சிறப்புக் களம்

’இது மட்டும் நடந்திருந்தால் வரலாறே மாறியிருக்கும்’ சூழ்ச்சியால் வீழ்ந்த தீரன் சின்னமலை கதை

’இது மட்டும் நடந்திருந்தால் வரலாறே மாறியிருக்கும்’ சூழ்ச்சியால் வீழ்ந்த தீரன் சின்னமலை கதை

ச. முத்துகிருஷ்ணன்

ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்து நம் மண்ணின் விடுதலைக்காக உயிரையும் தியாகம் செய்த பூலித்தேவன், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் வரிசையில் தவிர்க்கவே முடியாத மற்றொரு பெயர் “தீரன் சின்னமலை”. பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் வழித்தோன்றலாக ஆங்கிலேயர்களை மிரளச் செய்த அவரது கதை சிலிர்ப்பைத் தரக்கூடியது. அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த 5 முக்கிய நிகழ்வுகளையும், அவர் எப்படி வரலாறாக மாறினார் என்பதையும் இத்தொகுப்பில் காண்போம்.

1. தீர்த்தபதி கவுண்டர் எப்படி தீரன் சின்னமலை ஆனார்?

1756 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகிலுள்ள மேலப்பாளையத்தில் பழைய பட்டக்காரர்கள் பரம்பரையில் ரத்னசாமி கவுண்டர் - பெரியாத்தாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர்தான் தீரன் சின்னமலை. அவருக்கு பிறந்ததும் பெற்றோர் வைத்த பெயர் “தீர்த்தபதி கவுண்டர்” என்பதுதான். அவர் பிறந்த கொங்கு நாடு அப்போது மைசூர் மன்னர் ஹைதர் அலியின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததால், கொங்கு நாட்டின் வரிப்பணம் தீர்த்தபதியின் ஊர்வழியாகத்தான் மைசூருக்கு எடுத்துச் செல்லப்படும்.

ஒருநாள் தனது நண்பர்களுடன் அவ்வழியாகச் சென்ற தீர்த்தபதி மைசூருக்கு சென்று கொண்டிருந்த வரிப்பணத்தை பறித்து ஏழை எளியோருக்கு விநியோகம் செய்தார். பணத்தை எடுத்துச் சென்ற தண்டல்காரர்கள் அதை எதிர்த்து கேள்வி கேட்டபோது, “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை வரிப்பணத்தை பறித்துவிட்டதாக ஹைதர் அலியிடம் போய்ச் சொல்” என துரத்தினார். அப்போது முதல் தான், தீர்த்தபதி கவுண்டர் “தீரன் சின்னமலை” என்று அழைக்கப்பட துவங்கினார்.

2. ஹைதர் அலியுடன் பகை; மகன் திப்புவுடன் நட்பு:

தீரன் சின்னமலை வாழ்ந்த காலத்தில் ஆங்கிலேயர்களும் தென்னிந்தியா முழுவதும் வலுவாக காலூன்ற துவங்கியிருந்தனர். 1782 ஆம் ஆண்டு மைசூர் மன்னர் ஹைதர் அலி மரணமடைய, ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் திப்பு சுல்தான். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்க்க துணியவே, பெரும்படையை திரட்டிய தீரன் சின்னமலை திப்புவுடன் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்க்க விரும்பினார். தனது தந்தையின் வரிப்பணத்தை நடுவழியில் பறித்த தீரனைப் பற்றி முன்பே அறிந்த திப்பு சுல்தான், அவரது வீரத்தை எண்ணி அவருடன் நட்புறவு பாராட்ட முடிவெடுத்தார். ஆங்கிலேயர்களை எதிர்க்கும் புள்ளியில் இருவரும் ஒன்றிணையவே, இந்த நட்பு சாத்தியமானது.

3. திருப்பத்தை ஏற்படுத்திய திப்புவின் திடீர் மரணம்:

திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து மைசூர் போர்களில் பங்கேற்கத் துவங்கினார் தீரன் சின்னமலை. ஹைதர் அலி மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலோ- மைசூர் போரில், தீரன் சின்னமலையின் கொங்குப் படையின் உதவியோடு சித்தேசுவரம், மழவல்லி போன்ற இடங்களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த போர்களில் அவர்களின் படைகளுக்கு பெரும் சேதம் விளைவித்து, வெற்றிவாகை சூடியது திப்புவின் படை.

திப்புசுல்தான் – தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளை அடுத்தடுத்த போர்களில் கையாண்டனர். அப்படித்தான் நான்காம் மைசூர் போரிலும் தங்களது படைகளோடு துணிச்சலுடனும், வீரத்துடனும் திப்புவும், சின்னமலையும் அயராது போரிட்டனர். எதிர்பாராதவிதமாக திப்பு சுல்தான் 1799 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி போர்க்களத்திலே வீரமரணமடைந்தார். ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவில் மிக வலுவான அடித்தளம் அமைக்க திப்புவின் மரணம் வழிவகுத்தது.

