சிறப்புக் களம்

தூக்கம் வரமாட்டேன் என்கிறதா? அப்போ படுக்கைக்கு போகும் முன் இதை ட்ரை பண்ணுங்க!

தூக்கம் வரமாட்டேன் என்கிறதா? அப்போ படுக்கைக்கு போகும் முன் இதை ட்ரை பண்ணுங்க!

Sinekadhara

சராசரியாக ஒருநாளில் ஒரு நபர் குறைந்தது 7 லிருந்து 8 மணிநேரமாவது நன்றாக தூங்கவேண்டும். அதிலும் இரவு தூக்கம் என்பது மிகமிக அவசியம். ஏனெனில் இரவில் உடல் ஓய்வில் இருக்கும்போதும் சில ஹார்மோன்களும், நொதிகளும் தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கும். அதற்கு தூக்கம் தேவை. ஆனால் பல்வேறு வேலைப்பளு மற்றும் மன உளைச்சல்களுக்கு நடுவே பலராலும் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. தூக்கம் வர பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வர். ஆனால் இரவு தூங்கப்போகும் முன் ஒரு ஸ்பூன் தேன் குடிப்பது நல்ல தூக்கத்தை கொடுக்கும் என்கிறது ஓர் ஆய்வு. தேனில் இனிப்பு சுவை இருப்பது மட்டுமல்ல; அதில் நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் நீரேற்றம் பண்புகளும் நிறைந்திருக்கின்றன. தேன் குடிப்பது பசியை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் எந்தவித இடையூறுமின்றி தூங்கவும் உதவும். பதப்படுத்தப்படாத சுத்தமான தேன் சருமத்தை மெருகேற்றுகிறது. காயங்களை ஆற்றுகிறது. தொண்டையை கரகரப்புக்கு தீர்வு கொடுக்கிறது. தேனை எந்தெந்த வகையிலெல்லாம் உதவும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

தூங்க உதவுகிறது

தேனை ’தூக்க மருத்துவர்’ என்றே அழைக்கலாம். படுக்கைக்கு போவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு சுத்தமான தேனை ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்வது, வயிறு நிறைந்திருக்கும் உணர்வை கொடுப்பதுடன், நல்ல தூக்கத்தையும் கொண்டுவரும். பெரும்பாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால், கார்டிசோலை வெளியிடுமாறு மூளைக்கு செய்தி அனுப்பப்படுகிறது. இதனால் மக்கள் நள்ளிரவில் வயிற்றெரிச்சலுடன் எழுந்திருப்பார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால்தான் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிப்பது தூக்கத்தை ஊக்குவிக்கும்.

எடை குறைப்புக்கு உதவுகிறது

உடல் எடையை குறைப்பதில் தேன் டயட் முதன்மையான இடத்தில் இருக்கிறது. தேன் போன்ற ஃப்ரக்டோஸ் நிறைந்த உணவுகள் கொழுப்பை 10 மடங்கு அதிகமாக எரிக்கிறது. அதேசமயம் ஸ்டாமினா அளவை அதிவேகமாக அதிகரிக்கிறது. கல்லீரலுக்கு தேன் ஒரு எரிபொருள் போன்று செயல்பட்டு குளுக்கோஸ் சுரப்பை தூண்டுகிறது. தேன் டயட்டை பின்பற்ற விரும்புவோர் சர்க்கரைக்கு பதிலாக முற்றிலும் தேனை பயன்படுத்தவேண்டும். இரவில் ஒரு ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கி குடித்துவர எடை குறைவதை கண்கூடாக காணலாம்.

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

தேன் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க உதவுகிறது. பல பாரம்பரிய மருத்துவங்களில் தேன் பயன்படுத்தப்படுகிறது. காயங்களை ஆற்றுதல், தொண்டை கரகரப்பை குணப்படுத்துதல், கிருமிகளிடமிருந்து பாதுகாத்தல், பற்களில் அழுக்கு படியாமல் தடுத்தல், ஒவ்வாமையை எதிர்த்தல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற பல்வேறு குணங்களை கொண்டது தேன்.