சிறப்புக் களம்

முறையாக குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறைகள் என்ன? - ஒரு சட்டப் பார்வை

முறையாக குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறைகள் என்ன? - ஒரு சட்டப் பார்வை

webteam

குழந்தைகளை சட்ட ரீதியாக தத்தெடுக்கும் வழி இருந்தும் சட்டத்திற்கு புறம்பாக தத்தெடுக்கும் நிகழ்வுகள் இன்றும் அரங்கேறி கொண்டுதான் வருகின்றன. இதற்கு உதாரணம்தான் தற்போது வெளியாகியுள்ள, குழந்தையை பேரம் பேசுவது தொடர்பான ஒரு ஆடியோ. 

ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா என்பவர் பேசும் அந்த ஆடியோவில் குழந்தை விற்பனையை 30 வருடமாக செய்வதாக கூறுகிறார். நிறம், எடை உள்ளிட்டவகைளை வைத்து குழந்தையின் விலையை நிர்ணயம் செய்கிறார் அவர். சட்டத்திற்கு புறம்பான இந்த ஆடியோ பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சட்ட ரீதியாக குழந்தையை தத்தெடுக்க உள்ள வழிமுறைகள் குறித்து பலருக்கும் தெரியவில்லை என்கிறார்கள் குழந்தை நல பாதுகாப்பளர்கள். குறிப்பாக குழந்தையை தத்தெடுக்க விருப்பம் உள்ளவர்கள் சட்ட ரீதியாக குழந்தையை  தத்தெடுக்கும் முறை குறித்து தெரிந்த கொள்வது அவசியம்.   
 
குழந்தையை தத்தெடுக்கும் வழிமுறைகள்:
தம்பதியர், விவகாரத்து பெற்றவர்கள், வாழ்க்கை துணையை இழந்தவர்கள் இவர்கள் யார் வேண்டுமானாலும் குழந்தையை தத்தெடுக்க முடியும். 

உறவுகள் இல்லாமல் ஆதரவற்று இருக்கும் குழந்தைகள், சொந்த பந்தத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள், குழந்தையை  வளர்க்க முடியாத சூழ்நிலையில் உறவுகள் சம்மதத்துடன் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் குழந்தைகளை தத்தெடுக்க முடியும்.

6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அவர்களின் சம்மதத்துடன் தத்து கொடுக்க வேண்டும்.

குழந்தையை தத்தெடுப்பவர்களுக்கும் குழந்தைக்குமான வயது வித்தியாசம் 25 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

குழந்தையை தத்தெடுப்பவர்கள் எந்தக் குற்றப் பின்னணி உடையவர்களாவும் இருக்க கூடாது. அதே போல அவர்களின் உடல் ஆரோக்கியமும் முக்கியம். 

தனிப்பட்ட ஒரு ஆண், ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுக்க முடியும். ஆனால் பெண், ஆண் அல்லது பெண் இரண்டில் யாரை வேண்டுமானாலும் தத்தெடுக்கலாம். தத்தெடுக்கும் தம்பதிகளின் சராசரி வயது 55க்குள் இருக்க வேண்டும். அதாவது தத்தெடுக்கும் இரு நபர்களின் வயதையும் சேர்த்து கூட்டினால் 110 வயதுக்கு மேல் செல்ல கூடாது. தனிப்பட்ட நபர் தத்தெடுத்தால் அவர்களின் வயது 55 வயதுக்கு மேல் இருக்க கூடாது.

தம்பதியர் இருவரின் சம்மதமும் இருந்தால் மட்டுமே குழந்தைகளை தத்தெடுக்க முடியும். அதேபோல் தத்தெடுப்பவர்களின் பொருளாதாரப் பின்னணி, அவர்களின் ஆண்டு வருமானம் ஆகியவற்றையும் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படும். 

குழந்தையை தத்தெடுக்க central adoption resource agency யில் முறையாக பதிவு செய்வது அவசியம்.

குறிப்பிட்ட குழந்தையை தத்தெடுக்க விரும்புபவர்கள் குழந்தையை ஏற்றுக் கொண்டதற்கான ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும்.

இவை முடிந்த பிறகு ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் மனுவுடன் தாக்கல் செய்யப்படும். பிறகு குழந்தையை பெற விரும்புவோர் நீதிமன்றத்திற்கு வந்து மனுவில் கையெழுத்திட வேண்டும். நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் குழந்தையை தத்தெடுப்போரிடம் நீதிபதி விசாரணைக்காக சில கேள்விகளை கேட்பார். இவை அனைத்தும் முடிந்த பிறகு, குழந்தையை தத்தெடுப்பதற்கான முறையான அனுமதி சட்டரீதியான வழங்கப்படும். அதன் பிறகுதான் குழந்தை உரிய முறையில் ஒப்படைக்கப்படும். இருப்பினும் குழந்தை தத்தெடுத்துக்கப்பட்ட பிறகு குழந்தை வளரும் விதம், சூழல் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த நடைமுறை 2 வருடங்களுக்கு மட்டும் நீடிக்கும்.

குழந்தையை தத்தெடுக்கும் போது கேட்கப்படும் ஆவணங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், தத்தெடுப்பவரின் நான்கு புகைப்படங்கள் (தம்பதியாக இருந்தால் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்), திருமண சான்றிதழ், எச்ஐவி பரசோதனை செய்யப்பட்ட மருத்துவச் சான்று, வீட்டு முகவரிக்கான ஆதராம், வருமானச் சான்று, ஏன் குழந்தையை தத்தெடுக்கிறேன் என்பதற்கான காரணங்கள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை எல்லாம் சமர்ப்பிக்கும் பட்சத்தில்தான் இதர நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். 
 
சட்ட ரீதியாக தத்தெடுக்கும் குழந்தைகளை எதிர்காலத்தில் யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதே இதன் சிறப்பு. எனவே குறுகிய நடைமுறை எனக் குறுக்கு வழியில் செல்வதைவிட  சட்ட ரீதியாக செல்வதே சிறந்தது.