ஆசிரியை Freepik
சிறப்புக் களம்

இளையோர் மொழிக்களம் | தமிழிலும் தள்ளாட்டம் ஆங்கிலத்திலும் அரைகுறை!

எழுத்தாளர், கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 14

மகுடேசுவரன்

முற்காலத்தில் பள்ளி ஆசிரியர்கள் என்னும் பெரும்பொறுப்பில் ஆண்பாலரே மிக்கிருந்தனர். பெண்டிர் பணிக்குச் செல்லும் போக்கு வளர்ந்தவுடன் ஆசிரியப் பொறுப்பிலும் அவர்கள் அமர்ந்தனர். ஆண் ஆசிரியரைவிடவும் அவர்கள் நன்கு கற்பிக்க வல்லவர்கள்.

தொடக்கநிலை வகுப்புகட்கு இன்னும் பொருத்தமானவர்கள். குழந்தைகளைத் தாய்க்கு நிகரான அன்போடும் அக்கறையோடும் அணுகக்கூடியவர்கள். பாடத்தைக் கற்றுத் தருதல் ஒரு பக்கத்திலும் குழந்தைகளின் மனங்கவர்ந்து உரையாடுதல் ஒரு பக்கத்திலுமாக நிறுத்துகோல் தாழாமல் அவர்களால் பணியாற்ற முடியும்.

ஒரு குழந்தைக்கு இவ்வுலகில் மிகவும் பிடித்த ஒரேயொருவர் யாராக இருக்க முடியும் ? அவருடைய தாயாராகத்தான் இருக்க முடியும். அம்மாதான் குழந்தைக்கு எல்லாம். அவ்வுணர்வினைத் தருபவர்தான் ஆசிரியை. அம்மாவின் அன்பு மொழி எத்தகையதோ அதற்குச் சற்றும் குறைவில்லாது வெளிப்படுவது ஆசிரியையின் மொழி.

மழலையர் பள்ளிக்கு முதல்நாள் செல்லும் குழந்தையை வாயிலில் நின்று வரவேற்கிறார் ஆசிரியை. அவர் பார்ப்பதற்குத் தாயாரை ஒட்டிய தோற்றத்தில் இருக்கிறார். அவர் இன்முகத்தோடு பேசுகிறார். முதற்சில நாள்களில் போதும் போதும் என்று கூறுமளவுக்குக் குழந்தையைக் கொஞ்சுகிறார். இதனால் குழந்தையின் தாய் ஏக்கம் தீர்க்கப்பட்டு அவ்விடத்திற்குச் சிறிய மாற்றீடு ஒன்று செய்யப்படுகிறது. பள்ளி இனிது பாடம் இனிது என்று ஆகிறது.

இவ்விடத்தில் ஓர் ஆண்பால் ஆசிரியரைக் கற்பனை செய்து பாருங்கள். வாயிலில் நல்ல தோற்றப் பெருக்குடைய ஆண்பால் ஆசிரியர் ஒருவர் வரவேற்கிறார் என்று கொள்வோம். குழந்தை மிரண்டுவிடும். பெண்களிடம் தாவிச் சென்று தஞ்சமடைவதைப்போல் ஒரு குழந்தை ஆண்களிடம் சென்றுவிடாது. உயிரினங்கள் யாவற்றிலும் இத்தகைய தாயன்பே குழந்தையை வளர்த்துப் புறந்தருகிறது.

நாங்கள் பள்ளிக்குச் சென்றபோது ஆறடி உயரத்தினரான ஆசிரியரே வரவேற்றார். போதாக்குறைக்கு அவர் அடர்த்தியான கருகரு மீசையும் வைத்திருந்தார். அரசுப் பள்ளியில் ஓர் ஆசிரியையிடம் பாடம் கற்க வாய்த்தபோது நான் எட்டாம் வகுப்புக்கே வந்துவிட்டேன். ஒருவேளை எங்களுக்கும் தொடக்கக் கல்வியிலிருந்தே ஆசிரியை வாய்த்திருந்தால் இன்னும்கூட திறமை பெற்றவர்களாகியிருப்போமோ, என்னவோ !

