மணி ஆர்டர், காசோலை, டிடி... என ஒருவருக்கு பணத்தை அனுப்ப நாள் கணக்கில் அலைய வேண்டி இருந்த காலம் மலை ஏறிப் போய், 10 நொடிக்குள் பல்லாயிரம் ரூபாயை அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதை இந்தியர்கள் மத்தியில் பரவலாக்கியதில் சமீர் நிகம், புர்சன் இன்ஜினியர், ராகுல் சாரி 2015-ஆம் ஆண்டில் தொடங்கிய ஃபோன்பே (Phonepe) நிறுவனத்துக்கு பெரிய பங்குண்டு.
Paytm, GPay, Amazon Pay, Whatsapp Pay, Bharat Pe, JusPay போன்ற பேமெண்ட் நிறுவனங்கள் தங்கள் நிறுவன பெயர்களில் 'Pay' என்கிற சொல்லை வைத்திருந்தனர். ஃபோன்பே மட்டும் 'Phonepe' என பெயர் வைத்து இந்தியர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.
Phonepe என்றால் இந்தி மொழியில் 'ஃபோனில்' என்று பொருள். இனி ஃபோனிலேயே எல்லாவற்றையும் செய்யலாம் என மக்களைக் கவர்ந்தது. முதலில் ஒரு யூபிஐ பணப்பரிமாற்றத் தளமாகத் தொடங்கப்பட்ட ஃபோன்பே, மெல்ல வங்கிக் கணக்கு நிர்வகிப்பது, மொபைலுக்கு ரீசார்ஜ் செய்வது போன்ற வசதிகளை வழங்கத் தொடங்கியது. இந்த ஐடியா வேலை செய்யும் என்பதை அறிந்த ஃப்ளிப்கார்ட் 10 முதல் 20 மில்லியன் டாலர் கொடுத்து ஃபோன்பே நிறுவனத்தை வாங்கியது.
இன்று வங்கியின் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் இயக்கம், பி ஓ எஸ் எந்திர பரிமாற்றங்கள், டாக்ஸி கேப் முன்பதிவு செய்வது, உணவு ஆர்டர் செய்வது, டிடிஹெச் ரீசார்ஜ், மின் கட்டணம் செலுத்துவது, நீர் வாரியக் கட்டணம் செலுத்துவது, இன்ஷூரன்ஸ், முதலீடு... என ஃபோன்பே தொடாத ஏரியாவே இல்லை எனலாம். இந்தியாவில் சுமார் 19,100 பின்கோட்கள் பயன்பாட்டில் உள்ளன. அதில் 19,068 பின்கோட்களில் இவர்களின் சேவை பயன்பாட்டில் இருக்கிறது. ஃபோன்பே செயலியை இந்தியாவில் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்?
2022 ஜனவரி - மார்ச் காலாண்டில் ஃபோன்பே செயலியில் சுமார் 37.29 கோடி இந்திய பயனர்கள் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவில் 759.32 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வணிக பரிவர்த்தனைகள் மட்டும் 374.8 கோடி, சொந்த தேவைக்காக 307.42 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்தம் 13,23,970 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு பயனர் 1,744 ருபாய் பரிவர்த்தனை செய்துள்ளதாக ஃபோன்பே வலைதளம் கூறுகிறது.
இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில் 46 சதவீதம் ஃபோன்பேவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சுமார் 3,500 பேர் பணியாற்றும் இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் $5.5 பில்லியன் என்கிறது பல வலைதளங்கள். விரைவில் 8 - 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டோடு இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான பணிகளை ஃபோன்பே நிறுவனம் மேற்கொண்டு வருவதாக சில வாரங்களுக்கு முன் பிசினஸ் ஸ்டாண்டர்டில் செய்தி வெளியானது.
சுவாரசியத் தரவுகள்:
இந்தியாவிலேயே ஃபோன்பே செயலியில் அதிக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. அம்மாநிலத்தில் அதிக பரிவர்த்தனைகளை மேற்கொண்டு நகரம் எது தெரியுமா..? மும்பை அல்ல புனே.
