தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி காடுகளில் அமைந்துள்ள குரங்கணி மலைப் பகுதிக்கு மலையேற்றம் சென்ற 14 பேர் பரிதாபமாக காட்டுத் தீயிற்கு பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கு பின்பு ட்ரெக்கிங் செல்பவர்கல் முறையாக விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா ? வனத்துறை எப்படி அனுமதி வழங்குகிறது ? என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடந்த இந்தச் சம்பவத்துக்கு பின்பு கர்நாடகம் மற்றும் கேரள அரசு கோடைக்காலம் முடியும் வரை மலையேற்றப் பயிற்சிக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. எனினும், மலையேற்ற ஆர்வலர்கள் ட்ரெக்கிங் செல்வதற்கு முன்பு சில அடிப்படை விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
அவை:
1) உங்கள் குழுவில் 15 பேருக்கு மேல் இருக்கக் கூடாது.
2) நீங்கள் ட்ரெக்கிங் செல்ல இருக்கும் மலைப்பகுதி, எந்த வனத்துறை சரகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறதோ, அந்த அதிகாரிகளின் அனுமதிக் கடிதம் பெறுங்கள்.
3) முறையான அனுமதி பெற்றுச் சென்றால் காடுகளில் ஆபத்தான பகுதிகளில் Armed Guard ஒருவரை நியமித்து வனத்துறை உடன் அனுப்பும்.
4) பயிற்சி பெற்ற வன அலுவலர், அந்த மலையின் பல்வேறு குறுக்கு வழிகள், ஒற்றையடித் தடம் மூலமே ஓடி மலையின் மற்றொரு பகுதியை
அடைதல், ஒரு நீரோடை குறுக்கிட்டால் அதில் எந்த இடம் இடுப்பளவு ஆழம் மட்டுமே இருக்கும் போன்றவற்றை நன்கு அறிந்திருப்பார்.
5) நீங்கள் தேர்ந்தெடுக்கும் மலைப்பகுதி, கூடிய வரை தமிழ்நாட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
6) பக்கத்து மாநில எல்லைப் பகுதிகளை ஒட்டிய வனப் பகுதிகளாக இருந்தால், ஒரு வேளை ஏதேனும் புகார் அளிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், எந்த மாநில செக் போஸ்ட் ? யாருடைய JURISDICTION என்பதில் குழப்பங்கள் வரலாம்.
7) வனப் பகுதிகளின் உட்பகுதிக்கு சென்றவுடன் நாம் முதலில் தவறவிடுவது திசை.
8) வனத்தின் உள்பகுதிக்கு செல்லும்போது உள்ளூர் மக்கள் / வனத் துறையினர் ஒவ்வொரு மரத்திலும் 'அம்புக் குறி' போட்டு வைத்து இருப்பார்கள்! அந்த அம்புக் குறிகள் காட்டும் தடத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும்.
9) டிரெக்கிங்கின் போது சாகச உணர்வு கூடவே கூடாது. குழுவினரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுவது அவசியம்.
10) வனத்துறை அலுவலர்தான் வர வேண்டும் என்றில்லை- அதே மலைக்கிராமங்களில் இந்த மலைத் தடத்தை அன்றாடம் பயன்படுத்தும் மலைவாழ் கிராம மக்களில் ஒருவரின் துணையையும் நாடலாம் பல்வேறு மிருகங்களின் சாணம், சிறுநீர், அவை காய்ந்திருக்கும் பதம், அவை வெளிப்படுத்தும் துர்கந்த வீச்சு வைத்தே விலங்கின் நடமாட்டத்தை அறிந்துவிடுவார்கள்.
11) 'இயற்கையைக் காப்போம்' என்ற உணர்வுடன் பயணம் செய்ய வேண்டும், பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க வேண்டும், சத்தமாக பேசக் கூடாது. ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை.