சிறப்புக் களம்

இடதுசாரி பங்களிப்பு, வெளிநாட்டு வேலைகள்... - வறுமை ஒழிப்பில் கேரளம் சாதித்ததன் பின்புலம்!

இடதுசாரி பங்களிப்பு, வெளிநாட்டு வேலைகள்... - வறுமை ஒழிப்பில் கேரளம் சாதித்ததன் பின்புலம்!

PT WEB

நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட 'பன்முக வறுமைக் குறியீடு' அறிக்கையின்படி, வறுமை குறைந்த மாநிலமாகத் திகழ்கிறது கேரளா. இந்த நிலையை கேரளா எட்டுவதற்கான காரணிகள் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவில் நிலவும் ஏழ்மை நிலை குறித்து நாடு முழுவதும் ஆய்வு நடத்திய நிதி ஆயோக், சமீபத்தில் 'பன்முக வறுமைக் குறியீடு' (எம்.பி.ஐ) அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் குறித்து தகவல் சொல்லப்பட்டிருந்தது. நாட்டில் அதிக ஏழைகள் மிகுந்த மாநிலங்களில் பீகார் முதலிடத்திலும், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் இடம்பெற்றிருந்தன. இதே அறிக்கையில், வறுமை குறைந்த மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டது.

கேரளாவின் மக்கள் தொகையில் 0.71 சதவீதம் பேர் மட்டுமே வறுமையில் உள்ளனர் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு விகிதம், மக்களின் வாழ்க்கை தரம் உள்ளிட்ட 12 முக்கிய அம்சங்களை கொண்டு நிதி ஆயோக் நடத்திய ஆய்வில் ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, பள்ளிப்படிப்பு மற்றும் சுகாதாரம் போன்ற அம்சங்கள் பெரும்பாலானவற்றில் கேரளா முன்னேறிய மாநிலமாக அறியப்படுகிறது.

கேரளாவின் வறுமை ஒழிப்புக்கு பின்னணியில் கம்யூனிசத்தின் பங்களிப்பு முக்கியமாக அறியப்படுகிறது. கேரளம் மாநிலமாக அமைந்தது முதல் ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் வறுமையைப் போக்குவதை முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி வந்துள்ளன. பொருளாதார நிபுணரும், கேரள மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் ராமகுமார் இது தொடர்பாக கூறும்போது, ``கேரளத்தில் வறுமை ஒழிப்புக்கு அடித்தளமிட்டவை 1957-ல் ஆட்சி செய்த இஎம்எஸ் நம்பூதரி தலைமையிலான அரசு கொண்டுவந்த நிலச் சீர்திருத்தங்கள்தான். இதன்பின் 1960-களில் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள், பொது விநியோகத் திட்டங்கள், சுகாதார திட்டங்களும் வறுமை ஒழிப்பில் முக்கியப் பங்கை கொண்டிருந்தன.

அந்த காலக்கட்டங்களில் இருந்த அரசுகளால் தாய்வழி ஆரோக்கியம், குழந்தை இறப்பு மற்றும் பாலின விகிதத்தில் கேரள மாநிலம் சில ஐரோப்பிய நாடுகளுக்கு நிகரான முன்னேற்றம் அடைந்திருந்தது. இதே காலக்கட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த `கேரள வளர்ச்சி மாதிரி' (Kerala model of development) இந்திய அளவில் பாராட்டைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 1980-களின் தொடக்கத்தில் குழந்தை இறப்பு விகிதங்களில் கேரள மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது.

எடுத்துக்காட்டாக 1986-ம் ஆண்டு 1000க்கு 27 என்ற அளவிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் இருந்தது. மேலும், 1991-ம் ஆண்டு 93.9 சதவீத எழுத்தறிவு கொண்ட மக்கள் நிறைந்த மாநிலமாக கேரளா உருவெடுத்தது. இதன் தாக்கம்தான் இப்போது தெரிகிறது. கேரள மாநிலம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மனித வளர்ச்சிக் குறியீட்டை வைத்திருக்கிறது என்பது நிதி ஆயோக் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் மூலம் உறுதியாகிறது" என்று டாக்டர் ராமகுமார் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிபி ஜான், திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினராக இருந்தவர். இவர் பேசுகையில், ``கேரளம் கம்யூனிசத்தின் வலுவான கொள்கைகளால் இயக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் மாநிலத்தை ஆண்டாலும், சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தின் கொள்கைகளை கொண்டே அவர்கள் அரசாங்கத்தை வழிநடத்தினர். இந்தக் கொள்கைகள்தான் கேரளாவின் வறுமை ஒழிப்புக்கான வெற்றியாக அமைந்தது" என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டு இடம்பெயர்வு: மலையாளிகளின் வாழ்க்கை தரம் மேம்பட்டத்தில் முக்கிய பங்காற்றியது வெளிநாட்டு பணம் எனலாம். 1980-க்கு பிறகு மலையாள மக்கள் கணிசமானோர் ஜிசிசி (GCC) நாடுகள் எனப்படும் எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளுக்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர். வேலை நிமித்தமாக இடம்பெயர்ந்த இவர்கள், அந்த நாடுகளில் பல்வேறு பணிகளை செய்து வருமானம் ஈட்டி வந்தனர்.

