பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய மாநிலம், மேற்கு வங்கம். குறிப்பாக, ஜார்கண்ட் எல்லையை ஒட்டியுள்ள மேற்கு வங்கப் பகுதிகளில் மலைவாழ் மக்களின் எண்ணிக்கை அதிகம். இந்த எல்லையில் உள்ள மாவட்டங்கள் கூட்டாக 'ஜங்கிள் மஹால்' என்று அழைக்கப்படுகின்றன. மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் அல்லது பாஜக இரண்டு கட்சிகளில் யார் பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். ஆனால், அதற்கு முன்பாக பழங்குடியினரின் வாக்குகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை தெரிந்துகொள்வது அவசியம். காரணம், ஜங்கிள் மஹாலின் அரசியல் நிலைப்பாடு என்பது எப்போதும் மாறக்கூடியது.
மேற்கு வங்கத்தின் பாங்குரா, புருலியா, ஜார்கிராம், மேற்கு மிட்னாபூர் மற்றும் கிழக்கு மிட்னாபூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 30 இடங்களில் நாளை (ஏப்ரல் 27) முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், முதல் நான்கு மாவட்டங்கள் ஜங்கிள் மஹால் வரையறைக்குள் வருகின்றன. காடுகள், விரவிக் கிடக்கும் மலைப்பாங்கான நிலப்பரப்புகள், பழங்குடி சமூகங்களின் ஆதிக்கம்... இவைதான் இந்த பிராந்தியத்தை மற்ற பகுதிகளிலிருந்து வேறுபடுத்தி காட்டுகின்றன.
உண்மையில், இந்த பிராந்தியத்தில் சந்தால், ஓரான், சபர், கெரியா, லோதா, முண்டா, பூமிஜ், மஹாலி, வோரா போன்ற 70 சதவீத பழங்குடி சமூகங்கள் உள்ளன. நாளை 30 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் 15 தொகுதிகளில் பழங்குடியினர் நேரடியாக தாக்கத்தை செலுத்துகின்றனர். பழங்குடி உரிமைகள் இயக்கத்துடன் இடதுசாரிகள் இணைந்ததன் காரணமாக 1977 முதல் நீண்ட காலமாக இந்தப் பகுதியானது இடதுசாரிகளின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இந்தப் பகுதி மாவோயிச நடவடிக்கைகளின் மையமாகவும் இருந்தது.
இருப்பினும், 2011 முதல் ஜங்கிள் மஹால் பகுதியைச் சேர்ந்தவர்கள் மம்தா பானர்ஜிக்கு தங்கள் ஆதரவுகளை தெரிவித்துள்ளனர். இதனை கடந்த தேர்தல்களில் நடந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் நம்மால் அறிய முடியும். 2016-ஆம் ஆண்டில், திரிணாமுல் இந்த 27 இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு மற்றும் ஆர்எஸ்பி ஒரு இடத்தை வென்றன. இந்த எல்லா தொகுதிகளிலும் பாஜக மூன்றாவது இடத்தையே பிடித்தது.
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இது அப்படியே மாறியது. இந்த பிராந்தியங்களைச் சேர்ந்த ஆறு மக்களவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை பாஜக தட்டித் தூக்கியது.
திரிணாமுல் காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்த மக்கள் எப்படி 2019-ல் பாஜகவுக்கு மாறினர் என்பது குறித்து பாஜகவினர் கூறுகையில், 'இந்த பழங்குடியின பகுதிகளில் பல தசாப்தங்களாக ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட பணியின் பலன்தான் இது' என்கின்றனர். மேலும், திரிணாமுல் மற்றும் இடதுசாரிகளின் அரசுகளால் இந்தப் பகுதிகளில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றாக்குறையும் இதற்கு ஒரு காரணம் என்கின்றனர்.
சொல்லபோனால், மாவோயிச கிளர்ச்சியின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த போதிலும் கூட, ஆர்.எஸ்.எஸ்-ஸால் உள்ளே எளிதாக ஊடுருவ முடிந்திருக்கிறது. அது, ஆர்எஸ்எஸ் என்ற பெயரில் நேரடியாக நுழையாமல், அந்த அமைப்புடன் இணைந்த வான்வாசி கல்யாண் ஆசிரமம் வழியாக அந்த மக்களிடையே பரிச்சயமாகியிருக்கிறது. இடதுசாரிகள் ஆட்சியில் மாவோயிச இயக்கத்தின் மீதான அடக்குமுறைதான் இந்தச் சூழலுக்கு தள்ளியுள்ளது.
2008-09 ஆண்டுகளில் லால்கர் இயக்கத்தின் மீதான காவல்துறையின் மிதமிஞ்சிய அடக்குமுறை நடவடிக்கைகள் பெரும்பாலான பழங்குடியினர் இடதுசாரிகளிடமிருந்து விலக காரணமாக அமைந்தன. பின்னர், எதிர்க்கட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் பழங்குடியினருக்கு ஆதரவாக செயல்பட்டு, அந்த வெற்றிடத்தை நிரப்பினர். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆனபோதிலும், இந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் நிலை மாறவில்லை. வறுமை, வேலை வாய்ப்புகள் இல்லாதது, உணவுப் பாதுகாப்பு, ஊழல் ஆகியவை தொடர்ந்து முக்கிய பிரச்னைகளாக இருக்கின்றன.
இந்த பிராந்தியத்தில் சாலைகள் மற்றும் கல்வி வசதிகளை வழங்க மம்தா தனது சிறந்த முயற்சியை மேற்கொண்டார். இருப்பினும், அவரது எம்.எல்.ஏக்கள் பலரும் ஆட்சிக்கு எதிரானவர்களாக மாறியிருந்ததும், முறைகேடு செய்ததாக எழுந்த புகார்களுமே 2019 மக்களவைத் தேர்தலில் பழங்குடியின மக்களின் அதிருப்திக்கு காரணமாக அமைந்தது. பாஜகவை பொறுத்தவரை, இந்தப் பகுதிகளில் இந்துத்துவ நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதிலிருந்து எச்சரிக்கையாகவே செயல்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், பழங்குடியினருக்கென்று உள்ள கலாசார பழக்க வழக்கங்கள்தான்.
மறுபுறம், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது மம்தாவுக்கு மற்றொரு பலமாக பார்க்கப்படுகிறது. ஹேமந்த் தனது மாநிலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தாலும், மமதாவுடன் கூட்டணி வைப்பதில் ஆர்வமாக இருந்தார். ஆனால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு இடம் கொடுக்க மம்தா மறுத்துவிட்டார். இருந்தாலும், ஹேமந்த் `ஜங்கிள் மஹால்’ பகுதிகளில் மம்தாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவது கவனிக்கத்தக்கது.
- தகவல் உறுதுணை: The India Today