இந்தக் காலக் குழந்தைகள் ஒருவகையில் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள்மீது அன்பைப் பொழியும் ஆசிரியையரை வாய்க்கப் பெற்றவர்கள். உறவில் ஒருவர் காட்டாத அன்பையெல்லாம் அவர்கள் தம் மாணாக்கர்கள்மீது பொழிகிறார்கள். குழந்தைகள் அந்தச் சீராட்டலில் திக்குமுக்காடிப் போகின்றன. தாயாரிடம் பேசுவது போன்ற உரிமையோடு ஆசிரியையிடம் உரையாடுகின்றன.

அரும்பும் அகவையினரின் நெஞ்சத்தில் இந்த நம்பிக்கையை விதைப்பதுதான் நம் கல்விக்கூடத்தின் ஆக்கவிளைவான பகுதி. அதனைப் பயன்படுத்திக்கொண்டு அருமையான மொழிக்கல்வியை வழங்கலாம். முதற்சில ஆண்டுகளில் தமிழ் மொழிக்கல்வியையே தொடர்ந்து புகட்டிவிடலாம். தமிழில் எழுதப்பட்ட குழந்தைப் பாடல்கள் சில நூறுகளையேனும் பாடப் பழக்கலாம். ஆயிரக்கணக்கான விடுகதைகளைப் போடலாம். தொன்மைக் கதைகள், அருஞ்செயல் புனைவுகள், பேரிலக்கியக் கதைச் சுருக்கங்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் எனப் பலவற்றையும் கற்பிக்கலாம். மொழி இலக்கணத்தின் அடிப்படைகளையும் பயன்பாட்டு வடிவங்களையும் தெளிவுறச் சொல்லிக் கொடுக்கலாம்.

ஆசிரியை

நடைமுறையில் என்ன நடக்கிறது? ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுக்கிறோம். ஆங்கில மொழிக் கல்விக்கு எதிராக நாம் ஒன்றையும் கருதவில்லை. இன்னொரு மொழி கற்பது மிகவும் நல்லதுதான். ஆனால், அதற்கு உகந்த அகவை எது என்பதில்தான் நமக்குக் கருத்து வேறுபாடு. பயிற்றுமொழியாய் ஆங்கிலம் இருப்பதன் கடுஞ்சூழல் நம்மை உறுத்தவேண்டும். தமிழ் வெறும் மொழிப்பாடமாயும் ஆங்கிலம் பள்ளிப் பயிற்றுமொழியாயும் பெரும்பாலான தமிழ்நாட்டுப் பள்ளிகளில், குறிப்பாகத் தனியார் பள்ளிகளில் நிலைத்துவிட்ட போக்கின் இன்றைய விளைவுகளை ஆராயவேண்டும்.

தமிழை நன்கு கொடுத்துவிடவேண்டும். பிறகு அந்தத் தமிழ் வழியாகவே ஆங்கில மொழியைக் கற்றுக்கொடுக்கலாம். அதற்குத் தமிழில் தேர்ந்த கல்வி பெற்றிருப்பது முதன்மை. தமிழ்வழியாக அறியப்பட வேண்டியதுதான் ஆங்கிலம். நாம் என்னதான் மாற்றிச் சொல்ல முயன்றாலும் களத்தில் அதுதான் நடக்கிறது. தமிழைக்கொண்டுதான் ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்கிறோம். ஆங்கிலத்தில் வழங்கப்படும் ஒரு சொல்லுக்கான பொருளைத் தமிழ்ச்சொல்கொண்டே அறிகிறோம்.

“பேர்ட்ஸ்னா என்ன ? பறவைகள். வானத்துல பறக்குதே, குருவி கிளி காக்கா எல்லாம். அதுங்கதான் பேர்ட்ஸ்” என்றுதான் ஆங்கிலத்தை ஒரு குழந்தைக்குக் கற்றுக்கொடுக்கிறோம். இந்த முறையில் தமிழை நன்கு கற்றுத் தரவேண்டிய ஒரு கண்ணி எங்கேயோ மெல்ல தளர்கிறது. தமிழுக்கே உரிய அவ்விடத்தை ஆங்கிலம் பிடித்துக்கொள்கிறது. இவ்வாறுதான் ஒரு குழந்தை தன் தாயினை நிகர்த்த ஓர் ஆசிரியையின் அன்பின் மயங்கி ஆங்கிலம் கற்கத் தொடங்குகிறது. அது ஆங்கிலத்திலும் ஆண்டு செழிக்காமல், தமிழிலும் மொய்ம்புற விளங்காமல் இருதலை மொழிமனத்தோடு வளர்கிறது.