ஜிம்மி freepik
சிறப்புக் களம்

இளையோர் மொழிக்களம் பகுதி 19 - செம்மி ஜிம்மி ஆனது எப்படி?

எழுத்தாளர் , கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 19

மகுடேசுவரன்

வீட்டிலிருந்து நாம் கற்றுக்கொண்ட சொற்கள் நம்மைச் சூழ்ந்தோரிடமிருந்து வந்தன. தாய் தந்தையிடமிருந்து முதற்சொற்களைப் பெற்றோம். பிற உறவினர்களும் நண்பர்களும் அக்கம்பக்கத்தாரும் நாமறிய வேண்டிய சொற்களைத் தொடர்ந்து வழங்கினார்கள். வளரும் பிள்ளைக்காலத்தில் ஒருவர் அறிகின்ற புதுச்சொற்கள் யாவும் உடனே கவனத்தைக் கோரும். ஏதோ புரியாத சொல்போலும் என்று அந்தச் சொல்லை யாரும் பொருட்படுத்தாமல் செல்வதில்லை. “அது என்ன சொன்னீங்க ? அந்தச் சொல்லுக்கு என்ன பொருள் ?” என்று கட்டாயம் கேட்டுத் தெரிந்துகொள்வோம்.

தாய் - மகன்

என் தந்தையார் தம் நண்பர்களை வகைவகையான செல்லப் பெயர்களால் குறிப்பிடுவார். அவை உயர்வு விளியாகவும் இருந்தமையால் அவருடைய நண்பர்கள் அதற்குப் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவ்வாறு அவர் குறிப்பிட்ட ஒரு பெயர் ‘அறிவாளி’ என்பது. தம் நண்பர்களில் ஒருவரை ‘அறிவாளி’ என்றே அழைத்தார். தாம் அவ்வாறு பெயரிட்டழைக்கப்படுகிறோம் என்பது அந்நண்பர்க்கும் தெரியும். ‘அறிவாளி’ என்ற சொல்லைக் குழந்தையாய் இருக்கையில் முதன்முதலாய்க் கேட்டபோது அந்நண்பர் ‘அரிவாள்’போல் இருப்பாரோ என்று நான் நினைத்ததுண்டு.

இப்பெயர்க்கான விளக்கத்தை என் தந்தையாரிடமே கேட்டேன். “எதனையும் அறிந்து ஆராய்ந்து பேசுவார். அறிவுக்குப் பொருந்தாததை யார் சொன்னாலும் ஏற்கமாட்டார். அறிவாகப் பேசுகிறோம், நடந்துகொள்கிறோம் என்ற நினைப்பில் நடைமுறைக்கு ஒவ்வாததையும் அவர் பின்பற்றுவார்” என்று விளக்கினார். இன்றுவரைக்கும் அறிவாளி என்ற சொல்லை எங்கே கேட்டாலும் தந்தையாரின் அந்நண்பர் என் நினைவுக்கு வருகிறார். ஒரு சொல்லானது அறியப்பட்ட நிகழ்வோடும் உருவோடும் சேர்ந்தே நினைவில் தங்குகிறது.  

தாய் - மகள்

அவருடைய இன்னொரு நண்பர்க்கு வைத்த பெயர் ‘பன்னிரண்டு.’ அந்நண்பர் வேளாண்மைத் தொழிலில் இருப்பவர். காலை வேளைகளில் வேளாண்மை சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருப்பார். பொழுது உச்சிக்கு வந்த பிறகுதான் அவற்றிலிருந்து விடுபடுவார். எப்போது எதனைச் சொன்னாலும் எங்கே அழைத்தாலும் ‘பன்னிரண்டு மணிக்கு மேல பார்க்கலாம், நான் வர்றதுன்னா பன்னிரண்டு மணி ஆயிடுமே, பன்னிரண்டுக்கு மேல சொல்றேன்’ என்பார்.  பன்னிரண்டு பன்னிரண்டு என்றபடியே பேசுவார். அதனால் அவர்க்குப் பன்னிரண்டு என்று பெயர்வைத்துவிட்டார். இந்தப் பன்னிரண்டு என்ற சொல் எனக்கு எண்ணைக் குறிப்பிடுவதைவிடவும் ஓர் ஆளைத்தான் நினைவூட்டுகிறது.  

