How to Survive an Elephant Attack  File Image
சிறப்புக் களம்

காட்டில் திடீரென யானை நம்மை தாக்க வந்தால் என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? - சில சர்வைவல் டிப்ஸ்!

காட்டில் ஒரு யானை உங்களை தாக்க வரும்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

Justindurai S

சுற்றுலா என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் மலை வாசஸ்தலங்கள்தான். அதிலும் குறிப்பாக வனவிலங்குகளை காணும் ஆவலில் வனச் சுற்றுலா தலங்களுக்கு செல்வது இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது.

நீங்கள் ஒரு மலைப் பாதையிலேயோ அல்லது வனப்பகுதியிலேயோ யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் அமைதியாக சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது எதிர்பாராவிதமாக உங்கள் எதிரே காட்டு யானை ஒன்று சட்டென்று வந்து நிற்கிறது. அந்த சமயத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உண்மையில் இதுபோன்ற சூழ்நிலையில் பலருக்கும் என்ன செய்வதென்றே தெரியாது. இப்படியொரு ஆபத்தான சூழலில் யானையிடமிருந்து எப்படி பாதுகாப்பாக தப்பிக்க வேண்டும் என நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதுகுறித்து வனத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் காட்டுயிர் ஆர்வலர்களிடம் நாங்கள் சேகரித்த சில சர்வைவல் குறிப்புகளை தருகிறோம். அதனை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். எப்போதாவது இவை உங்களுக்கு கைகொடுக்கக்கூடும்.

How to Survive an Elephant Attack

பெரும்பாலான யானைகள் உங்களை அச்சுறுத்தவே 'பொய்யாக' விரட்டும். உங்களை கொல்ல வேண்டும் என்பது அதன் நோக்கமல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். கோபமாக யானை உங்களை விரட்டுகிறது என்றால், முடிந்தளவு வேகமாகவும் சத்தமாகவும் ஓலமிடுங்கள்.

யானை உங்களை 'பொய்யாக' விரட்டுகிறதா அல்லது உண்மையிலேயே கோபமாக விரட்டுகிறதா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதை எப்படி கண்டுபிடிப்பது? யானை விரட்டும் போது அதன் காது, எந்த அசைவும் இல்லாமல் பின்னால் ஒட்டினாற்போல் இருக்கிறதா என்பதை முதலில் பாருங்கள். ஒருவேளை யானையின் காது எப்போதும் போல் அசைந்து கொண்டிருந்தால் அது 'பொய்யாக' துரத்துகிறது என்று அர்த்தம். அப்படியில்லாமல் காதுகள் பின்னால் ஒட்டியிருந்தால் அது உண்மையிலேயே கோபமாக இருக்கிறது என்று அர்த்தம். யானைகள் பெரும்பாலும் 'பொய்யாகவே' விரட்டும். அதன் முன்னால் இருப்பவர் ஆபத்தானவரா இல்லையா என்பதை தெரிந்து கொண்டே, உங்களை விரட்டுவதா இல்லையா என்பதை யானை முடிவு செய்யும்.

யானையின் தும்பிக்கையை பாருங்கள். அது தாக்குவது போல் உட்பக்கமாக வளைந்திருக்கிறதா என்று பாருங்கள். யானை கோபமாக விரட்டும் போது, அதன் தும்பிக்கையை மேலே உயர்த்தி உட்பக்கமாக வைத்துக் கொள்ளும். ஒருவேளை தும்பிக்கை எப்போதும் போல் கீழே தொங்குகிறது என்றால் அது 'பொய்யாக' விரட்டுகிறது. யானை உங்களை 'பொய்யாக' விரட்டுகிறதா அல்லது உங்களை தூக்கிப் போட்டு மிதிக்க விரட்டுகிறதா என்ற வித்தியாசத்தை முதலில் தெரிந்து கொண்டால் நீங்கள் யானையிடமிருந்து எளிதாக தப்பிக்கலாம்.

How to Survive an Elephant Attack

யானையின் தும்பிக்கை வேகமாக வெட்டி வெட்டி ஆடுகிறதா அல்லது அதன் ஒரு கால் முன்னும் பின்னும் அசைகிறதா என்பதை பாருங்கள். இதனை ‘இடப்பெயர்வு நடவடிக்கைகள்’ என அழைப்பார்கள். 'பொய்யாக' விரட்ட வேண்டுமா அல்லது கோபாவேசத்தோடு தாக்க வேண்டுமா என தீர்மானிக்க முடியாமல் யானை நிற்பதையே இந்த அறிகுறிகள் காண்பிக்கிறது. இதுபோல் யானை செய்தால், அது பெரும்பாலும் 'பொய்யாக' தான் விரட்டும். கோபத்தில் விரட்ட வாய்ப்புகள் குறைவு.

சரி, கோபத்தில் விரட்டும் யானையிடம் தப்பிப்பது எப்படி?