1988-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து மேற்கு ஆசியாவிற்கு குடியேறியவர்களில் 50 சதவீதம் பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. இதேபோல் உலக வங்கி கணக்கெடுப்பின்படி, 2019-ம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய மொத்த பணத்தில் 19 சதவீதத்தை கேரளம் பெற்றுள்ளது. இவர்கள் மாநிலத்தின் வறுமை ஒழிப்பில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய சிபி ஜான், ``கேரளத்தை ஆட்சி செய்த அரசுகள் கொண்டுவந்த நிலம் மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் அடையப்பட்ட வளர்ச்சியின் காரணமாக மக்கள் பெருமளவில் அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். அனைத்து அரசுகளும் இதுவரை செயல்படுத்திய சமூக நலக் கொள்கைகள் இதற்கு முக்கிய காரணம்" என்று குறிப்பிடுகிறார். சிபி ஜான் கேரளத்தை ஆட்சி செய்த அரசுகளை இந்த சாதனைக்கு உகந்தவர்களாக குறிப்பிடும் வேளையில், வரலாற்று அறிஞரும், டெல்லி பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியருமான டாக்டர் யாசர் அராபத், கேரளத்தின் சமூக நீதிப் போராளி அய்யன்காளி மற்றும் கல்வி தந்தையாக போற்றப்படும் ஸ்ரீ நாராயண குரு போன்றோர்தான் இந்த சாதனைக்கு காரணம் என்று குறிப்பிடுகிறார்.

``எந்த அரசியல் கட்சிகளும் இந்தப் பெருமைக்கு சொந்தம் கொண்டாட முடியாது. காரணம், அய்யன்காளி மற்றும் ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் தலைமையிலான மறுமலர்ச்சி இயக்கங்களால் கிடைத்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களின் விடுதலையே இந்த சாதனையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளன" என்கிறார் யாசர் அராபத்.

பட்டியலின மக்களின் உரிமைகள் பற்றிய கொள்கை ஆய்வாளரான டாக்டர் மீரா வேலாயுதன், ``மாநிலத்தில் இன்னும் 0.71 சதவீத மக்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்பதுதான் நாம் இங்கு பார்க்க வேண்டியது. வறுமையில் வாழும் இந்த ஒரு சதவீதத்திற்கும் குறைவான மக்கள் யாரென்றால் அது தலித் மக்களும் பழங்குடி மக்களும்தான்.

நிதி ஆயோக் அறிக்கையிலேயே பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களான வயநாடு மற்றும் இடுக்கிதான் கேரளாவில் மிகவும் ஏழ்மையானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 3.48 சதவீதம் பேர் கல்வி, சுகாதாரம் போன்றவை கிடைக்காமல் இருக்கின்றனர். அதுவே இடுக்கி மாவட்டத்தில் 1.6 சதவீத மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சமூக மக்கள் இன்னும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர் என்பதை அறிக்கை தெள்ளத் தெளிவாகியுள்ளது. எனவே, அவர்களின் நிலையை மேம்படுத்த நாம் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும்" என்றுள்ளார்.

இதனிடையே, கேரளாவின் குறைந்த வறுமை விகிதம் குறித்து கொண்டாடுவதை கடுமையாக எச்சரித்துள்ளார் பொது சுகாதார நிபுணர் டாக்டர் அரவிந்தன். ``40 ஆண்டுகளுக்கு முன்பு மனித வளர்ச்சிக் குறியீட்டில் ஐரோப்பிய நாடுகளுக்கு நிகரான தரத்தை கேரளா எட்டிய நிலையில், அதனை உத்தரப் பிரதேசம் அல்லது பீகார் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு கொண்டாட வேண்டாம். ஏனென்றால் மாநிலத்திற்குள் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான வாழ்க்கைத் தரத்தில் உள்ள வேறுபாடு மிக அதிகமாக இருக்கிறது. அந்த வேறுபாட்டை அரசுகள் முதலில் சரிசெய்ய வேண்டும்" என்று குறிப்பிடும் அரவிந்தன், ``பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகையில் பாதி பேர் வறுமையில் வாடுகிறார்கள். அந்த மாநிலங்களை ஒப்பிடும் கேரளத்தின் நிலை பரவாயில்லை. அதுவே வறுமை குறைந்த மாநிலமாக கேரளா சொல்லப்படுவதில் உண்மை கிடையாது" என்றும் எச்சரித்துள்ளார்.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Federal