மூன்றாவது அணி பற்றி குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. அதற்கு ஒரு முக்கியக் காரணம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். "பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணி தேவை, அதற்கு நான் தலைமை ஏற்கிறேன், தெலங்கானா போராட்டத்தில் வென்று, தனி மாநிலம் உருவாக்கியது போலவே, இந்த 3வது அணிக்கும் வெற்றி ஈட்டுவேன்" என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சொன்னதை இன்றைய சூழலில் எப்படிப் பார்ப்பது ?
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே, தமிழகத்தில் "அந்த மோடி வேண்டுமா.... இந்த லேடி வேண்டுமா...?" என்று பேசி, நம்மை அதிர்ச்சியடைய வைத்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. மேலும் யாரையும் கூட்டணியில் சேர்க்காமல், துணிந்து தனித்து நின்று அதில் மிகப் பெரிய வெற்றியும் பெற்று, நாடாளுமன்றத்திலேயே 3வது மிகப் பெரிய கட்சியாக, அதிமுகவை முன்னிருத்தினார். இப்போது ஜெயலலிதாவும் இல்லை திமுக தலைவர் கருணாநிதியும் இல்லை.
மூன்றாவது அணி என்பது அத்தனை எளிதான விஷயமா?
இதற்கு முன்பும் பல முறை மூன்றாவது அணி என்ற முழக்கத்தை பலரும் முன் வைத்துள்ளனர். குறிப்பாக பொதுத்தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு முறையும் அதற்கு சில மாதங்களுக்கு முன்பாக இந்த முழக்கம் திடீரென எழும்பும். ஆனால், இதுவரை அது எதனையும் பெரிதாக சாதிக்கவில்லை. இந்த முறை தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ். தெலுங்கானா சட்டசபையின் ஆயுட்காலம் முடியும் முன் ஆட்சியை கலைத்து தேர்தலை சந்தித்து 88 இடங்களில் வெற்றிப்பெற்று தனி பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சர் ஆனார். இதனைதொடர்ந்து மூன்றாம் அணியை உருவாக்க 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.
சந்திரசேகர ராவின் மூன்றாவது அணிக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் சந்திர சேகர் ராவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ளதால் மூன்றாவது அணியின் நிலை என்ன?
தென்கோடியான தமிழகத்தில் 3 வது அணிக்கு திமுக தலைவர் ஸ்டாலினை முன்னதாகவே கேசிஆர் அழைத்தார். ஆனால் தற்போது காங்கிரஸ் கூட்டணியில் தான் திமுக என உறுதியாகியுள்ளது. பக்கத்தில் கேரளா,அங்குள்ள இடதுசாரிகள், குறிப்பாக மார்க்ஸிஸ்ட்கள், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பதா என்பதில் உள்கட்சி குழப்பம். தேசிய அளவில் தொடரும் இந்தப் பிரச்னைக்கு, இப்படி ஒரு தீர்வு வரும் என்றால், ஒருவேளை பிரகாஷ் கரத்தின் கை வலுப் பெறலாம். சீத்தாராம் யெச்சூரியின் யோசனை, மீண்டும் தோற்க நேரலாம். ஆனால், பாஜக கால் ஊன்றுவதைத் தடுக்க எது சரியான அணுகுமுறை என முடிவு செய்தால், யெச்சூரியின் கை ஓங்கும் என எதிர்பார்க்கலாம். இது விரைவில் தெரிந்துவிடும்.
கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக இடையேதான் கடும் போட்டி இருக்கும் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம், 3வது அணிக்கு வலுசேர்க்குமா என்ற கேள்வி தொடர்கிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசத்துக்கு காங்கிரஸ் கூட்டணி தான் அதில் மாற்றமே இல்லை. ஒடிசாவில், நவீன் பட்நாயக் 3ம் அணியின் இயல்பான பங்காளியாக இடம்பெறுவதுதான் லாஜிக். இது, அம்மாநிலத்தில் வலுவாக கால்பதிக்க முயலும் பாஜகவை இன்னும் உக்ரமாக எதிர்கொள்ள வைக்கும் யுக்தியாகவும் முடியும்.
உத்தர பிரதேசம் இந்தக் கூட்டணிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் மாயாவதி, முலயாம் சிங் யாதவ் என அந்த மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இருவருக்குமே டெல்லி நாற்காலி குறித்த கனவு உண்டு, எந்த அளவுக்கு முன்வருவார்கள் என்பது கேள்விக்குறி. இது தவிர, டெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சியும், ஜம்மு காஷ்மீரில் மெஹ்பூபாவின் பிடிபியும் 3ம் அணியில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்லலாம். ஆனால், இதையெல்லாம் ஒருங்கே திரட்டப் போவது யார்?
பீகாரைப் பொறுத்தவரை, பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கூட்டணி என உறுதியாகியுள்ளது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேர்தலுக்கு பின் ஏற்படும் கூட்டணியில் கைகோர்க்கலாம் அல்லது லாலுவுக்கு காங்கிரஸ் துணை தேவைப்படும். அதனால், 3வது அணிக்கு அங்கே இடம் குறைவு. மற்றபடி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட சில பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு சவாலாக இருக்கப் போவது காங்கிரஸ் கட்சிதான் 3ம்அணியல்ல. வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, ஒரு காலம் வரை, அவை அனைத்தும் பெருவாரியாக காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் என இருந்த நிலை மாறி, இப்போது அவை பாஜகவின் கோட்டைகளாக மாறியுள்ளன.
அதனால் எந்தப் பெரிய அரசியல் திருப்பங்களும் ஏற்படாத பட்சத்தில், 2019ல் எதிர்பார்க்கப்படும் தேர்தல் 3ம் அணி என்ற ஒன்றின் உதயம் பாஜக எதிர்ப்பு ஒட்டுகளைப் பிரிக்கத்தான் உதவும். அது பாஜகவுக்கு பின்னடைவு தான். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு எப்படி சாதகமாகமாறும் என்பது இனி வரும் காலங்களில் தான் தெரியவரும்.