யானையிடமிருந்து தப்பிக்க எப்போதும் காற்றின் திசையில் ஓடுங்கள். நீங்கள் ஓடும்போது, யானையைக் கடந்து உங்களை நோக்கி காற்று வீசுமாறு இருக்க வேண்டும். மாறாக, உங்களை கடந்து யானையை நோக்கி காற்று வீசக் கூடாது. நீங்கள் காற்றடிக்கும் திசையில் இருந்தால், யானையால் உங்களை கண்டுபிடிக்க முடியாது. மேலும் நீங்கள் எங்கு உள்ளீர்கள் என யானையால் முகர்ந்து பார்க்கவும் முடியாது. யானைகளுக்கு மோப்ப சக்தி அதிகமாக இருக்கும். ஆகையால் காற்றின் திசையில் ஓடினால் யானையிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

உங்களை யானை கோபமாக விரட்டுகிறது என்றால், வளைந்து வளைந்து ஓடுங்கள். கோபமாக யானை விரட்டினால், அதன் முன் சத்தமாக ஓலமிடுவதால் எந்த பயனும் இல்லை. உண்மையிலேயே கோபமாக விரட்டுகிறது என தெரிந்துவிட்டால், ஓடத் தயாராகுங்கள். நேராக ஓடாமல் வளைந்து வளைந்து ஓடுங்கள். அப்போதுதான் யானையிடமிருந்து தப்பிக்க முடியும். கோபமாக வரும் யானை உங்களை விட வேகமாக ஓடும். நீங்கள் வளைந்து வளைந்து சென்றால் அதனால் பிடிக்க முடியாது. ஏனென்றால் அவ்வுளவு பெரிய யானையால் உடனடியாக வளைந்து ஓட முடியாது.

How to Survive an Elephant Attack

ஓடுவது என்று முடிவெடுத்துவிட்டால், யானைக்கும் உங்களுக்கும் அதிக தூரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பயந்த, கோபமான யானை 35-40 கிலோமீடர் வேகத்தில் ஓடும். ஆனால் மனிதனால் 37 கி.மீ. வேகமே ஓட முடியும். அதுவும் கொஞ்ச தூரத்திற்கு தான் நம்மால் இவ்வுளவு வேகமாக ஓட முடியும். கோபமாக ஓடி வரும் யானைக்கும் உங்களுக்கும் இடையே ஏதாவது தடுப்பு/மறைப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

யானை கோபமாக விரட்டுவது தெரிந்துவிட்டால், உங்கள் உடலை மறைக்கும் அளவிற்கு ஏதாவது இருக்கிறதா என பார்த்து அதன்பின் ஒளிந்து கொள்ளுங்கள். பெரிய வாகனம், கட்டிடம் அல்லது பெரிய மரம் அகியவற்றின் பின்னால் மறைந்து கொள்வது நல்லது. இப்படி மறைந்திருக்கும் போது, எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் யானைகளுக்கு கேட்கும் திறன் அதிகம்.

யானையிடம் சிக்காதவாறு பெரிய மரத்தின் மீதோ அல்லது சிறிய பாறையின் மீதோ ஏறிக் கொள்ளுங்கள். யானைகளால் எதன் மீதும் ஏற முடியாது. ஆகையால் யானைக்கு எட்டாதவாறு நல்ல உயரமான, பலமான மரத்தின் மீது ஏறுங்கள். குறைந்தது 10-15 அடி உயரத்தில் ஏறுங்கள். அப்போதுதான் யானையின் தும்பிக்கை உங்கள் மேல் படாது. இன்னொன்றை நன்றாக நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சிறிய அல்லது பழைய மரங்களை யானையால் உடைத்து சுக்கு நூறாக்க முடியும். ஆகையால் அதன்மேல் ஏறி மாட்டிக் கொள்ளாதீர்கள். யானையால் பார்க்க முடியாத சிறிய குழிகளில் பதுங்கிக் கொள்ளுங்கள்.

How to Survive an Elephant Attack

யானை நிஜமாகவே கோபமாக விரட்டினால், அதனிடமிருந்து தப்பிக்கவே நாம் முதலில் யோசிக்க வேண்டும். முக்கியமாக அதன் தும்பிக்கை மற்றும் கால்களில் சிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் எங்காவது ஒரு பெரிய குழியில் பதுங்கிக் கொண்டால் யானையால் கண்டுபிடிக்க முடியாது. அதன் கண்ணில் நீங்கள் படாவிட்டால் அங்கிருந்து யானை வேறு இடத்திற்குச் சென்றுவிடும். இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் பதுங்கி இருக்கும் குழி ஆழமானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தன்னுடைய தும்பிக்கையை வைத்து யானை உங்களை தாக்க நேரிடும்.

யானையின் கவனத்தை திசை திருப்ப எந்த பொருளையாவது வேறு பக்கமாக தூக்கியெறியுங்கள்.

நீங்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். யானை உங்கள் பக்கத்தில் வந்துவிட்டது. இப்போது என்ன செய்வீர்கள்? உங்கள் கையில் கிடைத்த பொருளை எல்லாம் தூக்கி எறியுங்கள். குறைந்தது 10 அடி தூரமாவது அந்தப் பொருளை தூக்கி எறியுங்கள். அப்போதுதான் யானையின் கவனம் அந்தப் பொருளின் மீது திரும்பும். அந்த சமயத்தில் நீங்கள் விரைவாக ஓடித் தப்பித்துக் கொள்ளலாம்.

