சிறப்புக் களம்

வட மாநிலங்களில் அதிகரிக்கும் டெங்கு - ஏன் பரவுகிறது? பாதுகாப்பாக இருப்பது எப்படி?

வட மாநிலங்களில் அதிகரிக்கும் டெங்கு - ஏன் பரவுகிறது? பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Sinekadhara

புதுடெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. அங்கு ஒரே வாரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்த வருடத்தில் அங்கு கிட்டத்தட்ட 400 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. டெல்லியில் செப்டம்பர் முதல் வாரம் வரை 295 டெங்கு தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன. கடந்த வாரத்தில், 101 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உத்தராகண்டில் இந்த ஆண்டு டெங்குவால் ஒரு இறப்புகூட பதிவாகவில்லை என்றாலும், அங்கு 500-க்கும் மேற்பட்டோர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது. மாநில குடிமை அதிகாரிகள், டெங்குவைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர் என்றும், தினசரி தலைமை மருத்துவ அதிகாரிகளிடமிருந்து அறிக்கை பெறப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொசு போன்ற பூச்சிகள் மற்றும் பறவைகள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பெரும்பாலும் ஜூலை - நவம்பர் மாதங்களில் அதிகமாக பரவுகின்றன. கடந்த வருடம் 9,613 டெங்கு தொற்றுகள் டெல்லியில் பதிவானது. இது 2015ஆம் ஆண்டிற்கு பிறகு பதிவான அதிகப்படியான பாதிப்பாகும். கடந்த ஆண்டு மட்டும் அங்கு டெங்குவால் 23 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

டெங்கு என்றால் என்ன?

டெங்கு காய்ச்சல் உலகளவில் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். மேலும் இது வேகமாக பரவுகிறது என்கிறது உலக சுகாதார அமைப்பு. கடந்த 50 வருடங்களில் டெங்கு பாதிப்பு உலகளவில் 30 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறது. டெங்கு, "எலும்பு முறிவு காய்ச்சல் (break-bone fever)" என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தசை மற்றும் மூட்டு வலி ஏற்படும்.

இந்தியா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு சீனா, தைவான், மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா போன்ற பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் டெங்கு பாதிப்பு ஆண்டுதோறும் பதிவாகிறது. ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அதில் 2.5% இறப்பு ஏற்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக பகலில் கடிக்கும் ஏடீஸ் அகிப்டி கொசுக்களால் பரவும் வைரஸால் டெங்கு ஏற்படுகிறது.

இதன் அறிகுறிகள்

  • அதீத காய்ச்சல்
  • உடல் தடிப்புகள்
  • தலைவலி மற்றும் உடல்வலி
  • வாந்தி
  • தசை மற்று மூட்டு வலி

டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொசு விரட்டிகள்: கொசுக்களிடமிருந்து தப்பிக்க க்ரீம்கள், லோஷன்கள், ஜெல்கள் போன்ற பலதரப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. இருப்பினும், சிலருக்கு ரசாயனம் கலந்த க்ரீம்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே எந்த பொருளையும் சருமத்தின்மீது பயன்படுத்துவதற்கு முன்பு பரிசோதனை செய்து பயன்படுத்துவது அவசியம்.

பாதுகாப்பான உடைகள்: மழைக்கால்ங்களில் ஜன்னல்கள் மூடப்பட்ட அறைகளுக்குள், முடிந்தவரை கொசுவலைக்குள் படுத்து உறங்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேபோல், சருமம் முழுக்க மூடியிருக்குமாறு முழுக்கை, முழுக்கால் உடைகளை அணியுமாறும் அறிவுறுத்துகின்றனர்.

கொசு உற்பத்தியாகும் இடங்கள்: தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டைகள், அழுக்குகள் மற்றும் சகதிகள் நிறைந்த இடங்களில்தான் பெரும்பாலும் கொசுக்களின் இனப்பெருக்கம் நடக்கிறது. எனவே வீடுகளைச் சுற்றி இதுபோன்ற அழுக்குகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

வீடுகளுக்குள் நல்ல வெளிச்சம்: கொசுக்கள் பெரும்பாலும் இருட்டான இடங்களில்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே வீடுகளுக்குள் சூரிய வெளிச்சம் வருமாறு கதவுகள் மற்றும் ஜன்னல்களை நன்கு திறந்து வைக்கவேண்டும். இது கொசுக்கள் வீட்டுக்குள் பதுங்குவதை தடுக்கும்.