கர்நாடக முதல்வர் பஞ்சாயத்து, ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பின்னர், 13ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது காங்கிரஸ் 135 இடங்களில் வரலாற்று வெற்றி பெற்றது. இதையடுத்து, அக்கட்சி விரைவில் ஆட்சியமைக்கும் என்றிருந்த நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகிய இருவருக்கும் ‘முதல்வர்’ பதவி சண்டை விஸ்வரூபமெடுத்தது.
இருதரப்பு ஆதரவாளர்களும் ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதற்கிடையே, கடந்த மே 14ஆம் தேதி நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின்போது சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அவர்களுடன் 31 அமைச்சர்கள் பொறுப்பேற்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. சித்தராமையாவைத் தேர்ந்தெடுக்க 80 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், இதற்கு இருதரப்பு ஒப்புக்கொண்டதாலேயே சித்தராமையா டெல்லி புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்பட்டது.
அதன்பிறகு டி.கே.சிவக்குமாரைச் சந்தித்த அவரது ஆதரவாளர்கள், “தாங்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டாம்; பெற்றால் முதல்வர் பதவியை மட்டும் பெறுங்கள்” என ஆலோசனை சொல்லி, அவரது மனதைக் குழப்பியதாகவும், இதையடுத்தே அவர் தன் முடிவிலிருந்து மாறி டெல்லி புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் பதவிக்காக, இருவருமே டெல்லியில் முகாமிட்டிருந்தது கர்நாடக மக்களை மட்டுமல்ல, இந்திய அரசியலாளர்களையே உற்றுநோக்க வைத்தது.
அப்போது இருதரப்பையும் அழைத்துப் பேசி ஆலோசனை நடத்திய டெல்லி காங்கிரஸ் தலைமை, டி.கே.சிவக்குமாரிடம் சிபிஐ பற்றிய வழக்குகளையும் அதனால் வரும் பாதிப்புகளையும் பக்குவமாய் எடுத்துக் கூறியுள்ளது. மேலும், ”நாம் தற்போதுதான் கஷ்டப்பட்டு மேலே வந்துள்ளோம். இதை நாடாளுமன்றத் தேர்தல் வரை எதிரொலிக்க செய்ய வேண்டும். ஆகையால், கட்சியின் நலனையும் கருத்தில் கொள்ளுங்கள்.
இந்த வெற்றிக்காக உங்களுடைய உழைப்பு அதிகம். அதற்காக, நாம் இப்போது சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அது நன்றாக இருக்காது. இது, எதிர்க்கட்சிக்கு இழுக்காகத் தெரியும். ஆகவே, முதல்வர் பதவியைத் தவிர, உங்களுக்கு என்ன தேவையோ... அதைச் சொல்லுங்கள், நாங்கள் செயல்படுத்தித் தர தயார்” என வலியுறுத்தியதாம்.
இதையடுத்தே, சிவக்குமாரின் மனம் இறங்கிவந்ததாகவும், அதையே சான்ஸாக வைத்து, ‘துணை முதல்வர் பதவியுடன் அதிக பணப்புழக்கம் உள்ள இரண்டு துறைகளை தமக்கு ஒதுக்க வேண்டும்’ என அவர் கேட்க, அதற்கு உடனே காங்கிரஸ் தலைமை மட்டுமல்லாது, சித்தராமையாவும் தலை அசைத்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன் ’டீல்’ முடிந்துவிட்டது என நினைத்த அந்த தரப்புக்கு, அடுத்த குண்டை வீசியுள்ளார், சிவக்குமார். அதாவது, ‘சித்தராமையா ஆதரவாளர்கள் அளவுக்கு, தம்முடைய ஆதரவாளர்களுக்கும் அமைச்சர்கள் பட்டியலில் இடம் அளிக்க வேண்டும்’ என அவர் அடுத்த கோரிக்கையை வைக்க, அது அவர்களுக்கு கொஞ்சம் புளியைக் கரைத்துள்ளது.
இருந்தாலும் ’டிலே’ செய்யாமல் அதற்கும் தலையசைத்து இருதரப்புக்கும் இடையே நீடித்த முதல்வர் பஞ்சாயத்தை சுபத்துடன் முடித்து வைத்ததாம் காங்கிரஸ் தலைமை. இதையடுத்தே டி.கே.சிவக்குமாருக்கு கர்நாடக அமைச்சரவையில் பணம் கொட்டும் துறைகளான மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனத் துறைகள் வழங்கப்பட இருக்கிறதாம். அதுமட்டுமின்றி, அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் பணப்புழக்கம் அதிகமுள்ள துறைகளே வழங்கப்பட இருக்கிறதாம்.
இதனால்தான் டி.கே.சிவக்குமார் இந்த டீலுக்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதன்மூலம் முதல்வர் பதவியைவிட, முக்கியமான துறைகளைக் கைப்பற்றி இருப்பதால் இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறாராம் டி.கே.சிவக்குமார்” என்கின்றன, டெல்லி வட்டாரங்கள்.
கர்நாடக முதல்வர் மோதல் முடிவுக்கு வந்ததையடுத்து சித்தராமையா மீண்டும் முதல்வராக இருக்கிறார். துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்க உள்ளார். இவர்களுடைய பதவியேற்பு விழா வரும் 20ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற இருக்கிறது.
இப்பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் குறித்த அறிவிப்பை, காங்கிரஸ் இன்று முறையாக அறிவித்ததைத் தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.