4. திப்புவின் தளபதிகளுடன் கோவைப்புரட்சி நடத்திய தீரன்:

திப்பு சுல்தான் மரணத்துக்குப் பிறகு அரச்சலூர் அருகே ஓடாநிலையில் கோட்டை ஒன்றைக் கட்டிய தீரன் சின்னமலை, ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக சிவன்மலை அருகே அப்பகுதி இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கத் துவங்கினார். தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அண்டைய நாட்டில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார். திப்பு சுல்தானின் படையில் முக்கிய வீரர்களாக இருந்த, தளபதிகளாகச் செயல்பட்ட தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி, விருப்பாச்சி கோபால நாயக்கர் ஆகியோருடன் இணைந்து 1800 ஆம் ஆண்டு கோவைக் கோட்டையைத் தகர்க்க திட்டமிட்டார் சின்னமலை.

கேரளம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, காங்கேயம், மைசூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தென்னிந்தியாவில் கலகம் செய்யும் பாளையக்காரர்களை அடக்குவதற்கான வியூகம் இந்த கோவைக் கோட்டையில்தான் ஆங்கிலேயர்களால் தீட்டப்பட்டது. ஆதலால்தான் தீரன் சின்னமலை உள்ளிட்ட பாளையக்காரர்கள் அனைவரும் இணைந்து பேசி கோவையை இலக்காக்க முடிவெடுத்தனர். ஒவ்வொருவரின் படையும் கோவை நகர்ப்பகுதி, சத்திய மங்கலம், தாராபுரம், கேரளத்தை ஒட்டிய கோவையின் பகுதி உள்ளிட்டவற்றை ஒரே நேரத்தில் தாக்கி ஆங்கிலேயர்கள் முடிவெடுக்க முடியாமல் திணறும்போது அவர்களை நிர்மூலமாக்கி கோட்டையைக் கைப்பற்றுவதே இவர்களது திட்டமானது. இதற்கான படைவீரர்கள் 2 மாதங்களாக பயணப்பட்டு முன்குறிப்பிட்ட பகுதிகளில் மக்களோடு மக்களாக கலந்து, தளபதிகளின் சமிஞைக்காக காத்திருந்தனர்.

இந்த படைவீரர்களில் இஸ்லாமிய இளைஞர்கள், பல்வேறு சாதியைச் சேர்ந்த இளைஞர்களும் சாதி மத பேதங்களை கடந்து நாட்டை காக்க, ஆங்கிலேயர்களை அழிக்க காத்திருந்தனர். ஆனால் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் திட்டமிட்ட நேரத்தில் சமிஞை கிடைக்காமல் வீரர்கள் திணறத் துவங்கினர். நகருக்குள் ஏதோ சதி நடப்பதை ஆங்கிலேயர்கள் அறிந்துகொண்டபின், பல இடங்களில் தாக்குதலையும் தேடுதல் வேட்டையையும் துவக்கினர். இதை தெரிந்து கொண்ட படைவீரர்கள் காட்டுக்குள் சென்று பதுங்கிய போதும், 40 க்கும் மேற்பட்டோர் ஆங்கிலேயர் வசம் சிக்கி, மக்களுக்கு அச்சம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நகருக்குள் பொதுமக்கள் சூழ அனைவரையும் தூக்கிலிட்டனர். இவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாமிய இளைஞர்கள் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறாக தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுத வாய்ப்பிருந்த அந்த கோவைப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

தோல்வியைக் கண்டு மனம் தளராமல் தொடர்ந்து தன் முயற்சியைக் கைவிடாத தீரன் சின்னமலை, 1801 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி - காவிரிக்கரையில் எதிர்த்து போர்புரிந்து வெற்றிக் கண்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, 1802 ஆம் ஆண்டு சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கினார். 1803 ஆம் ஆண்டு அரச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார் தீரன் சின்னமலை.

5. சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தீரன்:

ஆங்கிலேயர்களுக்கு தொடர்ந்து தோல்வியை பரிசளித்து, வெற்றியை மட்டுமே பார்க்கத் துவங்கியிருந்தார். இவரை இப்படியே விட்டால் மற்ற பாளையக்காரர்களும் ஒன்றாக இணைந்து விடுவார்கள் என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள், போர்க்களத்தை கைவிட்டு சூழ்ச்சிக்களத்திற்குள் களம் கண்டனர். தீரன் சின்னமலையின் சமையலர் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் கூறி, அவன் மூலம் தீரன் சின்னமலையை ஆங்கிலேயரிடம் சிக்குமாறு செய்தனர். இதையடுத்து தீரன் சின்னமலையையும் அவனது சகோதரர்களையும் கைது செய்த ஆங்கிலேயர்கள் அவரை சங்ககிரியில் உள்ள மலைக்கோட்டைக்கு அழைத்துச் சென்று தூக்கிலிட்டனர். 1805 ஆம் ஆண்டு சின்னமலையின் தீரனின் மூச்சு இப்படித்தான் நின்று போனது.

கோவை நோக்கிய தீரன் சின்னமலையின் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால், தென்னிந்தியாவின் வரலாறே தலைகீழாக மாறியிருக்கும். அது நிகழாமல் போனது நம் துரதிர்ஷடமே!