டைக் காட்டும் கண்காட்சி போன்று நடத்தக்கூடாது. வரதட்சணையை ஊக்குவிக்கும் செயல்கள் நம் பெண் பிள்ளைகளை நாமே ஒரு பண்டத்துக்கு நிகராக தரத்தை குறைப்பதற்கு சமம். பெண் பிள்ளைகள் பண்டமல்ல அவர்கள் மனிதர்கள். அவர்களை இன்னும் கவுரவமாக நடத்த வேண்டும். ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்தும் சமுதாயமே நியாயமான சமுதாயம். அண்மையில் நடந்துள்ள குடும்ப வன்முறைச் சம்பவங்கள் கேரளாவை இன்னும் நியாயமான சமூகமாக மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. அநீதியை ஒழிக்க அரசும் மக்களும் தோளோடு தோள் சேர்ந்து இயங்குவர்" எனத் தெரிவித்துள்ளார்.