யானையின் கவனத்தை திசைதிருப்ப முடியாவிட்டால் சத்தமாக ஓலமிடுங்கள்.

இப்போது உங்கள் கைவசம் இருப்பது இது மட்டுமே. தைரியமாக நின்று உங்களால் முடிந்தளவு சந்தமாக ஒலி எழுப்புங்கள். நீங்கள் மெதுவாக ஒலி எழுப்பினால், உங்களை ஆபத்தானவராக கருதி தாக்குவதற்கு தயாராகிவிடும். இது உங்களுக்கு மிகவும் ஆபத்தில் முடியும். ஆகையால் சத்தமாக ஒலி எழுப்புங்கள். சிங்கம் போல் கத்துங்கள். இலையென்றால் “போ”, “போ” என தொடர்ந்து சத்தமாக கத்துங்கள். ஏதாவது பொருள் வைத்திருந்தால் அதை வைத்து சத்தம் எழுப்புங்கள். அருகில் உள்ள செடி கொடிகளை அசைத்து ஒலி எழுப்புங்கள்.

How to Survive an Elephant Attack

'பொய்யாக' துரத்தினால் என்ன செய்ய வேண்டும்?

உங்களை யானை ஒன்று 'பொய்யாக' துரத்த முன்வந்தால் அந்த இடத்திலேயே அசையாமல் நில்லுங்கள். இப்படி நிற்பதால், நீங்கள் ஆபத்தானவர் இல்லை என யானை புரிந்து கொண்டு உங்களை விரட்டாது. நீங்கள் அசையாமல் அதே இடத்தில் நிற்பதன் மூலம், உங்களது மனதைரியத்தையும், எது குறித்தும் எனக்கு பயம் இல்லை என்பதையும் யானைக்கு உணர்த்துகிறீர்கள். ஆகையால் உங்களை யானை விரட்டும் வாய்ப்பு குறைவே.

யானை உங்கள் எதிரே வேகமாக வரும் போது அசையாமல் நிற்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால் நீங்கள் தைரியமாக அசையாமல் நிற்க வேண்டும். 'பொய்யாக' யானை உங்களை விரட்டினால், உங்கள் பின்புறத்தைக் காண்பித்துக் கொண்டு யானை முன் ஓடாதீர்கள். இது யானைக்கு பயத்தை ஏற்படுத்தும். இதனால் இன்னும் வேகமாக உங்களை துரத்த ஆரம்பிக்கும். மனிதனின் உடல்மொழியை யானை நன்கு அறியும். பின்புறத்தை காண்பித்துக் கொண்டு ஓடும்போது, நீங்கள் பலவீனமானவராக, பயந்தவராக, தாக்கப்படக் கூடியவராக யானைக்கு தெரிகிறது.

இப்படி ஓடுவதற்குப் பதிலாக, உங்களை பெரிய உருவமாக காண்பித்துக் கொள்ளுங்கள். உங்கள் இரு கைகளையும் தலை மேல் தூக்கியபடி தன்னம்பிகையோடும் தைரியமாகவும் யானை முன் அடியெடுத்து வையுங்கள்.

யானை 'பொய்யாக' விரட்டினால் சத்தமாக ஓலமிடுங்கள்.

உங்களிடமிருந்து யானை ஒரு 50 அடி தூரமிருக்கும் போது சத்தமாக ஓலமிட்டால், யானை விலகிச் செல்வதற்கு வாய்ப்புள்ளது. இந்த மாதிரி சமயத்தில் சத்தமாக கத்துவதும் அலறுவதும் மிகச்சிறந்த பயனை அளிக்கும். யானை அந்த இடத்திலிருந்து விலகிச் செல்லும் வரை சத்தமாக கத்துவதை நிறுத்தாதீர்கள். 'பொய்யாக' யானை விரட்டும் போது மட்டுமே இது பயனளிக்கும் என்பதையும் நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எப்படி கத்த வேண்டும் என தெரியவில்லை என்றால், “போ”, “வெளியே போ” என்று தொடர்ந்து சத்தமாக கத்திக்கொண்டே இருங்கள்.

How to Survive an Elephant Attack

எச்சரிக்கை: இந்த சர்வைவல் டிப்ஸ் அனைத்தும் காட்டில் எதிர்பாராதவிதமாக யானையிடம் சிக்கிக்கொண்டால் தப்புவதற்காகவே மட்டுமே தவிர, வான்டடாக யானையை தேடிச் சென்று அதன்முன் இதை பரீட்சித்துப் பார்க்காதீர்கள்.

காட்டு யானைகள் ஆபத்தானவை. பொதுவாக யானைக்கும் உங்களுக்குமான இடைவெளி குறைந்தது 100 மீட்டர் இருப்பதே பாதுகாப்பானது என்கின்றனர் நிபுணர்கள். மேலும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அதற்கு தொந்தரவு கொடுக்காமல் எச்சரிக்கையுடன் விலகி செல்வதே நமக்கும் நல்லது யானைக்கும் நல்லது.