ஸ்கூல், காலேஜ், இல்ல ஆஃபிஸ்.... இப்படி நீங்க எங்க இருந்தாலும் எல்லா தருணத்துலயும் பகல் நேரத்துல ஒரு சோர்வை எதிர்கொண்டிருப்பீங்க. அந்த சோர்வு, `அடடா இப்போ ஒரு குட்டித்தூக்கம் கிடைச்சா எவ்ளோ நல்லாருக்கும்ல....’ என்று உங்களுக்குள்ள ஒரு எண்ணத்தை கொடுத்திருக்கும். லேசா கண்ணு சொருகி, அப்பப்போ பென்ச் மேலயே படுத்துக்கிட்ட தருணங்களும் இருக்கும்! டக்குனு யாராச்சும் எழுப்புனதும், முன்னவிட ரொம்ப ப்ரிஸ்க்கா இருக்கும்!
இப்படியான குட்டி குட்டி தூக்கத்தை, ஆங்கிலத்தில் Nap (நாப்) என்று சொல்வார்கள். சிலருக்கெல்லாம் இந்த குட்டித்தூக்கம், ரொம்ப பழக்கப்பட்ட விஷயமாகி, பகல்ல தூங்கலன்னா ஏதோ அந்த நாளே சோர்ந்து போனதுமாதிரி இருக்கும். அப்படி பகல்நேர தூக்கம், உண்மையில சரிதானா என்று கேட்டால், இல்லையென்கிரார்கள் மருத்துவர்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் தெரியுமா? அதேபோல, அப்படியான பகல் தூக்கத்தை தவிர்க்க நாம செய்ய வேண்டியது தான் என்ன? இதை உங்களுக்கு சொல்வதுதான், இந்த கட்டுரை!
முதலில், பகல் தூக்கத்தை போக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று ஸ்மார்ட்டா 5 டிப்ஸ் பார்ப்போம்.
* சரியாக தூங்க வழிமுறை
உங்களுக்கென தூக்கத்துக்கு ஒரு நேர வரைமுறை வைத்துக்கொள்வது அவசியம். உதாரணத்துக்கு, 10 மணிக்கு படுக்கைக்கு செல்வதென முடிவுசெய்துவிட்டால், தினமும் 10 மணிக்கு படுக்கைக்கு சென்றுவிட வேண்டும். இப்படி செல்வதன் மூலம், காலை எழும் நேரமும் நாள்போக்கில் சீராகும். இப்படி படுக்கைக்கு செல்லும்போது, அந்த அறை நல்ல காற்றோட்டமாகவும், குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், அமைதியாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். தூக்கத்துக்காக உங்கள் நேரத்தை மட்டுமில்லாம, கொஞ்சம் பணத்தையும் நீங்கள் செலவிட வேண்டும். அந்த பணம் , தலையணைகள் மற்றும் உங்கள் தூக்கத்திற்கு உதவும் போர்வைகள்ல இருந்தாலே போதும்.
* கஃபைன் உணவுகளை தவிர்க்கவும்
கஃபைன் தூக்கத்தை தடுக்கும் அளவுக்கான சில மூலப்பொருள்களை கொண்டது. அந்த மூலப்பொருள்கள், மூளைக்கும் உடலுக்கும் இடையில் பயணிக்கும் செய்திகளை விரைவுபடுத்தும். இதனால் ஒரு நபர் அதிக விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், ஆற்றலுடனும் இருக்க நேரிடும். காபி, கோலா, டீ, சாக்லேட் போன்ற கஃபைன் நிறைந்த பானங்களை, தூங்கப்போகும்போது குடிப்பதை தவிர்த்திடுங்க! அதே விளைவைக் கொண்ட புகையிலை மற்றும் பிற நிகோடின் சார்ந்த பொருட்களிலிருந்தும் விலகி இருப்பது கட்டாயம்.
