சிறப்புக் களம்

ஏப்ரலிலே உச்சம் தொடும் வெப்பம்... சமாளிக்க என்ன செய்வது?

ஏப்ரலிலே உச்சம் தொடும் வெப்பம்... சமாளிக்க என்ன செய்வது?

Sinekadhara

கோடைகாலம் வந்தாலே ஒருபுறம் கொண்டாட்டம்தான். அதேசமயம் மறுபுறம் வெப்பத்தால் உடல்நல உபாதைகளையும் சந்திக்க நேரிடும். அதிக வெப்பத்தால் அழுத்தம் ஏற்படுவதுடன் ஆரோக்கிய சீர்கேடுகளும் உருவாகும். இது சில சமயங்களில் மரணத்தைக்கூட விளைவிக்கும்.

வெயில்காலத்தில் பொதுவாக வரக்கூடிய சரும பிரச்னைகள்

சொறி, சிரங்கு: அதிக வியர்வை மற்றும் வெப்பத்தின் தாக்கத்தால் உடலில் ஆங்காங்கே அரிப்புடன் கூடிய தடிப்புகள் ஏற்படும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் இருக்கும்போது இதுபோன்ற சரும பிரச்னை வருவது சகஜம்தான். தடிப்புகள், முகப்பரு அல்லது கொப்புளங்கள், அரிப்பு மற்றும் தடிப்புகள் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

வெப்ப ஸ்ட்ரோக்: சிலர் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் உடலை குளிர்ச்சியடைய வைக்க ஏஸிக்கு அடியில் அமர்வர். திடீரென உடலை குளிர்ச்சியடைய செய்யும் நிலைதான் வெப்ப ஸ்ட்ரோக். இது சில நிமிடங்களில் வெப்பநிலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதுபோன்ற திடீர் மாறுபாட்டால் உடல் வெப்ப அதிகரிப்பு, கோமா, குழப்பம் மற்றும் வலிப்பு சில சமயங்களில் இறப்புக்கூட நிகழலாம்.

வெப்ப சோர்வு: அதீத வியர்வையால் உடலிலிருக்கும் தண்ணீர் மற்றும் உப்பு வெளியேறும் நிலை. இதனால் குமட்டல், தாகம், தலைசுற்றல், தலைவலி மற்றும் உடல் வெப்ப அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

வெப்ப பிடிப்புகள்: வெப்பத்தால் ஏற்படக்கூடிய நீர் மற்றும் உப்பு இழப்பு காரணமாக உடலில் ஏற்படும் வலியைத்தான் வெப்பப் பிடிப்புகள் என்கின்றனர். இந்த பிடிப்புகள் கால்கள், கைகள் மற்றும் முதுகு போன்ற பகுதிகளில் வலியைக் கொடுக்கும்.

வெப்ப syncope: உடலுக்கு பழக்கமில்லாத, அதேசமயம் நீண்ட நேரம் வெப்பம் வெளிப்படுவதால் உடல் அதற்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் நீரிழப்பு, தலைசுற்றல், மயக்கம் மற்றும் லேசான தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

வெப்ப பிரச்னைகளை தடுப்பது எப்படி?

ஆரோக்கியத்தில் கவனம்: உடலில் ஏதேனும் பிரச்னை இருந்தால் வெயிலில் செல்வதற்கு முன்பு அது என்னமாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம். மேலும் அப்படி செல்ல நேர்ந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள்வது அவசியம். இல்லாவிட்டால் வெப்ப அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தண்ணீர் குடிக்க மறக்கவேண்டாம்: வெயில்காலங்களில் உடலிலிருந்து வியர்வை வழியாக அதிக நீர் வெளியேறிவிடும். நீரிழப்பு பிரச்னை ஏற்படாமல் இருக்க போதிய தண்ணீர் அருந்துவது அவசியம்.

சூரிய ஒளியில் செல்லும்போது கவனம்: வெயிலில் செல்லும்போது உடலின் எவ்வளவு பகுதி வெயிலில் படுகிறது என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். முடிந்தவரை வெயில்நேரத்தில் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. இது சருமத்தை சூரிய கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும்.

வெப்பத்திற்கு பழகிக்கொள்ளுங்கள்: வெப்பநிலை மாற்றம், சூரிய கதிர்களின் தாக்கம் மற்றும் வியர்வைக்கு பழகிக்கொள்ள உடலுக்கு சிறிது நேரம் தேவைப்படும். இந்த நேரத்தில் பாதுகாப்பாக இருப்பது அவசியம். அது வெப்ப அழுத்தத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.

வெயில்நேரங்களில் மெல்லிய, தளர்ந்த ஆடைகளை அணிவது அவசியம். இது வெயிலை சமாளிக்க உதவியாக இருக்கும்.