ஃபோன்பே செயலி மூலம் 1 காலாண்டில் (மூன்று மாத காலத்துக்குள்) 100 கோடி பரிவர்த்தனைகளை இதுவரை இரு மாநிலங்கள் மட்டுமே கடந்திருக்கின்றன.
1. மகாராஷ்டிரா
2. கர்நாடகா.
ஃபோன்பே செயலி மூலம் மாலை 6 மணிக்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளில் சுமார் 37 சதவீதத்துக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் உணவுக் கடை சார்ந்தவைகளாக இருக்கின்றன.
இந்தியாவில் அதிகம் தங்கம் வாங்கும் கேரளா மற்றும் தமிழ்நாடு மக்கள், ஃபோன்பே செயலியில் தங்கம் வாங்கும் மாநிலங்கள் பட்டியலில் டாப் 10 இடங்களில் கூட இல்லை. ஃபோன்பே மூலம் தங்கம் வாங்குவதிலும் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது.
காசு பார்ப்பது எப்படி?
ஸ்விக்கி, ஃப்ளிப்கார்ட், பைஜூஸ், அர்பன் கிளாப் போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஏதோ ஒரு பொருளை விற்கிறார்கள் அல்லது சேவையை வழங்குகிறார்கள். அதற்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமோ அல்லது கமிஷனை வணிகர்களிடமிருந்தோ பெறுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் வெறுமனே பணப் பரிவர்த்தனை நிறுவனமாக இருக்கும் ஃபோன்பே எப்படி சம்பாதிக்கிறது? வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
பிளாட்ஃபார்ம் ஃபீஸ்:
இன்றுவரை இந்தியாவில் வெகு சில பணப்பரிமாற்றத் தளங்கள் மட்டுமே மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கின்றன. அதில் ஃபோன்பே நிறுவனம் முதன்மையானது. 50 - 100 ரூபாய் ரீசார்ஜ்களுக்கு 1 ரூபாயும், 100 ரூபாய்க்கு மேலான ரீசார்ஜ் திட்டங்களுக்கு 2 ரூபாயும் வசூலிக்கிறது ஃபோன்பே. இது போக, டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து ரீசார்ஜ் செய்யப்படுவதற்கான கமிஷன் தொகை வேறு தனியாக வருகிறது.
ஆப் சுவிட்சிங்:
சொமேட்டோ, ரம்மி சர்கிள், ரம்மி டைம்... போன்ற சில செயலிகளின் இணைப்புகள் ஃபோன்பே தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி விளம்பரப்படுத்தப்படுவதன் மூலம் ஃபோன்பே தனியாக காசு பார்க்கிறது. அந்த தளங்களில் வாடிக்கையாளர்கள் செலவு செய்யும் தொகையில் இருந்து ஒரு சிரு கமிஷன் அல்லது மாதாமாதம் ஃபிக்ஸடாக இவ்வளவு தொகை என ஏதோ ஒருவகையில் அந்நிறுவனங்களிடமிருந்து காசு வரலாம்.
இன்ஷூரன்ஸ்:
ஃபோன்பே நிறுவனம் தன்னை ஒரு இன்ஷூரன்ஸ் தரகு நிறுவனமாகவே பதிவு செய்துகொண்டுள்ளது.
ஜெனரல் இன்ஷூரன்ஸ் - கார், பைக், டிராவல், ஹெல்த் இன்ஷூரன்ஸ், லைஃப் இன்ஷூரன்ஸ், வணிக பயன்பாட்டு இன்ஷூரன்ஸ் என ஃபோன்பே வளைத்து வளைத்து இன்ஷூரன்ஸ் பாலிசிகளை தன் தளத்தில் விற்று வருகிறது. இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்களுக்கு கமிஷன் கிடைப்பதைப் போல ஃபோன்பேவுக்கு இன்ஷூரன்ஸ் கமிஷனாக கோடிக் கணக்கில் வருவாய் வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
விளம்பரங்கள்:
ஃபோன்பே செயலியில் ஹோம்பேஜில் நடுபகுதியில் ரம்மி போன்ற சில விளம்பரங்கள் ஓடுவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த விளம்பரங்களின் மூலம் நல்ல பணம் ஈட்டுகிறது ஃபோன்பே தளம்.