ஊர்ப்புறங்களில் ஒருவரைச் செல்லப் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் எப்போதும் இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சூட்டப்பட்ட பெயரைவிடவும் தம்முடைய செல்லப் பெயர்களால் அறியப்பட்டவர்களாகவே பலரும் இருப்பர். பள்ளிச் சேர்க்கையின்போதுதான் பலர்க்கும் பெயர்சூட்டப்பட்டன என்பது இன்றைய தலைமுறையினர்க்கு வியப்பாக இருக்கலாம்.

அப்பா - மகள்

திருவிழாவில் நேர்ச்சிக் கடனுக்காக மொட்டையடிக்கப்பட்ட ஒரு குழந்தை சிறிது நாள் ‘மொட்டை’ என்றே அழைக்கப்படும். காலப்போக்கில் அப்பெயரே மக்கள் நினைவில் நிலைத்துவிடும். முடி வளர்ந்து பெரியவர் ஆனபோதும் ‘மொட்டை’ என்று அழைக்கும் வழக்கம் ஊர்ப்புறத்தில் மாறியிருக்காது. இவ்வாறு நாமறிகின்ற புதுச்சொற்கள் பலவும் இட்ட பெயர்களால் சூடிய பெயர்களால் செல்லப் பெயர்களால் அறியப்பட்டனவாகவும் இருக்கும். 

நாம் வளர்க்கின்ற நாய் சிவப்பு கலந்த நிறத்தில் இருக்கின்றது என்று கொள்வோம். அதற்குத் தமிழில் ‘செம்மி’ என்றே பெயர் வைத்திருக்கிறோம். கறுப்பாக இருந்தால் அதன் பெயர் ‘கறுப்பன்’. இந்தச் செம்மியை யார் எப்போது அகற்றினார்களோ தெரியவில்லை, அந்தப் பெயர் அப்படியே மருவி ‘ஜிம்மி’ ஆகிவிட்டது. கறுப்பன் ‘பிளாக்கி’ ஆகிவிட்டான்.

நாய்

ஒரு காலத்தில் ஊரில் வளர்க்கப்படும் நாய்களுக்கு எல்லாம் ஒரு பெயர் தவறாது வழங்கப்பட்டது. அதுதான் மணி. மணி நாயை வளர்க்காதவர்களே இல்லை எனலாம். மணி மணியன் என்று உயர்திணையாகி மணியா என்று அழைக்கப்படும். இன்றைக்கு மணி என்ற பெயரை வைப்பதில் நமக்கு விருப்பமில்லை. ஆட்பெயராக வைப்பதற்குக்கூட மணி என்ற சொல்லைக் கருதுகிறார்களா, தெரியவில்லை.

நம்மைச் சுற்றிலும் உள்ளோரால் வழங்கப்படும் சொற்கள் பல வகைகளில் நம்மை ஈர்க்கின்றன. அவற்றில் இழையும் அன்பும் நண்பும் செல்லமும் உரிமையும் அச்சொற்களில் அப்படியே பொதிந்திருக்கின்றன. அந்தப் பொதிவுதான் அச்சொற்களை மறக்க முடியாதபடி செய்கிறது.

பெற்றோர்

புதிய சொல்லாக நம் நினைவில் சேர்ந்து சொல்வளத்தைப் பெருக்குகிறது. அச்சொல் பிறமொழிச் சொல்லாக இருக்கும்போது நாமடையவேண்டிய ஒரு கண்ணி அறுபடுகிறது. ஆற்றின் வெள்ளத்தைப் பெருக்குகின்ற நூறு துணையோடைகளில் ஒன்று காணாமல் போகிறது.