சிறப்புக் களம்

மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?

மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?

jagadeesh

மசினக்குடியில் காட்டு யானை மீது இரக்கமற்ற மனிதர்கள், எரியும் டயரை வீசி குரோதத்தை வெளிப்படுத்தினர். வலியை உணராமல் ஓர் உயிரை பலியாக்கி இருக்கிறார்கள். கடந்தாண்டு கேரளாவில் கர்ப்பிணி யானையொன்று வாயில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக பட்டினியிலும் வலியிலும் உயிரிழந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளானது. இப்போது மசினக்குடியில் தங்கும் விடுதி ஊழியர்களால் யானைக்கு நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதல். நெருப்பு டயர் தன் மீது விழுந்தவுடன் யானை துடிதுடிதப்படியே ஓடும் காட்சி, நெஞ்சில் ஈரம் இருக்கும் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தும்.

இதுபோன்ற யானை - மனிதன் மோதல்கள் சூழலியலாளர்களிடையே பெரும் கவலையை மட்டுமே ஏற்படுத்துகின்றன. அதுவும் முதுமலை வனச்சரகத்துக்கு உள்பட்ட மசினக்குடியில் இயங்கும் தங்கும் விடுதிகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டும், இன்னும் சில தங்கும் விடுதிகள் அனுமதியின்றி இயங்குவதாக கூறப்படுகிறது. முக்கியமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யானை வழித்தடங்களில் அனுமதியின்றி சுற்றுலா பயணிகளுக்காக தங்கும் விடுதிகளை கட்டியுள்ளனர். குறிப்பாக மசினகுடி சுற்றுப்பகுதிகளில் அதிக அளவில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக அரசு கண்டுள்ளது.

2000ம் ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரியில் ரிசார்ட்கள் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 5 ஆண்டுகளில் நீலகிரியில் ரிசார்ட்கள் இருமடங்காக அதிகரித்தது. தனியார் தேயிலைத் தோட்டங்கள் மின்வேலிகளை அமைத்து பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டு வனத்திற்கு அருகிலேயே ரிசார்ட்களை அமைத்தனர். குறிப்பாக மசினகுடி, தேவாலா, கூடலூர், நடுவட்டம், ஊட்டி புறநகர், கோத்தகிரி, புறநகர் பகுதிகளில் அதிக அளவில் ரிசார்ட்கள் விலங்குகளின் வழித்தடங்களை மறித்து கட்டப்பட்டது.

வனத்தை அழித்து தேயிலைத் தோட்டங்கள் உருவான பின்பும் இரவில் காட்டுயிர்களான யானை, புலி, சிறுத்தைகள் தனது வழித்தடங்களாக அவற்றை பயன்படுத்தி வந்தது. இதனால் மக்களுக்கு தொந்தரவுகள் இல்லாமல் இருந்தது. மேலும் மேலும் வனம் அழிக்கப்பட்டதாலும் ரிசார்ட்களுக்காக தனியார் தோட்டங்களில் மின்வேலிகளை அமைத்ததாலும் யானைகள், சிறுத்தைகள் ஊருக்குள் வழிமாறி வரத்தொடங்கி பின் அதுவே வாடிக்கையாகிவிட்டது. இதனால் மனித காட்டுயிர் மோதல்கள் அதிகமானது. இதனையடுத்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள மற்றும் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகள் இடிக்கப்படும் என்று 2018 இல் உத்தரவிட்டிருந்தார்.

எனவே அனைவரும் அனுமதி பெற வேண்டும் என்று எச்சரித்திருந்தார். இந்நிலையில் பலரும் அனுமதிக்கு விண்ணப்பித்தனர். சிலர் விண்ணப்பிக்கவில்லை. பலரும் தனது சொந்த தோட்டத்தில் கட்டியிருப்பதால் அதை வீடு போல காட்டிவிட்டனர். உச்சநீதிமன்றமும் அனுமதி பெறாத தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. மேலும் புதிதாக உணவகங்கள் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான தடை தொடரும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனாலும் முறையான அனுமதியின்றி சூழல் சுற்றுலா தொடர்ந்து மசினக்குடி பகுதியில் தொடர்ந்து நடைபெறுகிறது. இவை அனைத்தும் யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற விடுதிகளால் காட்டுயிர்களுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் ஆபத்தாக அமையக்கூடியவைதான்.