நிதி சேவைகள்:
தங்கம், வெள்ளி, மியூச்சுவல் ஃபண்டுகள் என ஒரு மினி நிதி நிறுவனத்தையே தன் செயலிக்குள் நடத்திக் கொண்டிருக்கிறது ஃபோன்பே. இதற்கு எல்லாம் ஒரு சிறு தொகை கமிஷனாக ஃபோன்பே கணக்கில் கிரெடிட் ஆகிக் கொண்டு தான் இருக்கிறது.
மற்ற வருமானங்கள்:
வவுச்சர்கள், பி ஓ எஸ் எந்திரங்களை வணிகர்களுக்கு வழங்கி அதில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஒரு சிறு தொகை, ஃபோன்பே வேலட்டில் உள்ள உபரி பணத்துக்கு கிடைக்கும் வட்டி வருமானம், விமானம், ரயில், டாக்ஸி போன்ற பயண சேவை செயலிகளிடமிருந்து வரும் கமிஷன் அல்லது கட்டணத் தொகை என பல வழிகளில் வருமானத்தை ஈட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பல வலைதளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதில் சோகமான விஷயம் என்னவென்றால் இத்தனை வழிகளில் பணம் வந்தாலும், 2020 - 21 நிதியாண்டில் ஃபோன்பே 690 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி, 1,728 கோடி ரூபாயை நஷ்டமாக கணக்குக் காட்டியுள்ளது.
இப்போது ஒரு சிறிய குவிஸ். ஃபோன்பே போலவே, வேறு ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமும் பணப் பரிமாற்ற சேவை, முதலீடுகளுக்கான கமிஷன், இன்ஷூரன்ஸ் விற்பனை கமிஷன், பஸ், ரயில், விமான டிக்கெட் முன்பதிவுக்கு கமிஷன், மால்... என பல சேவைகளை வழங்கி, காசு பார்த்துக் கொண்டிருக்கிறது. சொல்லப் போனால் அந்த நிறுவனம் தான் ஃபோன்பேவுக்கே முன்னோடி எனலாம். அந்த கம்பெனியின் பெயரை கெஸ் செய்யுங்களேன்.
.
.
.
உங்கள் பதில் பேடிஎம் என்றால், அது சரியான விடை.
சரி மீண்டும் ஃபோன்பேவுக்கு திரும்புவோம்.
எங்கேயோ கொஞ்சம் இடிக்குதே..?
அதெப்படிங்க வெறும் ரூ. 690 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனத்துக்கு $5.5 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 43,500 கோடி ரூபாய்) மதிப்பீடு வழங்கப்படுகிறது? ஃபோன்பே நிறுவனத்துக்குச் சொந்தமான நிலபுலன்கள், கட்டடங்கள், ரொக்கப் பணம், முதலீடுகள்... என எல்லாம் சேர்த்தால் கூட 43,500 கோடி ரூபாய் தேராதே?
ஃபோன்பே, பேடிஎம் போன்ற நிறுவனங்களின் மிகப் பெரிய சொத்தே அதன் பயனர்கள் எண்ணிக்கை, தரவு போன்றவற்றைப் பயன்படுத்தி தங்கள் தளங்களில் இன்னும் புதிய புதிய வியாபாரங்களைச் செய்ய திறந்து வைத்திருக்கும் வாய்ப்புகள் (Opportunities) மற்றும் சூழல் (Ecosystem) தான் மிகப் பெரிய சொத்து. அதோடு இன்னும் ஃபோன்பே, பேடிஎம் போன்ற செயலியில் அதிக மக்கள் இணைவர், இதை இன்னும் பெரிதாக வளர்த்தெடுக்க முடியும் (Scalability) என முதலீடு செய்பவர்கள் நம்புகிறார்கள். ஆகையால்தான் ஃபோன்பேயின் மதிப்பீடு 5.5 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது.
- கெளதம்