கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றாக, அறிகுறிகளற்ற மற்றும் அறிகுறிகள் குறைவாக இருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பவர்களை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டாம் என்றும், அவர்கள் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி செய்யும்போது, தீவிர பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு, மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் போகும் நிலை முடிந்தவரை தவிர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.
தனிமைப்படுத்திக்கொள்வதில் பார்க்கப்படும் முக்கியமான சிக்கல் என்னவெனில், தனிமைப்படுத்திக்கொள்ளும் நபர்களில், முறையாக வழிமுறைகளை மேற்கொள்ளாமல், மேற்கொண்டு நோயை பரப்புகின்றனர். இதை தடுப்பதற்காக, தனிமைப்படுத்திக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம். அந்த வழிகாட்டு நெறிமுறைகள், இங்கே :
`குறிப்பு : சுவாசக்குழாய் சார்ந்த சிறு சிறு அசௌகரியங்கள், லேசான அல்லது சீரான உடல் வெப்பநிலை - இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே, அறிகுறிகளற்ற / அறிகுறிகள் குறைவான கொரோனா வகையின்கீழ் வருவார்கள். இவர்கள் மட்டுமே, தனிமைப்படுத்தலுக்கும் அனுமதிக்கப்படுவர். இவற்றோடு சேர்த்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால்கூட, அவர் தொடர்ந்து வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கக்கூடாது. உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.
வீட்டு தனிமையில் இருப்போருக்கான ஆலோசனைகள் :
* வீட்டில் இருக்கும் அனைவருடனும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நோய் குணமாகும் வரை, வீட்டில் மற்றவர்கள் உபயோகிக்கும் பாத்திரங்கள், துணிகளை உபயோகிக்க கூடாது. வீட்டுக்குள் இருக்கும்போதும், கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
* தெரியவரும் ஒருசில அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவும் வழிகளை பின்பற்ற வேண்டும். உதாரணமாக, நிறைய தண்ணீர் குடிப்பது ; மருத்துவர் ஆலோசனையில் வைட்டமின் மாத்திரைகள் - இருமல் தும்மலை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
* தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலேயே இருப்பவர் என்றாலும், தொடர் மருத்துவ ஆலோசனை அவசியம். அப்போதுதான் ஒருவேளை அறிகுறிகள் அதிகமானால், உடனடியாக மருத்துவரிடம் சொல்லி, அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியும்.
* உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி உதவியுடன், அடிக்கடி வெப்பநிலையை பரிசோதிக்கவும். உடலில் ஆக்ஸிஜன் அளவை பரிசோதிக்கும் வழிமுறைகளை மருத்துவரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு, அதையும் வீட்டிலேயே பரிசோதிக்கலாம். இந்த அளவு அதிகரிக்கவோ குறையவோ செய்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.
* மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அனுகவும். 5 நாள்களுக்கும் மேலாக வறட்டு இருமல், காய்ச்சல் போன்றவை தெரியவந்தால், மருத்துவரை அணுகவும்.
* ஒருவேளை நீங்கள்
60 வயதுக்கு மேற்பட்டவர்,
இதய நோய் - ரத்த அழுத்தம் போன்ற சிக்கல் இருப்பவர்,
நுரையீரல் / சிறுநீரகம் / கல்லீரம் சார்ந்த சிக்கல் இருப்பவர்,
உடல் பருமன் உள்ளவர்
நோய் எதிர்ப்பு திறன் சார்ந்த சிக்கல் இருப்பவர்
என்றால், தனிமைப்படுத்தலின்போது மிக மிக கவனமாக இருங்கள். எந்தவொரு அசௌகரியம் ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுவிடுங்கள்'