என்ன செய்கின்றன அனுமதியில்லாத தங்கும் விடுதிகள் ?

முதுமலை வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதிகளுக்கு திட்டமிட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் முன்கூட்டியே ஆன்லைனில் முறைப்படுத்தப்பட்ட தனியார் தங்கும் விடுதிகளையோ, தமிழக அரசின் தங்கும் விடுதிகளையோ முன்பதிவு செய்துவிட்டு வருவார்கள். ஆனால் இதுபோல திட்டமிடாமல் சுற்றுலாவுக்கு வருபவர்களைதான் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கும் தங்கும் விடுதிகளின் டார்கெட்டாக இருக்கும். இதுபோன்ற சுற்றுலாப் பயணிகளை ஜீப் டிரைவர்கள் மூலமாகவும், இடைத்தரகர்கள் மூலமாகவும் தங்குவதற்கு கொண்டுவரப்படுவார்கள். ஒருநாள் தங்குவதற்கும், மூன்று வேளை உணவுக்கும், காட்டுக்குள் சுற்றிப்பார்க்கவும் ரூ3000 முதல் ரூ,8000 வரை வசூலிக்கப்படும்.

அதேபோல வனத்துறை அனுமதித்துள்ள இடங்களுக்கு மட்டும் சுற்றுலாப் பயணிகளை ஜீப்பில் ஏற்றிச் செல்லாமல், அனுமதியில்லாத இடங்களுக்கும் அழைத்துச் செல்கின்றனர். இதனால் காட்டுயிர்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்படுகிறது. இதனால் முதுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் வனச் சுற்றுலாவை இப்போது யானைகள் பெரிதும் வெறுக்கத் தொடங்கியுள்ளன. அதுவும் ஜீப்புகளை கண்டால் யானைகளுக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. யானைக்கு அருகே சென்று ஹார்ன் அடிப்பது அவற்றை எரிச்சலுக்கு உள்ளாக்குகின்றன. இதனால் பல நேரங்களில் யானைகள் ஜீப்புகளை துரத்தும் சம்பவமும் அதிகரிக்கிறது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான ராமமூர்த்தி கூறியது "காடு எப்போதும் காடாகவே இருக்க வேண்டும். நமக்கு இருக்கும் குறைவான காட்டுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துவிட்டோம். பின்பு அங்கு எதற்காக ரிசார்ட்டுகள்? அதுவும் அரசின் முறையான அனுமதி பெறாமல் இயங்கும் ரிசார்ட்டுகள் அனைத்தும் பல தவறான விஷயங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதுவும் மசினக்குடி போன்ற பகுதிகளுக்கு கேரளம், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இருந்து விடுமுறை தினங்களில் ஏராளமானோர்கள் வருகிறார்கள். இவையெல்லாம் இந்த ரிசார்ட்டுகள் கொழிக்க காரணமாக இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை அரசு இப்பகுதியில் இருக்கும் ரிசார்ட்டுகள் அனைத்தையும் அகற்ற வேண்டும். தனியாருக்கு அனுமதியே வழங்கக் கூடாது. விடுதிகளை அரசாங்கமே முழுவதுமாக நடத்த வேண்டும். அதனால் வருமானமும் வரும், அவை முறையாகவும் இருக்கும். பொதுவாகவே யானைகள் சமவெளிப்பகுதியில்தான் விரும்பி வசிக்கும். இங்கு மலைகள் ஒட்டியப் பகுதிகளை காடாக அறிவித்துவிட்டதால் யானைகள் எங்கு வாழும்? முன்பெல்லாம் ஆதிகாலத்தில் சமவெளிகளில் யானையும் மனிதனும் ஒன்றாகத்தான் வாழ்ந்தான். ஆனால் இப்போது நிலைமை வேறு. இதுபோன்ற ரிசார்ட்டுகள் தூக்கி எறியும் உப்பு கலந்து உணவுகளால் ஈர்க்கப்பட்டு யானைகள் அந்தப் பகுதிகளுக்கு வருகிறது. மசினக்குடியில் யானைக்கு நேர்ந்த கொடூரம் மிகவும் மோசமானது. இதனை நிகழ்த்தியவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும், அது இனியும் இதுபோன்ற செயல்களை செய்பவர்களுக்கு பாடமாக வேண்டும்" என்றார் அவர்.