சிறப்புக் களம்

'ஹைபர் டென்ஷன்' - உயர் ரத்த அழுத்தம்: யாருக்கு, எவ்வளவு இடைவெளியில் பரிசோதனை அவசியம்?

'ஹைபர் டென்ஷன்' - உயர் ரத்த அழுத்தம்: யாருக்கு, எவ்வளவு இடைவெளியில் பரிசோதனை அவசியம்?

Sinekadhara

'ஹைபர் டென்ஷன்' அல்லது உயர் ரத்த அழுத்தத்தை எத்தனை நாள்களுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகின்றனர் மருத்துவர்கள்...

உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொதிப்பு அல்லது ஹைபர் டென்ஷன் என்று அழைக்கப்படுகிற பிரச்னை இன்று பலருக்கும் உள்ளதுதான். தாறுமாறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை, புகைப்பிடித்தல் மற்றும் போதைப்பழக்கம் போன்றவை ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரத்த அழுத்தம் அதிகரிப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இதயநோய் வரும் வாய்ப்புகளும் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கட்டுக்குள் வைக்கும் முயற்சிகளை எடுக்கவேண்டும்.

ஒருமுறை ரத்த அழுத்தம் அதிகரிப்பதை கண்டறியும்போதே என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் அதிகரிப்பதை எத்தனை நாள்களுக்கு ஒருமுறை சோதித்து பார்க்கவேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. இதற்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்குகின்றனர் நிபுணர்கள்.

பொதுவாக குழந்தைகள் வருடத்திற்கு ஒருமுறையும், பெரியவர்கள் மாதத்திற்கு ஒருமுறையும் ரத்த அழுத்தத்தை சோதித்துப் பார்க்க வேண்டும். ரத்தக் கொதிப்பிற்கு மருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை தங்களுடைய ரத்த அழுத்தம் எந்த அளவில் இருக்கிறது என்பதை சோதித்துப்பார்க்க வேண்டும். ரத்த கொதிப்பிற்கு மருந்து சாப்பிட ஆரம்பித்திருப்பவர்கள் ஒன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு தினசரி இரண்டுமுறை பரிசோதிக்கவேண்டும். அதாவது, ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்வரை தினசரி பரிசோதித்து பார்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரத்தக் கொதிப்பு ஏற்பட்ட ஆரம்ப நாள்களில் ஒருநாளில் இரண்டுமுறை பரிசோதிப்பவர்கள், தூங்கி எழுந்தவுடனும், மாலை நேரத்திலும் சோதித்துப்பார்த்தல் சிறந்தது.

பரம்பரை பரம்பரையாக இந்த பிரச்னை இருப்பவர்களுக்கு 40-60 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு அதிகரிப்பவர்கள் என்டோக்ரினாலஜிஸ்ட் அல்லது கார்டியாலஜிஸ்ட்டின் ஆலோசனை பெற்று தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

மேலும், அனைத்து வயதினருக்கும் ரத்த அழுத்த அளவு 120/80 mmHg தான் இருக்கவேண்டும். இந்த அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனை பெறுவதே சிறந்தது.