* வேலையில் உங்கள் தூக்கத்துக்கு ஏற்ப ஷிப்ட் அமைத்துக்கொள்ளுங்கள்!
இன்றைய தேதிக்கு எல்லோருக்கும் ஷிப்ட் அடிப்படையில் தான் வேலைக்கு போகிறோம். அதனால் உங்களுக்கு எந்த ஷிப்ட் வருகிறதோ, அதற்கேற்ப உங்களுடைய தூக்க வழிமுறையை அமைத்துக்கொள்ளுங்கள். அதுக்கு வாய்ப்பில்லை என்பவர்கள் தூக்க வழிமுறைக்கு ஏற்ப ஷிப்ட்டையும் அமைத்துக்கொள்ளுங்கள். தூங்கும்போது அறை இருட்டாக, அமைதியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டாலே போதும்! முக்கியமான விஷயம், தூக்கத்துக்கு முன் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது செல்ஃபோன் ஒளி உங்கள் கண்ணில் படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
* தூக்கத்துக்காக மது அருந்துவதா? நெவர்!
மது அருந்தினால், தூக்கம் வந்துவிடும் என்று சிலர் நினைப்பதுண்டு. இது உண்மையில் தவறு. மது அருந்தும்போது வருவது, மூளையின் செயல்திறன் மட்டுப்பட்டு ஏற்படும் மனச்சோர்வு. அது தூக்கமில்லை. இதுமாதிரி நிலையில் ஒருவர் கண்களை மூடியபடி மயக்க நிலைக்குதான் தள்ளப்படுவர். மற்றபடி அது நல்ல தூக்கத்தை தருவதில்லை. மது அருந்தி தூக்க நிலைக்கு செல்பவர்களுக்கு, இரவு நேரத்தில் பெரும்பாலும் மோசமான கனவுகள், அதீத வியர்வையும் ஏற்படலாம். இது உடல் உபாதைகளையும் கொடுக்கலாம் என்பதால, மது அருந்தாதீங்க பாஸ்!
* பாதுகாப்பா வாகனம் ஓட்டுங்க!
வாகனம் ஓட்டுவதென்பது, மனநிலையை சமன்படுத்தும் ஒரு செயல். இது வாகனத்துக்கு மட்டுமன்றி, எந்தவொரு இயந்திரத்துக்குமே பொருந்தும். சமநிலையான மனநிலையோடு ஒரு காரியத்தை செய்யும் நபரால், நிம்மதியான செயல்திறனையும் பெற முடியும். இது நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். அன்றாட வாழ்க்கையில மற்ற இயந்திரங்களைவிடவும் வாகனம் தான் நாம அதிகம் பயன்படுத்துவோம் என்பதால, பாதுகாப்பா வண்டி ஓட்டுங்க.
சரி, சோர்வுனால தினந்தோறும் ஒருத்தர் எடுக்கும் பகல் தூக்கம் ஏன் கெட்டதுனு சொல்ல மறந்துட்டோமே... அதையும் சொல்றோம், தெரிஞ்சுக்கோங்க:
தூக்கமின்மை காரணமாக தொடர்ந்து வரும் அயர்வு, அவங்களோட வேலை மற்றும் வாழ்க்கையில் குறுக்கிடலாம். குறிப்பா மனநிலை, நினைவாற்றல், முடிவெடுத்தல் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவற்றில் சிக்கல்கள் ஏற்படுத்தும்.
மட்டுமன்றி பகல்நேர தூக்கம் என்பது, சில நேரங்கள்லதான் மோசமான இரவு தூக்கத்தின் விளைவாக இருக்கும். சில நேரங்கள்ல ஸ்லீப் ஆப்னியா போன்ற கடுமையான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிலைமைகளின் அறிகுறியாகும். ஒருவேளை தொடர்ந்து உங்களுக்கு பகல் தூக்கம் இருந்தா, கண்டிப்பா மருத்துவரை பார்க்க வேண்டும்!